மழை ஓய்ந்த இரவில்
காரணம் என்று எதுவுமில்லை
மண்ணைப் பார்த்தபடி தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தேன்
பெரிதாக ஆள் அரவமற்ற பகுதி
ஆதலால் விபத்துக்கோ அசம்பாவிதங்களுக்கோ வாய்ப்பில்லை
பூச்சிகள் ரீங்காரமிட்டுப் பாடின
அதோ.. காற்றுச் சொல்லச் சொல்ல
அதை அசைவாய் மொழிபெயர்க்கும்
புல்வெளிகள்
அங்கு கவனியேன்
படித்துறையில் அடுத்தடுத்து வைக்கப்பட்ட விளக்கு போலத்
தூரத்தில் ஒளிரும் மெளன வீடுகள் என
ஆசை காட்டிற்று மனது
எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?
வேறுவழியின்றி ஒருகணம் கள்ளத்தனமாக அண்ணாந்து
பார்த்து தலைதாழ்த்திவிட்டேன்
உச்சியில் மிதிவண்டியை உருட்டிக்கொண்டே வரும் முழுநிலவு
நான் நோக்கினேன் என்பதை
அறிந்துவிட்டானோ
அந்த தனிப்பாதையில் தயக்கநடையிட்டபடி
அகம் தவித்துக்கொண்டிருந்தேன்
கொப்பளிக்கும் எண்ணங்களினூடே
இருளில் வீடு திரும்பும்
கூச்ச சுபாவத்து யுவதியாய் என்னை உணர்ந்து.
*
அருமை
ReplyDelete🙏
Delete