மார்க் ஸ்ட்ராண்ட் கவிதைகள்

Artist: Felix Vallotton


1.பைசாசக் கப்பல்


நெரிசலான வீதியினூடே

அது மிதக்கிறது,

அனுமானிக்கயியலாத அதன் கொள்ளளவோ காற்றைப் போல.

அது நழுவுகிறது

சேரிகளின் சோகத்திலிருந்து

புறநகர் நிலங்களுக்கு.

இப்போது,

எருதுகளைக் கடந்து,

காற்றாலையைக் கடந்து,

மெதுவாக அது நகர்கிறது.

ஒருவராலும் கேட்க இயலாதபடிக்கு,

இரவினூடே செல்கிறது சாவின் கனவு போல.

நட்சத்திரங்களுக்குக் கீழ்

அது திருடுகிறது.

அதன் பயணிகளும் பணியாளர்களும்

வெறித்துப் பார்க்கிறார்கள்;

எலும்பைவிட வெண்மையான

அவர்களது விழிகளோ

அசையவோ மூடவோ இல்லை.

*


2.எஞ்சியுள்ளவை


மற்றவர்களின் பெயர்களினின்று என்னைக் காலிசெய்கிறேன்.

எனது பாக்கெட்டிலிருப்பவற்றையும் காலிசெய்கிறேன்.

எனது காலணியைக் கழற்றிச் சாலையோரம் விட்டுச்செல்கிறேன்.

ராத்திரியில் கடிகாரங்களைத் திருப்பிவைக்கிறேன்;

குடும்ப ஆல்பத்தைத் திறந்து என்னை ஒரு சிறுவனாகப் பார்க்கிறேன்.

அதனால் என்ன பயன்? நேரம் தன் வேலையைச் செய்துவிட்டதே.

எனது பெயரை உச்சரிக்கிறேன். போய்வா என்கிறேன்.

காற்றடிக்கும் திசையினில் வார்த்தைகள் ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.

நான் என் மனைவியை நேசிக்கிறேன் ஆயினும் அவளைத் திருப்பி அனுப்புகிறேன்.

மேகங்களின் வெண்ணிற அறையினுள் அரியணையிலிருந்து எழுகிறார்கள் எனது பெற்றோர்கள்.

நான் எப்படிப் பாட இயலும்?

காலம் சொல்கிறது நான் யாரென்று. நான் மாறுகிறேன், அப்படியே இருக்கிறேன்.

எனது வாழ்க்கையினின்று என்னைக் காலிசெய்கிறேன், எனது வாழ்க்கை எஞ்சியுள்ளது.

*


3.பாதுகாவலன்


கதிரவன் அணைகிறது. புல்வெளிகள் தீப்பிடித்து எரிகின்றன.

இழந்த நாள், இழந்த வெளிச்சம்.

நான் ஏன் தேயும் விஷயங்களை நேசிக்கிறேன்?

விடைபெற்றவர்களே, விடைபெற்றுக்கொண்டிருந்தவர்களே,

எந்த இருண்ட அறைகளில் நீங்கள் வசிக்கிறீர்கள்?

எனது மரணத்தின் பாதுகாவலனே

எனது இன்மையைப் பத்திரப்படுத்திவை. நான் உயிரோடு இருக்கிறேன்.

*


4.வெளிச்சத்தின் வருகை


இவ்வளவு தாமதத்திலும் கூட அது நிகழ்கிறது:

அன்பின் வருகை, வெளிச்சத்தின் வருகை.

நீங்கள் விழிக்கிறீர்கள்,

தன்னைத்தானே பற்றவைத்துக்கொண்டது போல மெழுகுவர்த்திகள் எரிகின்றன,

நட்சத்திரங்கள் திரள்கின்றன,

கனவுகள் கொட்டுகின்றன உங்களது தலையணையில்,

காற்றின் வெதுவெதுப்பான பூங்கொத்துகள் அனுப்பிவைக்கப்படுகின்றன,

இவ்வளவு தாமதத்திலும்

உடலில் எலும்புகள் பளபளக்கின்றன,

நாளைய தூசி சுவாசத்தில் மின்னுகிறது.

*


5. ஒரு வழக்கத்திற்கு மாறான கடிதத்தின் மர்மமான வருகை


நாள் முழுக்க வேலை பிறகு எனது சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பை நோக்கி நீண்டதொரு பயணம். அங்குச் சென்றதும் விளக்கை ஒளிரவிட்டேன், மேசையில் எனது பெயருடன் ஒரு உறையிடப்பட்ட கடிதம் இருந்தது. கடிகாரம் எங்கே? காலண்டர் எங்கே? கையெழுத்து என் தந்தையுடையது, ஆனால் அவர் இறந்துதான் நாற்பது வருடங்கள் ஆகிறதே.  ஒருவேளை அவர் உயிருடன் இருக்கிறாரோ, அருகே எங்கேயாவது ஒரு ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். வேறு எப்படி இந்தக் கடித உறையை விளங்கிக்கொள்வது? என்னை நிதானப்படுத்திக்கொள்ளும்பொருட்டு நான் உட்கார்ந்துகொண்டேன். பின்பு, அந்தக் கடித உறையைப் பிரித்து, கடிதத்தை வெளியே எடுத்தேன். “அன்புள்ள மகனுக்கு” என்று அது ஆரம்பித்தது. “அன்புள்ள மகனுக்கு” அப்புறம் வேறு ஏதுமில்லை.


*

மார்க் ஸ்ட்ராண்ட் (1934-2014)


அமெரிக்காவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர். ஓவியம் பயின்றவர்.  ஸ்ட்ராண்டின் கவிதைகளை மானுட வாழ்க்கையின் புகைமூட்டமான பக்கங்களின் மீது ஆர்வம் கொள்பவை என்று சொல்லலாம். இன்மை, கைவிடப்படல், இழப்பு, நமது சுயத்தால்  அள்ள முடியாத விஷயங்கள், வாழ்க்கையில் மறைந்திருக்கும் மரணத்தின் நடமாட்டம் போன்ற விஷயங்களே அவருடைய பிரதானப் பாடுபொருட்கள்.  Sleeping with One Eye Open, Reasons for Moving, Late Hour, Almost Invisible எனப் பத்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களான ரஃபேல் ஆல்பர்டி (Rafael alberti), கார்லோஸ் டிரம்மண்ட் டி ஆண்ட்ரேட் (Carlos Drummond de Andrade) போன்றவர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ளார். எட்வர்டு ஹாப்பரின் ஓவியங்களைக் குறித்து உரைநடை நூலொன்றையும் எழுதியிருக்கிறார்.

*

நன்றி: கனலி-25

Comments