ஆகஸ்ட் இரவுகளுக்கு

Artist: Johan Christian Dahl

புகைப்போக்கிகளில் எப்போதும் புகை

புத்தகங்களில் குறிப்பிட்ட நூற்றாண்டுவரை

சூரியனைச் சுற்றாத புகழுடைத்த பூமியில் 

ஏதிலியில்லை எதுவும்

ஆனால் யாவும் தனித்தனியே 

இப்படியாக ஒரு சமன்பாடு


ஆயினும் எவ்விதமோ வந்துவிடுகிறேன் என்னிடம் நானே

மன்னிப்பு கேட்பதற்கு நிகரான கணங்களுக்குள். 

அங்குள்ளன 

இழுத்துச் சார்த்தப்பட்ட ராத்திரிகள்— 

கரையில் வாசல்களைப் பதுக்கி அடுத்தடுத்து 

விழித்திருக்கும் சிறு சாளரங்கள்.

ஒவ்வொன்றுக்கும் வெளியே

எதையோ உள்வாங்கிக்கொள்வதற்காக

ஓர் ஆண்டெனா போலக் காத்திருக்கும் மலர்மொட்டுகள்

அவற்றின் வேர் உள்ளன மின்னற்கொழுந்துகள் ஆர்வம்காட்டாத ஆழத்தில்.


ஈற்றில் தென்படுவது ஆகாசத்தின் 

சிக்கலான சில மின்மினிச்சொற்தொடர்கள்..

அர்த்தம் எங்கோ இருக்கிறது

எப்போதும்

இங்கு ஒருவர் ரொம்ப தூரம் சென்றாகவேண்டியிருக்கிறது: 

நட்சத்திரங்களை விட நிழல்கள் அழகானவை என்றுணர

சிலசமயங்களில் வெறுமனே திரும்பிப் பார்ப்பதற்காகவும்

இன்னமும் தழும்புகள் நெடுங்காலம் 

எடுத்துக்கொள்கின்றன ஆற்றலாக மாறுவதற்கு

இன்னமும் இருக்கின்றன வெளிச்சம்படாத இடங்கள்..

ஆனால் குட்டிச்செடிகளுக்கோ எதுவும் பொருட்டில்லை

யார் நீரூற்றினாலும்

வளர்ந்துவிடுகின்றன

*


Comments