பிரார்த்தனை- மேரி ஹோவ்
St Augustine in prayer by Jusepe de Ribera |
ஒவ்வொரு நாளும் உன்னிடம் பேச விரும்புகிறேன்.
ஆனால் ஒவ்வொரு நாளும்
இன்னும் முக்கியமானவொன்று
என் கவனத்தைக் கவருகின்றது—மருந்தகம், அழகு சாதனப் பொருட்கள்,
பயணத்திற்காக வாங்கவேண்டியவைகள்.
விழுந்துகிடக்கும் காகித குவியல்களுக்கும்
உடைகளுக்கும் மத்தியில்
இப்போது இங்குச் சிரமப்பட்டு அமர்ந்திருக்கும்போதுகூட
வெளியே ஏலவே அலறிக்கொண்டும்
இரைச்சலிட்டபடியும் இருக்கின்றன குப்பை லாரிகள்.
மறைஞானிகள் சொல்கிறார்கள் எனது சுவாசம் போல
அருகிலிருக்கிறாய் என்று.
நான் ஏன் உன்னிடமிருந்து தப்பியோடுகிறேன்?
எனது இரவும் பகலும் பராதிகள் போல
என் ஊடே பெருக்கெடுத்து,
நான் சொல்ல மறந்த கதையாகின்றது.
எனக்கு உதவு. இவ் வார்த்தைகளை எழுதும்போதுகூட திட்டமிடுகிறேனே
இந்த வாக்கியத்தை முடித்தவுடன்
நாற்காலியிலிருந்து
எழுந்திருக்க வேண்டும் என்று.
Comments
Post a Comment