ஒரு பிறந்தநாளை உணர்தல்

Artist: Rene Magritte


இம்முறை ஒரு மாற்றத்திற்காக 

எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் போல் இருந்தது

கால்பந்தாட்டத்துத் தோழமைகளான 

மைதானத்துச் சிறுவர்களுக்கு அழைப்புவிடுத்தேன்

அவர்களுக்குப் பிடிக்குமென்று 

முந்தைய தினமே

நிறைய வாங்கி வந்தேன் இனிப்புகள், கால்பந்து, வீடியோ கேம் என.


நேரம் மாலை 05.30-க்குத் தருணம் வந்தது

ஆனால் சிறுவர்களில் ஒருவர் கூட வரவில்லை

நல்லவேளையாக எவ்விதமோ

உதிர்ந்த இறகு, சாயங்கால வெளிச்சம், 

கடக்கும் வாகனங்களின் சப்தம், ஈரமண் வாசனை என 

நிறைய பேர் ஏற்கனவே வந்திருந்தனர் 

அப்புறம் என்ன?


வீசும் காற்றும் தூரத்து மலையும் வாழ்த்துச்சொல்ல

நடனம் தெரிந்த ஒற்றைத்தூசியிடம் ஆசி வாங்கி

காரணமேயிலாமல் கொஞ்சநேரத்திற்கு மிட்டாய் பாக்கெட்டிற்குள் 

ஒரு மிட்டாய் என ஒளிந்துகொண்டு

பிறகு யாரும் எதிர்பாராவிதமாக வெளியில் குதித்து

இனிப்புகளைப் பரிமாறி

கோலாகலமாகக் கொண்டாடினோம் எனது பிறந்தநாளை.


பின்பு சட்டென்று நேரம் மாலை 05.35:

சிறுவர்கள்

பெரிய பெரிய ஆரவாரத்துடன் 

சிறிய சிறிய படிக்கட்டுகளில் வரும் சப்தம் கேட்டது.

நானும் ஆகாயமும்

ஒருவரையொருவர் மாறிமாறி பார்த்துக்கொண்டோம்

காரணமில்லாப் புன்னகையுடன்.

*

Comments

Post a Comment