ஆன்மா - ஆடம் ஜகாயெவ்ஸ்கி

Artist: Hilma af Klint

நாங்கள் அறிவோம் உனது பெயரைப் பயன்படுத்த

எங்களுக்கு அனுமதி இல்லை என்று.

சொல்லவொண்ணாததாகவும்

பொலிவிழந்ததாகவும் பலவீனமாகவும் 

கூடவே மர்மமான குற்றங்களுக்காகச் சந்தேகிக்கப்படும்

ஒரு குழந்தையைப் போலவும்

நீ இருக்கிறாய் என்பதையும் அறிவோம்.

சங்கீதத்திலோ அஸ்தமனப் பொழுதுகளில் மரங்களிலோ 

நீ இப்போது வாழ அனுமதிக்கப்படுவதில்லை என்பதும்

எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் அறிவோம் அல்லது குறைந்தபட்சம்

எங்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது—

நீ எங்குமே இல்லை என்று.

ஆயினும் இன்னும் உனது சோர்வான குரலைக்

கேட்டுக் கொண்டே இருக்கிறோம்—

எதிரொலியிலும் புகாரிலும்

கிரேக்க பாலைவனத்தில் உள்ள அன்டிகனியிடமிருந்து

நாங்கள் பெறும் கடிதங்களிலும்.

*

அன்டிகனி (Antigone)- கிரேக்க புராணீகத்தில் இடிபஸ் மன்னனின் மகள். சோஃபகிளீசின் அவல நாடகத்தில் வரக்கூடிய ஒரு பெண் கதாபாத்திரம். நாடகத்தில், மதச் சட்டங்கள் மீறப்படக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு தனது சகோதரனின் உடலை அரசக் கட்டளையையும் மீறி அடக்கம் செய்கிறாள் அன்டிகனி. அதற்குத் தண்டனையாகக் குகையில் அடைக்கப்பட்டுப் பிறகு விடுதலை செய்தி வந்துசேர்வதற்கு முன்பாகவே அங்கேயே அவலமாகத் தன்னை மாய்த்துக்கொள்கிறாள். விதியின் பிரதிநிதியாக அவளுடைய மரணம், அரச குடும்பத்தில் அடுத்தடுத்த மரணங்களுக்குக் காரணமாக அமைகிறது.

Comments