ரெம்பிரான்ட்டின் சுய உருவப்படம், 1669

The Artist in his Studio by Rembrandt

நிழலும் வெளிச்சமும் மல்லுக்கட்டும் வரலாற்றின் கலைக்கூடம்.

வதனம் காட்டும் கண்ணாடி சமேதமாக 

ஓவியக் கித்தானுக்கு வெளியே கிழட்டு ரெம்பிரான்ட். 

ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன: நிறங்களின் மொழியிலேயே சிருஷ்டிக்கப்பட்ட

சுயசரிதையின் சிச்சில பக்கங்கள்.

அவற்றுக்கப்பால் கடற்கரையோரங்களில் கப்பற்சேதாரங்கள்.

கண்காட்சி ஏலவே முடிந்துவிட்டது மறுபக்கத்தில்.

விரல்களிடையே ஒரு  தூரிகை — அது முகப் பாவனையினது அனந்தத்தை 

வண்ணங்களில் கக்கும் டிராகன்.

தூய வெறிச்சிடல் ஆதலால் மத்தியானம், சாயங்காலம் என ஏதுமில்லை

ஏதுமில்லையாதலால் பருவநிலைகளில்லை

ஏன் அவ்விடத்திலே மனித குமாரனேயில்லை

ஒரு நீ…..ண்ட பார்வை. தன்னைத்தானே அறிவதன் முடிவிலாத புனித ஏக்கம்.

எதிர்பார்த்து நிற்பது ஓவியக் கித்தான் மட்டுமல்ல 

பட்டவர்த்தனமாவதற்காக வரிசையிலிருக்கும் லட்சோபலட்ச ரகசியங்களில் ஒரு ரகசியம்,

அமரத்துவத்தின் பாராட்டுப்பத்திரம்,

அப்புறம் காணும்தோறும் இன்னொன்றாகும் வதனம் போன்ற ஒரு வதனம்.

தூரிகையிலிருந்தா கேட்கிறது அது? 

ஹேய் ரெம்பிரான்ட்...

அவர் கவனிக்கிறார் முகங்காட்டும் கண்ணாடியை. 

உற்றுப் பார்க்கிறார்கள்: மரித்தவர்கள் 

பிறகு எதிர்காலத்தவர்கள். 

*

நன்றி: கல்குதிரை


Comments

  1. கவிதை அருமை! இணையத்தில் ஓவியர் ரெம்ப்ராண்ட் பற்றித் தேடிப் படித்தேன். இன்றைய பொழுது பயனுள்ளதாக அமைந்தது. உண்மைதான். ஓர் ஓவியம் (எந்தவொரு கலைப்படைப்பும்தான்) உருவாகும் தருணத்தில் என்னவென்னவோ நடந்து விடுகிறது!

    ReplyDelete

Post a Comment