கறுப்பு ஓவியங்களுடன் ஒரு சுய சித்திரம்
Artist: Lan-Chiann Wu |
இந்த நவம்பர்தான் மருந்துகளை அடுக்கிவைக்கும் இடத்தில்
செத்துக்கிடக்கும் சின்னஞ்சிறு
பூச்சியைக் எனக்குக் காண்பித்தது
மேலும் இதே நவம்பர்தான் மறைந்திருப்பவற்றுக்கு
அருகில் என்னைக் கொண்டு வந்தது
அவ்வளவு கிட்டத்தில்
இருந்ததால் சிராய்ப்புகளுக்கு அஞ்சி
பெரும்பாலும்
இசை கேட்பதில் பொழுதுகளைச் செலவிட்டேன்
மறுபடியும் எனக்கு நம்பிக்கை வந்தது
ஆம், பிசாசுகளும் இசையினுள் வசிக்கின்றன என்று.
ஆழத்தில், கைரேகையைக்கூடச் சுழற்பாதையென மாற்றும்
வெறுப்பை உணர்கையில்
ஒருவர் பதுங்குமிடங்களைப் புனைந்தாக
வேண்டும்—
தன்னிலிருந்து ஒளிந்து கொள்வதற்காகவேனும்.
இல்லையெனின் இவ்விதம்தான்
தனது சொந்த மண்டைக்குள் நிறுவ நேரிடும்
சித்திரவதைக்கூடங்களை, விந்துநெடியடிக்கும் படுக்கையறைகளை..
ஏதோவொன்றை எதிர்த்தபடி திடீர் திடீரென
விழிவிரிய நடந்தேன்
(கனவிலும்கூட நடந்தேன்)
பசுமையை மினுக்கி மினுக்கிக்காட்டும்
இப்புல்வெளி
அப்படியே விழுங்கியிருக்கக்கூடும் ஒருவனை.
நதியின் ஓட்டத்தில் சதித்திட்டங்களின்
சாயைகள்.
காற்று பலத்து வீசுகையில் செவிகளில்
காலத்தின் ஊளை.
எண்ணங்கள். நினைவழுத்த தாழ்வுமண்டலங்கள். இருண்ட எண்ணங்கள்.
பற்கடிப்புடன் வெறித்துப்பார்த்தேன்
மரங்களின் பேரரசை
வலசைப் பறவைகளை
மலர்களை.
பிறிதொரு சமயத்தில் குட்டி விலங்குகளின்
விழிகளில்
கரிய புகையில்
எனது நிழலில் என வழிநெடுகிலும் உன்னையே
கண்டேன்—
அழகிற்கும் பயங்கரத்திற்கும் ஒரே எடை
என்பதற்கான அத்தாட்சி.
ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை
எதற்கெதற்கோ பொறுப்பேற்றுக் குற்றவுணர்ச்சி கொண்டேன்.
மழைப்பொழுதுகளில் கைவசமிருந்த தன்வரலாற்று நூல்களினூடே
உலவும்போது எவ்வளவு கழிவிரக்கம் முடிவேயில்லாதது போல்.
ஒவ்வொரு மழைத்துளியையும் விழுதாக்கி
அவ்விழுதுகளை நூந்நூறு
மந்திக்கூட்டங்களெனப்
பற்றித் தாவித் தாவி எதையோ
சூறையாடச் சென்றேன் காரணமேயிலாது.
சாயங்காலங்களில் அண்ணாந்து
அண்ணாந்து பார்த்தேன்,
பழக்கத்தின் கொத்தடிமையாக.
பிறகு முகில் தீற்றல்களைப்
புகைப்படமெடுத்து
வெறித்தேன் அது ஏதோ கிணறு என்பது
போல.
அப்புறம் அவநம்பிக்கையின்
வெளிச்சத்தில் என்னை நோக்கினேன்:
உள்ளே உறங்கயியலாது அரற்றும்
கண்காணா காயங்கள்
ஒவ்வொன்றும் துக்கத்துக்கு ஏங்கும்
விண்ணலை ஏற்பிகள்
எங்கெங்கிருந்தோ பெறுகின்றன, எங்கெங்கோ அனுப்புகின்றன.
ஏதேதோ ரகசியப் பரிமாற்றங்கள்—
ஒன்றைக்கூட அறியவியலாது அல்லது
ஒவ்வொன்றும் வேண்டுதல் சொற்களுடன்
பாட்டிலில் வைத்து ஆழியில்
வீசப்பட்ட காகிதங்கள்
அவ்வளவும் தத்தளிப்பில்..
