நான் ஏன் சாயங்காலத்தில் மட்டும் காணாமல் போகிறேன்?


எனது அலுவலகம்,

முடிவின்மையைச்

சுவர்களாகவும் கூரையாகவும் கொண்டது.


எனது பணிநேரம், 

நூறு சதவீதம் 

கலப்படமற்ற சாயங்கால வேளை.

எனது முதலாளி, 

அருகாமையில் இருப்பது போல

நடித்தபடி தூராதி தூரத்தில் இருக்கும் நீ.


இமைகளை மூடியவாறு

தலையிலிருந்து பாதம் வரை

உன்னை நினைத்து நினைத்து ஏங்குவது,

பிறகு உனது பின்னங்கழுத்தில்

காது மடல்களில் 

முத்தமிட்டதாகக் 

கழியும் 

ஒவ்வொரு நொடியின் செவியிலும்

தனித்தனியாகச் சென்று

பொய் சொல்வது.

மேற்கண்ட இரண்டுமே 

எனக்கு விதிக்கப்பட்ட பணிகள்.


இன்னும் 

பயன்படுத்தாது கைவசமிருக்கும்

விடுமுறைக் காலம், 

கடலோர மணற்துகள்களின்

எண்ணிக்கையளவுக்கான நாட்கள்.

எனது சம்பளம், 

மொழிக்கு வெளியிலிருக்கும்

உதட்டுச்சாயத்தால் முத்திரையிடப்பட்ட 

ஒரு  கடித உறை.


மேலும் ஏனென்றே தெரியவில்லை

இப்போதெல்லாம்

சாலையோரத்தில் நடக்கையில்

திடீரெனக் கூவிவிடுகிறேன்

ஆனந்தத்தில்.

உண்மையிலேயே

எனக்கு எந்தக் குறையுமில்லை போல.

*

Comments

Post a Comment