சார்லஸ் சிமிக் கவிதைகள்

Artist: Josef Sudek


1

கடைசிப் பிக்னிக்

 

இலையுதிர்கால மழைபொழிவுக்கு முன்பாக,

மேலுமொரு பிக்னிக் போவோம்.

இப்போது இலைகள் நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன.

நிறைய இடங்களில் புற்கள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.

ரொட்டி, வெண்ணெய், கொஞ்சம் கருந்திராட்சைகள் போதும்தான்,

அங்கு அமர்ந்திருக்கும் நம்மைக் கண்டு குழப்பமடையும் காகங்களுக்கு

படையலிட ஒரு பாட்டில் திராட்சை ரசம்.

ஒருவேளை குளிரடித்தால்— அப்படி நடக்கும்—

நான் உன்னை நெருக்கமாக வைத்துக்கொள்வேன்.

இரவு சீக்கிரமாக வந்துவிடும்.

நமது பாதைக்கு வெளிச்சமூட்டும் முழுநிலவை எதிர்பார்த்து

நாம் ஆகாசத்தை வெறிப்போம்,

மேலும் அப்படியொன்று இல்லையெனில், நாம் நமது எல்லா நம்பிக்கையையும்

உனது தீப்பெட்டியிலும் எனது திசையுணர்விலும் வைப்போம்

நாம் வீட்டைத் தேடி அலைகையில் செய்வது போலவே.


2

இருண்ட இரவு

 

நித்திய வாழ்க்கை அலுப்பூட்டுவதால்,

தேவதூதர்கள் பினோக்கிள் விளையாடுகிறார்கள்,

பேய்கள் போக்கர் ஆடுகிறன்றன.

இரவின் கடைசியில் நீங்கள் கேட்கலாம்

சீட்டுகள் மேசையை அறைவதை.

கடவுள் சாலிடைர் விளையாடுகிறார்,

சாத்தானும் அப்படியொன்றை விளையாடுகிறான்தான்,

விதிவிலக்காக அவன் சபிக்கிறான், ஏமாற்றுகிறான்.


3

இருட்டில் கிறுக்கப்பட்டது

 

படுக்கையில் பட்டாசு வெடித்தாற் போல

எழுந்து உட்கார்ந்தேன்,

அதிர்ச்சியடைந்தேன்

என் மரணத்தைக் குறித்த சிந்தனையால்..

*

துர்கனவுகளின் விடுதி.

இரவு எழுத்தர்

செவிடென இருக்கிறார்

ஷூ துடைப்பானைப் போல.

*

உடலும் ஆன்மாவும்

நிழல் பாவைகளாக

வேடம் கட்டுகின்றன,

ஒவ்வொரு அறையின் சுவர்களிலும்

அவை நிகழ்த்துகின்றன

தங்களது கேலிக்கூத்துகளையும் அவலநாடங்களையும்.

*

ஓ, சோம்பேறிப் பனியே,

எனது இருண்ட ஜன்னல் கண்ணாடியின் மீது

விழுந்து உருகிக் கொண்டிருக்கிறாய்,

குரலற்ற நித்தியத்துவம் உன் பேச்சைக் கேட்கவிரும்புகிறது.

சப்தம் எழுப்பு இன்றிரவு.

*

இப்போது மெல்ல விழிக்கின்றன தெள்ளுப்பூச்சிகள்.

 

4

பொம்மை செய்பவர்

 

தனிமையின் அச்சத்தால், அவர் நம்மை உருவாக்கினார்.

நித்தியத்துவத்துக்கு அஞ்சி, நமக்குக் காலத்தை அளித்தார்.

எனக்குக் கேட்கிறது தனது வெள்ளைக் கைத்தடியால்

தரையை அப்படியும் இப்படியுமாக அடிப்பது.

 

நான் அண்டைவீட்டார்கள் கண்டிக்கவேண்டுமென எதிர்பார்த்தேன்,

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

தன் படுக்கைக்குத் தந்தை பைய வந்ததும் தேம்பி அழுத சிறுமி

இப்போது அமைதியாக இருக்கிறாள்.

 

இரண்டு மணியாவதற்குப் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

இந்த இருண்ட பொம்மைக்கடைகளின் வீதியில்,

நலக்காப்பகங்களிலும் வாடகை வீடுகளிலும்

ஓரிரண்டு கிழிந்த பொம்மைகள் விழித்திருக்கின்றன.

 

5

போர்

 

சாயங்காலத்தின் முதல் பனியில்

ஒரு பெண்ணின் நடுங்கும் விரல்

கீழ் நோக்கிச் செல்கிறது

இறந்தவர்களின் பட்டியலில்.

 

வீடு குளிர்ந்திருந்தது மேலும் பட்டியலோ நீளமாக இருந்தது.

 

எங்கள் அனைவரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

 

6

சித்திரங்களால் நிறைந்த புத்தகம்

 

அப்பா அஞ்சல் மூலம் இறையியல் படித்தார்

மேலும் இது பரீட்சைக்கான காலமாக இருந்தது.

அம்மா தைத்துக்கொண்டிருந்தாள்.

சித்திரங்களால் நிறைந்த புத்தகத்துடன்

நான் அமைதியாக அமர்ந்தேன்.

இரவு கவிந்தது.

மரித்த ராஜா ராணியரின் முகங்களை ஸ்பரிசிப்பதால் குளிர்ந்தன எனது கைகள்.

மாடிப்படுக்கையறையின் மின்விசிறியில்

தள்ளாடிய படியிருந்தது கறுப்பு ரெயின்கோட்.

ஆனால் அது அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறது?

அம்மாவின் நீளமான ஊசிகள் கணநேரத்தில் சிலுவைகளை உருவாக்கின.

அவை கறுப்பாக இருந்தன என் தலையின் உட்புறம் அப்போது இருந்தது போல.

இறக்கைகள் என்பது போல சப்தமெழுப்பின நான் புரட்டிய பக்கங்கள்.

முன்பொருமுறை அவர் கூறினார் "ஆன்மா ஒரு பறவை" என்று.

எனது சித்திரங்களால் நிறைந்த புத்தகத்தில்

யுத்தம் மூண்டது: ஈட்டிகளும் வாள்களும்

ஒருவிதமான பனிக்காடுகளை உருவாக்கின, குத்தித்துளைக்கப்பட்டு

கிளையொன்றிலிருந்து ரத்தம் கசியும் எனது இதயத்துடன்.

**

நன்றி: தமிழ்வெளி இதழ் 03

 


Comments