ஓராயிரம் மாலைப் பொழுதுகள்

Artist: Edvard Munch


1.ஓராயிரம் மாலைப் பொழுதுகள்


கிளையிலிருந்து மதிலுக்கு வந்து நிற்கிறது அணில்

என்ன விழுந்து கொண்டிருக்கிறது என்றே

அதற்குத் தெரியவில்லை

ஆனாலும் சொல்கிறான்:

"கவனமாக இரு,

நான் பிறந்ததிலிருந்தே

ஏதோவொன்று

கீழே விழுந்து கொண்டிருக்கிறது.

கவனமாக இரு... கவனமாக இரு..."

பின் கிரிக்கெட் மைதானத்தில்

உயரத்திலிருந்து

இறங்கிவரும் பந்தினைப் பிடிப்பவனைப்போல

தன் குட்டியூண்டு கைகளை

உயர்த்திப்பிடித்தபடி

நின்று கொண்டிருக்கிறான்

நானும் நிற்கிறேன்

ஒருவேளை அவன் தவறவிட்டால்

பாய்ந்து சென்று பிடித்து

இந்தப் பிரபஞ்சத்தை

ஆட்டமிழக்கச் செய்வதற்காக

**

2.ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை

 

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள்

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு

ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி

ஆழப் பதித்துப் பதித்து

நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை..

இனி திரும்பிச் செல்வேன்

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம்

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

**

நன்றி: பேசும் புதிய சக்தி- மே 2021

Comments

Post a Comment