பாதை
ஒருவர் நடந்து கொண்டிருக்கிறார்
கல் தடுக்குகிறது
சுதாரித்துக்கொள்கிறார்
பிறகு ஒரு கையால் நெஞ்சைப் பிடித்தபடி
சிலகணங்களுக்கு இமைகளை மூடுகிறார்.
சற்று தூரத்தில்
பருவகாலங்களின் விருந்தினர் இல்லமாக
ஒளியை நோக்கியே வளரும் ஏக்கமாக
நிலத்தின் மீது
கூப்பிய கிளைகளுடன் மரமொன்று நிற்கிறது.
அதன் நிழலில் ஒரு யுவதி
மார்பகங்களுக்கு இடையில் கிடக்கும் சிலுவையை
எடுத்து முத்தமிடுகிறாள்.
மேகங்கள் என இவ்வுலகத் தருணங்கள் நகர்ந்து மறையும்
இன்னொரு வானத்தை அறிய முயலும்
இவனோ
அண்ணாந்து பார்க்கிறான் கடற்கரையில்.
பிறகு வழியில் சந்திக்கிறான் இலைநுனியில் அமர்ந்து
இரு கரங்களைக் கூப்பிப் பிரார்த்திக்கும்
ஒரு சிவப்புத் தட்டானை.
ஆ! திடீரென, அதற்குத் தெரிந்துவிட்டது போல—
தனது எல்லா வேண்டுதல்களும் எங்கே செல்கின்றன என்று.
அந்த மகிழ்ச்சியில்தான்
அது இப்படி ஆட்டம் போடுகிறதோ
உடலை அசைத்து அசைத்து?
*
Comments
Post a Comment