யான் காப்லின்ஸ்கி கவிதைகள்

 


1.நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம்..

 

நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

ஏற்கனவே மாலை மருண்டுவிட்டிருந்தது.

மேற்கு வானில் ஓர் இளைய நிலா

அதன் அருகில் ஒரு நட்சத்திரம்.

நான் என் மகனுக்கு அவற்றைக் காண்பித்து

நிலவை எப்படி வரவேற்பது என்றும்

அந்த நட்சத்திரத்தை நிலவின் வேலையாள் என்றும்

விவரித்துச்சொன்னேன்.

வீட்டை நெருங்குகையில் அவன் சொன்னான்

நாம் சென்று வந்த இடத்தின் தொலைவைப் போலவே

நிலாவும் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது என்று.

நான் அவனிடம்

நிலவு இன்னும் தூரத்தில் உள்ளது என்றும்

நாம் தினமும் பத்து மைல் நடந்தாலும்

நிலவை அடைய நூற்றாண்டுகள் ஆகும் என்றும் சொன்னேன்.

ஆனால் அவனுக்கு இது பிடிக்கவில்லை.

பாதை முழுவதுமாக உலர்ந்து காணப்பட்டது.

சதுப்புநிலங்களில் விரிந்து கிடந்தது நதி:

வாத்துகளும் நீர்ப்பறவைகளும்

இரவின் துவக்கத்தைச் சப்தமெழுப்பி அறிவித்தன.

காலடியில் உடைந்தன பனித்துகள்கள்--

மறுபடியும் குளிர் கூடத் துவங்கியிருக்க வேண்டும்.

எல்லா வீட்டு ஜன்னல்களும் இருண்டிருந்தன.

எங்கள் வீட்டுச் சமையலறையிலிருந்து மாத்திரம்

ஒரு ஒளி தெரிந்தது.

எங்களது புகைபோக்கிக்குப் பக்கத்தில் ஒளிரும் நிலவு

நிலவின் அருகே ஒற்றை நட்சத்திரம்.

**

 

2. நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில்

 

நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில்.

நீங்கள் தோட்டத்திற்குள் சென்றவுடன்

உங்களை முற்றுகையிடுகின்றன ரீங்கரிக்கும் வண்டுகளின் திரளொன்று.

பறவைகளுக்காக நீங்கள் அமைத்த பெட்டிகளில் குண்டுத்தேனீக்கள் கூடு கட்டுகின்றன,

காட்டுச்செடிகளின் புதர்களில் தங்களது கூடுகளை அமைக்கின்றன குளவிகள்.

மேலும் மாடி அறையில் மேசையின் முன் அமர்கையில்

நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள் ஒரு ரீங்காரத்தை,

மேலும் உங்களுக்குத் தெரியாது

அந்தச் சப்தம் 

குண்டுத்தேனீக்களுடையதா, குளவிகளினுடையதா,

மின்சாரக் கம்பிகளினுடையதா,

வானத்தில் செல்லும் விமானத்தினுடையதா, சாலையில் போகும் காரினுடையதா,

இல்லை உள்ளிருந்தோ உங்கள் உள்-சுயத்திலிருந்தோ

உங்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பும்

வாழ்க்கையின் குரலா என்று.

**

 

3. வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்

 

வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்: ஒன்றை நான் நிரப்புகிறேன்,

இன்னொன்று தன்னைத்தானே நிரப்பிக்கொள்கிறது.

இரண்டுக்கும் அவ்வளவு ஒற்றுமையுண்டு. அவையிரண்டின்

முன்பும் நான் கூச்சப்படுகிறேன், திகைத்துப் போகிறேன்.

உயர்ந்த வாசலுடைய

இருண்ட கொட்டகையினுள்ளிருக்கும்

ஆட்டினைப் போன்றது கவிதை.

அதை நெருங்கும்போதெல்லாம் நிலைகுலைந்து போகிறேன்.

பார்வை வெளியே இருக்கிறது.

இங்கே உன் கைகளின் உதவியினால் மட்டுமே நகர இயலும்.

வெள்ளைக் காகிதம். வெள்ளைக் கம்பளி.

இருட்டில் இரண்டும்

அவ்வளவு எளிதில் மறைந்துவிடுவதில்லை.

காலம் கண்ணுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் இருப்பது,

வெளியே பகல்வெளிச்சம் பரந்திருக்க,

நீங்கள் உங்கள் பார்க்கும் திறனை இழந்துவிடுவதைப் போல.

காலம்— ஒரு வெண்ணிற ஈரத்துண்டு.

கவிதை நீங்கள் அதைப் பிழியும்போது

சொட்டுச்சொட்டாக ஒழுகுவது.

ஒரு ஈரத்துண்டு உலர்ந்து கொண்டிருக்கிறது

இருண்ட கழிவறையின் வெதுவெதுப்பான குழாயின் மீது .

**

 

4. இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது

 

இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது,

ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது.

நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன.

நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த

ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன்.

தனது பிரச்சனைகளை என்னிடம் சொல்ல விரும்பிய நண்பருடன்

நான் ஆற்றின் அருகே அமர்ந்திருந்தேன்.

தண்ணீர் நிறைய ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு சிறுவர்கள்

கரையிலிருந்து கூழாங்கற்களை ஆற்றில் வீசிக்கொண்டிருந்தனர்.

அவருக்குப் பகிர்வதற்கு என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை...

மேலும் நதிக்கரையில் பெஞ்சுகளும் இல்லை—

அநேகமாக இரவுநேர போக்கிரிகள்

அவற்றை மறுபடியும் தண்ணீரில் எறிந்திருக்கலாம்.

சூரியன் ஒரு மேகத்தின் பின்னால் மறைந்தான்.

நாங்கள் உறைந்து கொண்டிருந்தோம்.

பின் நாங்கள் எழுந்து மீண்டும் ஊருக்குச் சென்றோம்.

ஒருவேளை அவர் தன் பாதையைக் கண்டுபிடித்திருக்கக்கூடும்.

ஓட்ஸிற்காகவும் ரொட்டிக்காகவும் கடையொன்றில் நான் நின்றேன்.

இது ஜூன் மாதம்.

வீட்டிற்குச் செல்லும்போது பார்த்தேன்

மூன்று இளம் போராளிகள் தங்களது

ரூபிக் கனசதுரத்தை திருகிக்கொண்டிருந்தார்கள்.

**

 

யான் காப்லின்ஸ்கி ( 1941- 2021)

எஸ்டோனியாவின் டார்த்து பகுதியில் பிறந்தவர். அவருடைய தாயார் எஸ்டோனியாவை சேர்ந்தவர். தந்தை போலாந்து நாட்டுக்காரர். அடிப்படையில் காப்லின்ஸ்கியின் ஆளுமை பலகுரல் தன்மை கொண்டது. கவிஞர், தத்துவவாதி , சூழலியலாளர், மஹாயான புத்தத்தின் மாணவர், கலாச்சார விமர்சகர். காப்லின்ஸ்கியின் கவிதைகள் சலிப்பின்றி மையம் கொள்வது இயற்கையிலும் இயற்கையில் சுயம் அடையும் இடம் குறித்த தியானத்திலுமே. தாவோ தே ஜிங்யையும் சீன செவ்வியல் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். The Wandering Border, Evening brings everything back போன்ற கவிதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.


--

நன்றி: திணைகள் இணைய இதழ்-01

Comments

Post a Comment