பிரார்த்தனை
இறைவா
கஞ்சனாக இருக்காதே..
எமக்குச் சிந்தை நிறைய ஜொலிக்கும் எண்ணங்கள் வேண்டும்
புதுச்சட்டை போல உடுத்த அன்றாடம் ஒரு நிலக்காட்சி வேண்டும்
கானல் தோற்றங்கள் பல வேண்டும்
ஒவ்வொரு முற்றுப்புள்ளிக்கு பிறகும் நீண்ட கோடைமழை வேண்டும்.
வெளிச்சத்தில் வழிதவற வேண்டியவன்தான் நான்
எனினும் ஆவி பறக்க சூப்களை அருந்துகையில்
நிலவறை மனிதனாக உணர விடாதேயும்.
இடிப்புரட்டல்களினூடே உனது மரங்களால்
எமக்காகப் பாடல்களைப் பாடு.
ஏதேதோ உலகங்களுக்கு அப்பால் நீ வரையும்
உயிர்வண்ண ஓவியங்களுக்கு எமது கனவினுள் கண்காட்சி வை.
நதியெனப் பாயும் இடையறாத தருணங்களாய் இரு
உன்னில் நீந்துகையில், இறைவா,
உனதாழத்தினுள் இழுத்துக்கொள்.
அல்லால் இமைப்பொழுதேனும் நினது பாதத்தில்
முள் என உறையும் பேற்றினை நல்கு.
மேலும் ஒருபோதும் மறந்துவிடாதேயும்…
எமக்குத் தாரும்:
உன்னை நம்புவதற்கான காரணங்களை
உனது அருளேயின்றி மின்னும் ஒரேயொரு கணத்தை
பிறகு உன்னை…
*
Comments
Post a Comment