ஹென்ரிக் நோர்ட்பிரான்ட் கவிதைகள்
Artist: Giorgio Morandi |
1.பொய்கள்
என்னால்
எரிக்கப்பட்ட கடிதத்தில்
உன்னைப்
பற்றியே எப்போதும்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
என்று எழுதியிருந்தது பொய்தான்.
ஆயினும் நான்
நிறையவே உன்னைப் பற்றி நினைக்கிறேன்.
என்னால் தூங்க
முடியவில்லை என்பதும் பொய்தான்.
நான்
பிரமாதமாக உறங்குகிறேன்,
ஏன் மற்ற
பெண்களைப் பற்றிக் கூடக் கனவு காண்கிறேன்.
ஆனால்
விழித்தவுடன், உடனடியாக உன்னைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடுகிறேன்.
தெருக்களில்
அழகான பெண்களைப் பார்க்கிறேன்,
உன்னைக்
குறித்து எண்ணாமலிருக்கும் சமயங்களில்
அவர்களது
ஆடைகளைக் கழற்றுகிறேன் எனது கண்களால்.
பிறகு எனக்கு
மயக்கம் வரும்வரைக்கும் அவர்களின் நறுமணத்தை உள்ளிழுக்கிறேன்.
ஆனால்
உன்னுடனான ஒவ்வொரு ஒப்பிட்டுப் பார்த்தலும்,
உனக்குச்
சாதகமாகவும்
எனக்குத்
தனிமையாகவும் மாறிவிடுகிறது.
*
2. சமிக்ஞை
நான் எனது தாய்நாட்டை விற்பேன்
அதன் மிக
அழகான ரோஜாவுக்காக.
மேலும்
மிச்சமிருக்கும் ஆயுளுக்கு அகதியாயப் போவேன்
ஒருவேளை
என்னால் மட்டும்
உனது கரத்தினில் அந்த ரோஜாவை
அதுவும் இது
போன்ற ஒரு வசந்த கால இரவினில்
உனது
விழிகளால் ஏறெடுத்துப் பார்க்காமலிருப்பதற்காகச்
சிரம்
கவிழ்ந்து அதன் இதழ்களை
ஒவ்வொன்றாகப் பிடுங்குகையில் பார்க்க முடிந்தால்.
*
3. தாலாட்டு
யுத்தத்தின்
குழந்தையே, நீ எங்கே போகிறாய்?
கிழக்கா
அல்லது மேற்கா?
உலகிலே
எவ்விடத்தில் ஒரு நண்பரைக் காண்பாயென்று நீ நினைக்கிறாய்?
யுத்தத்தின்
குழந்தையே, உனக்கு எது மிகப் பொருத்தம்?
கந்தலான
போர்வையா?
ஒட்டுப்பலகையாலான
சவப்பெட்டியா?
உயிர்காக்கும்
மிதவை ஆடையா?
யுத்தத்தின்
குழந்தையே, நீ எவ்விடத்தில் மரிப்பாய்?
வெடிகுண்டுகள்
விழும் இடத்திலா அல்லது சமுத்திரத்திலா?
யுத்தத்தின்
குழந்தையே, நீ எங்குச் செல்ல விரும்புகிறாய்?
நீ
தேர்ந்தெடுத்தாய்.
நாங்கள் உன்னை ஒருபோதும் பார்க்க வேண்டியிராத இடமா?
*
4. சொர்க்கத்தின் தோட்டம்
பல வருடங்களாக நான் நம்ப மறுத்தேன்
"திருப்புளி",
"பேய்","நலச்சலுகைகள்", "சொர்க்கத்தின் தோட்டம்"
போன்ற
மொழிக்கு வெளியேயிருக்கும்
கருத்துக்களை.
பதினேழு வயதில் திருப்புளியின்
பயன்பாடு குறித்து எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருபத்தியிரண்டு வயதில் எனது
முதல் பேயைப் பார்த்தேன்.
மேலும் இப்போது எனக்கு நலச்சலுகைகள்
கூட இருக்கின்றன.
அதனால்தான் இதை எழுதியிருக்கிறேன்
"சொர்க்கத்தின் தோட்டம்" என்ற தலைப்பில்.
*
5. நுழைவாயிலில்
1
கனவில்
உனது கல்லறை வாசலில்
நீ என்னைத்
தடுத்து நிறுத்திவிட்டாய்
உனக்கு முன்பே நான் இறந்த போனதாய் வந்த
கனவொன்றில்
நான் பேசிய அதே வார்த்தைகளால்.
