நீயும் அமைதி காண்பாய்
Artist: CASPAR DAVID FRIEDRICH |
எல்லா மலைகளின் உச்சியிலும் மெளனம்;
எந்த மரங்களுக்கிடையிலும் உணரவேயியலாது மென்னிளங்காற்றை.
காட்டில் பறவைகளும் மெளனமாயிருக்கின்றன.
கொஞ்சம் பொறு:
நீயும் அமைதி காண்பாய்
-கதே
அன்பிற்குள் உடைமையாக்கும் விழைவு இருக்கிறது. விடுதலைக்கு ஒரு போதைப்பொருளின் அம்சம் உண்டு. ஆனால் அமைதியில் ஏதுமில்லை. ஒரு வெட்டவெளி. தூய்மை. ஆதியில் அமைதியே இருந்திருக்கவேண்டும். கதேயின் இக்கவிதை, அத்தகைய அமைதியை, அநேகமாக ஒரு மாலைப்பொழுதின் மெளனத்தை குறுகத் தரித்த சொற்களால் சாவகாசமாகச் சுட்டுகிறது. மேலும் அமைதி என்பது மரணத்தறுவாயோ எனக் கேட்கும் தேவதேவனின் கவிதையும் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு கவிதைகளுக்குமான இடைவெளி நூற்றாண்டு நீளம் கொண்டது. ஆனால் பகிரப்படும் உண்மை சார்ந்து மிக நெருக்கமானது. ஆம். அமைதி என்பது மரணத்தறுவாயும்தான்.
நீயும் அமைதி காண்பாய் என்று இக்கவிதையில் சொல்வது யார்? யாரைப் பார்த்துச் சொல்லப்படுகிறது? எனக் கேட்டுக்கொண்ட உடனேயே இன்னும் ஆழமான அனுபவத் தளத்திற்கு இக்கவிதை சென்றுவிடுவதைப் பார்க்கிறோம். தற்கணத்தில் மாத்திரம் இலங்கும் இயற்கையின் குரலைப் போலச் செய்கிறானா மானுடன்? அல்லது மனமழிந்து இயற்கையினுள் நிற்கையில் தன்நெஞ்சுக்கு அவன் அனிச்சையாக உரைத்துக்கொண்டதா? அல்லது இயற்கை எனும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ளும் தருணத்துச் சொற்களா? அல்லது இயற்கை தன்னைத் தான் கண்டு, மானுடனை நோக்கி தன்னை சுட்டிக்காட்டுகிறதா?
ஒருவகையில் எல்லாமும்தான் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.
Comments
Post a Comment