அமைதியை ஒளியால் வரைதல்
இணையத்தில் தற்செயலாகச் சில ஓவியங்களைக் காண நேரிட்டது. ஓவியரின் பெயர், மட்டேயோ மசாகிராந்தே (Matteo Massagrande). இத்தாலியின் சமகால முன்னணி ஓவியர்களின் ஒருவர். உருவத்தை விட ஒளிக்கும் வண்ணத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் இத்தாலியின் வெனேட்டிய ஓவிய மரபின் தொடர்ச்சி என இவரைச் சொல்லமுடியும். உரிந்துவிழும் சுவர்கள், வேலைப்பாடுகள் மிக்க பாதை, கதவு, வெளிப்புறம், கைவிடப்பட்ட சிதைந்த கட்டுமானங்களின் உட்பகுதிகள், மேல்மாடங்கள். இவற்றைத்தான் பெரும்பாலும் இவர் வரைகிறார்.
ஆரம்பத்தில் "இதில் என்ன இருக்கிறது" என்ற உணர்வையே நான் அடைந்தேன். ஆயினும் ஏதோ இனம்புரியாத ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது. வான்கோ திரும்பத்திரும்ப ஷூக்களை வரைந்ததைப் போல இவர் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் மிக நூதனமாக வரைந்து வைத்திருந்தார். அதிலும் ஒவ்வொன்றிலும் கதவை நோக்கிச் செல்லும் பாதை மட்டும் மிகுந்த கவனம் கொடுத்து வரையப்பட்டிருந்தது. ஆனால் ஏன்? அநேகமாக இந்தத் துணுக்குறலைத்தான் பார்வையாளர்களின் மனதில் உண்டாக்க நினைக்கிறார் என்று நினைக்கிறேன்.
பெரும்பாலும் நமக்குக் கதவும் அதற்கப்பால் உள்ளவையும்தான் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது இல்லையா? நுகர்வு கலாச்சாரத்தின் குழந்தைகளான நமக்கு இலக்குதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சேருமிடங்கள், பயன்பாடுகள், உச்சக்கட்டங்கள் என இத்யாதி இத்யாதிகள்.. இலக்கை நோக்கிய பாதைக்கு மனம் கொடுப்பதேயில்லை. ஆகையால் இலக்கை எட்டியதும் சின்னஞ்சிறிய மகிழ்ச்சியையும் பென்னம்பெரிய அகவெறுமையையும் அடைகிறோம். இப்பின்னணியில் தான் இந்த ஓவியங்களுக்கு அர்த்தம் கூடுகின்றன என்று நினைக்கிறேன். கதவை நோக்கிச் செல்லுதல், கதவைத் திறத்தல், வெளியே என வெளியேறுதலை இவர் சற்றே நீட்டித்துப்பார்க்கிறார். அந்த நீட்டிப்பே இவருடைய ஓவியங்களின் சாரம் எனத் தோன்றுகிறது.
மேலும் இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட்டுச்சொல்லவேண்டும். ஒளியை அளந்து அளந்து பயன்படுத்தியதைப் போலிருக்கும் இவருடைய ஓவியங்களில் பொருட்களின் கட்டுமானங்களின் தனிமை மீது ஒளிபாய்ச்சப்ப்பட்டுக் காண்பிக்கப்படுகையில், வண்ணங்களின் விந்தையான மினுக்கம் காரணமாக, உயிருள்ளவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார். தன்னை இழுத்துச்சார்த்துவதற்கு யாருமில்லாதபோது அந்தக் கதவு என்ன நினைத்திருக்கும்? சாவித்துளை சாவியைக் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறது? மேல்மாடங்கள் தூரத்து நிலக்காட்சியை என்னவாக உணர்கின்றன? எனப் பார்க்கப்பார்க்க நினைக்க நினைக்க "கொடுமையே... இந்தப்பொருட்களுக்கு ஏன் இத்தனை தனிமை" என தூரத்து அலறலாக அது பெருகுகிறது .
அநேகமாக மனித நடமாட்டமில்லாதவை என்று இவருடைய ஓவியங்களைச் சொல்லிவிடலாம். ஆனால் அத்தகைய இன்மையே இங்கு இருப்பை நினைவூட்டிவிடுவதாகக் இருக்கிறது, அணிலாடும் முன்றிலாரின் கவிதையைப் போல. பொருட்கள் வெளித்தோற்றத்தில் உறைந்து அசைவிழந்து கிடக்கின்றன. அசைவில்லை என்பதால் அங்குக் காலமற்ற உணர்வு தோன்றுகிறது. காலம் என்பது தானே துக்கம்? காலமற்ற உணர்வு நிலவுவதால் ஓவியத்தினுள் சீர்குலைக்க முடியாதது என்பது போல ஒரு நீடித்த அமைதி குவிந்து கிடக்கிறது. மொத்த உலகமும் இரைச்சலில் கிடக்க ஓரிடம் மாத்திரம் களங்கமில்லாத அமைதியில் உறைந்திருப்பதைப் போல. அழிவில்லாத அமைதி ஒருவேளை கலையினுள் மட்டும்தான் வசிக்கிறதோ?
***
✨✨✨
ReplyDelete