ஆகையால் இனி என்னால் கனவு காண இயலாது.
4
ஒவ்வொரு பயணத்திலும் நீ என்னைவிட
முன்னே இருக்கிறாய்.
நடைமேடைகளின் புதுப்பனியில் உனது
காலடிச் சுவடுகளைக் காண்கிறேன்.
ரயில் நகர ஆரம்பிக்கையில் நீ
கடைசிப்பெட்டியிலிருந்து குதிக்கிறாய்
என்னைவிடச் சீக்கிரமாக
அடுத்த நிலையத்தை அடைவதற்காக.
*
6. தலை
துண்டிக்கப்படுவது குறித்த கனவு
கொல்லப்படுவதற்கான
வரிசையில் காத்திருக்கிறோம் என்று
என்னைப்
போலவே மிகத் தாமதமாக உணர்ந்த
ஒரு
பெரிய குழுவுடன் நான் நின்றேன்.
மனநிலை
நன்றாகவே இருந்தது கொல்லப்படும்வரைக்கும்.
கதைகளையும்
நகைச்சுவைகளையும் சொல்லிக்கொண்டோம்,
சிகரெட்டுகளும்
பாட்டில்களும் பரிமாறப்பட்டன,
மேலும்
பருவநிலையும் பிரமாதமாக இருந்தது,
வெம்மையாகவுமில்லை
மிகுந்த குளிராகவுமில்லை.
மரணதண்டனையை
நிறைவேற்றுபவனை நெருங்கியதும் கவனித்தேன்:
அவன்
பயன்படுத்தும் சாதனத்தை நான்தான் கண்டுபிடித்தேன் என்று.
அவன்
இன்னும் ஒரு நிமிடம்விட்டிருந்தால்
காப்புரிமை
எண்ணைக்கூட அறிந்திருப்பேன்.
ஆனால்
அது எதையும் மாற்றப்போவதில்லை.
அவன்
என் தலையைத் துண்டித்தான், அந்நேரத்திலும்
நான்
அங்கேயே நின்று
வரிசையில்
எனக்குப் பின்னிருந்தவர்களின்
தலையும்
துண்டிக்கப்படுவதைப் பார்த்தேன்—
மறுமையில்
எனது முதல் வார்த்தைகளாக இருந்தவற்றையே
புதிதாகத்
தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் கூச்சலிட்டனர்:
“நான்
எப்படி இவ்வளவு முட்டாளாக இருந்திருக்க முடியும்!
நான்
எப்படி இவ்வளவு முட்டாளாக இருந்திருக்க முடியும்!”
இப்படித்தான், இராப்பாடிகளுக்குச் சன்னல் திறந்திருக்க,
இரவு-மேஜை
மீது மெழுகுவர்த்தி எரிய, கனவொன்றில்
நான் அடைந்தேன்
நமது உண்மை நிலைமையைக்
குறித்த
தெளிவான
அறிதலை.
*
ஹென்ரிக் நோர்ட்பிரான்ட் (1945- )
டென்மார்க்கைச் சேர்ந்த கவிஞர். நிலக்காட்சிகள், பருவங்கள், மானுட நிலைமை குறித்த மெல்லிய பகடி கலந்த சித்திரங்கள், பயணங்கள், காதலின் கசப்பும் இனிப்பும் போன்ற பாடுபொருட்களை மையமாகக் கொண்டு விரிபவை நோர்ட்பிரான்ட்டின் கவியுலகம். இவரது கவிதைகளில் யூனுஸ் எம்ரே, உமர் கய்யாம், கான்ஸ்டன்டைன் கவாஃபி, நஸிம் ஹிக்மத், போன்றவர்களின் பாதிப்பை காண இயலும். கனவுப்பாலம் (Dream Bridges, 1998) தொகுதிக்காக நார்டிக் கவுன்சிலின் இலக்கியப் பரிசைப் பெற்றவர். இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கவிதைகள் When we Leave Each other: selected poem நூலில் இருந்தும் ஸ்காண்டிநேவிய கவிதைகளை பிரத்யேகமாக தொடர்ந்து மொழிபெயர்த்து வருபவரான John Ironsன் மொழிபெயர்ப்புகளிலிருந்தும் தேர்தெடுக்கப்பட்டவை.
*
நன்றி: தமிழ்வெளி இதழ்- ஏப்ரல் 2022
Comments
Post a Comment