சாட்சி


ஆழத்தில் மூழ்கி 
மறுநாள் 

செய்தித்தாளில் கரையொதுங்குபவர்களுக்குப் 

பிரசித்தமான கடற்கரை —

கரையில் அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து 

அலைகளின் திரைகளை விலக்கியபடி முன்னேறுகிறாள்

திரைப்படங்களில் மாத்திரமே

இப்படியொரு காட்சியைப் பார்த்திருந்தவன்

திகைத்துப்போய் உட்கார்ந்திருக்கிறேன்


அநேகமாக எல்லாவற்றையும் ஒளிரவைக்கும் 

தேன் தடவிய ஒரு மந்திர கணம்: 

ஒரேசமயத்தில் இரு கரைகளை அடைய இயலும் என்பதற்கான அத்தாட்சியாக

அவள் அவளிடமே திரும்பிவருகிறாள் 

ஈர மணலில் தனது பாதம் பதிவதை வெறிக்கிறாள்

பிறகு ஆங்காங்கு கிடக்கும் சிப்பிகளைச் சேகரிக்கிறாள்

அன்பு ஒரு குவித்துக்காட்டும் 

ஆடி போல நடந்துகொள்கையில்

வேறு வழியேயில்லை:

பிங்க் நிற சாம்ராஜ்யம், கண்ணீர்த்துளிகள், தந்தையின் உள்ளங்கை,

கடைவிழிப் பார்வைகள், ஈரக்கனவுகள், உள்ளாடையின் கதகதப்பு,

வணிக வளாகங்கள், இளம் ரகசியங்கள், புல்வெளிகள்,

சூர்யோதயங்கள், வளையல்கள், அலைபேசி எண்கள் என

இனி அவளுக்கு ஒவ்வொன்றுமே முக்கியம்தான்


இன்னும் தொலைவில் அண்ணாந்து நிற்கும்போது

யாருக்குத் தெரியும்

திருவாளர். ஆகாயம் 

ஹேய்.. குட்டிப்பொண்ணே என

அந்தக்கணத்தில்

இவளிடம் பேசவும் முயன்றிருக்கக்கூடும்


யாவும் மங்கலாகத் தெரியும் தூரம் அது

அதாவது எனது பார்வையின் எல்லைப்பிரதேசம்

ஒரு நிம்மதிக்காகவும்

இந்த செப்டம்பரில் 

துளித் துளியாக 

மறதிக்குள் சென்றவொன்றை

நினைவூட்டிக்கொள்வதற்காகவும்

அப்புறம் அவள் அவ்விதமே 

இறக்கை விரித்து 

மகிழ்ச்சியில் பறந்துகொண்டிருப்பதாக 

நான் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்

காற்றில் ஈரப்பதம் கூடுவது போலிருந்தது

*


Comments

Post a Comment