கடைவீதியினுள் நுழைகிறேன்
நியான் விளக்குகள் வரவேற்கின்றன என்னை
இங்கு எல்லாவற்றைக் குறித்தும்
குறை கூறலாம் அல்லது எதைப் பற்றியும்
கூறயியலாது.
அவ்வளவு உள்ளது அடக்கிவைக்கப்பட்ட வெறுப்பு.
பார்த்து போடா நாயே... எதை எடுத்தாலும் இருபது ரூபாய்..
அதாவது வசைச்சொற்களின் திருவிழா
நான் திட்டுகிறேன் வேறொன்றை.
அவ்வளவு பேரும் வேகத்தில்.
ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள்
இன்னும் சற்று நேரத்தில் உலகம் அழியப் போகிறது என்று.
சாலைக்குழிகளில் சேற்று நீர்,
நின்று முகம் பார்க்கிறேன்.
பிறகு உறக்கமற்ற ஒரு நள்ளிரவு.
கணினித்திரையின் முன்னிருக்கிறேன்.
இணைய உலாவியின் ஒரு கீற்றில் நீலப்படம்; இன்னொன்றில் விவிலியம்.
யோபுவைப் போல நானும் சொல்கிறேன்
அழிவைப் பார்த்து நீ எனக்குத் தகப்பன்
என்று.
மறுபக்கத்திலோ இச்சையின் மெய்நிகர் நாடகங்கள்,
ஈரம் தேடும் வேர்களின் பீதிக்கனவுகள்.
எனது வெறுப்பினும் பிரம்மாண்டமான ஒன்றை
காண வேண்டி கட்டக்கடைசியில் கறுப்பு
ஓவியங்களிடம் வருகிறேன்.
இவ் ஓவியங்களை வரையத் தூண்டியது எது
யார் அறிய இயலும் திட்டவட்டமாக?
எவ்வளவோ கருதுகோள்கள் புத்தகங்களில்.
ஆயினும் அத்தனைக்கும் அப்பாலிருந்தது
அந்த ரகசியம்,
வகுப்புக்கு வெளியில் முழங்காலிட்டிருக்கும்
சிறுவனைப் போல.
கறுப்பு நிறம் மகாராஜாவாக, பேய்களோ சுதந்திரமாக.
ஓ மர்மங்களே நீங்கள் நீடூழி வாழ்வீர்களாக..
நிராசையின் பால்யகாலப் புகைப்படம், வெறுப்பின் ரோஜா,
நர மாமிசம், விகார விழிகள், தேற்றயியலாத கதாபாத்திரங்கள்,
தீவினையின் வெறிச்சிடல்கள், கறுத்தச் செம்மறியாடுகள்,
சுண்டக்காய்ச்சப்பட்ட அச்சம், சித்தக் கலக்கம்,
அதன் முந்தைய கணத்துத் தரிசனங்கள்.
இவற்றுக்கு மத்தியில் நிழலினும்
இளைத்த ஒரு நடுங்கும் நான்.
சன்னலினூடே குளிர்க்காற்று. இழுத்துச் சார்த்துகிறேன் அதை.
அறை மாத்திரமல்ல யாவும் இருளில். களைப்பில்.
கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறேன்
எதிர்பாராமையினுள்.
யாரோ நீட்டிய அபயக்கரம் போல
எனக்கான விடுதலைக் கடிதத்தை ஏந்தி வந்திருக்கும் தூதுவன் போல
ஒரு மின்மினி—
அது சின்னஞ்சிறு கலங்கரைவிளக்கம்,சிறகசைக்கும் வெம்மையிலாச் சுடர்.
அதனிடம் பயமுமில்லை வெறுப்புமில்லை
மின்னற்பொழிவுகளில் காதலில் இலங்கும்
அதே பிரகாசம்
நான் அறியேன்
காஃபி போட்டுத்தந்தால் அருந்துமா
விடியும்வரை என்னருகிலேயே அமர்ந்திருக்குமா
இந்தக்கணம் அரிது; கிட்டத்தட்ட காலத்துக்கு வெளியே.
ஒரு பிரார்த்தனை போல நான் காண்கிறேன்
தனது குட்டியூண்டு வெளிச்சத்தால்
அத்துணை ஆசையோடு
ஒவ்வொரு இடமாக ஒளிரச்செய்வதை.
பிறகு பைய எழுந்து அறையினுள்ளாகவே
நானதை பின்தொடர்கிறேன்.
நள்ளிரவு. சுவரில் காற்று அறையும் சப்தம்.
சித்தரவதைகூடத்தினுள் விளக்கு அணைக்கப்படுகிறது…
(றாம் சந்தோஷிற்கு)
*
நன்றி: வனம் இணைய இதழ்- 10
Comments
Post a Comment