சன்னல்கள்- கான்ஸ்டான்டின் கவாஃபி

Artist:Brassai

இத்தகைய இருண்ட அறைகளில் 

வெறுமையான நாட்களைக் கழிக்க நேர்கையில்,

நான் சுற்றிச்சுற்றி வருகிறேன் சன்னல்கள் எங்குள்ளன என்றறிய.

சன்னல் திறந்திருக்கும்போது ஆறுதலாக இருக்கும்.

ஆனால் சன்னல்களையே காணவில்லை அல்லது 

என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒருவிதத்தில் சிறப்பானதாகக் கூட இருக்கலாம்.

ஏனெனில் ஒளி இன்னொரு சர்வாதிகாரத்தை நிரூபிக்கக்கூடும்

யாருக்குத் தெரியும் அது என்னென்ன புதுவிஷயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுமென்று?

*

கான்ஸ்டான்டின் கவாஃபி (1863-1933)

எகிப்திய-கிரேக்கக் கவிஞர். எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் பிறந்தவர். வரலாற்றின் ஞாபகத்தின் தவிர்க்க முடியாமை, சிற்றின்ப கிளர்ச்சி, யதார்த்தத்தை ரத்தமும் சதையுமாக எதிர்கொள்ளும் ஒரு தத்துவார்த்தமான தன்மை (ஓரளவுக்கு ஸ்டாயிக் எனச் சொல்லலாம்) போன்றவையே கவாஃபியின் கவிமையம் எனலாம். உரைநடைக்கு நெருக்கமான நேரடியான மொழியில் எழுதும் பாணி கவாஃபியினுடையது. தான் வாழும் காலத்தில் கவிதைத் தொகுதி என்று எதையும் வெளியிடவில்லை. புத்தக வடிவில் கவாஃபியின் கவிதைகள் 1935-ல் வெளிவந்தது. Daniel Mendelsohn, Edmund Keeley எனப் பலர் மொழியாக்கம் செய்து முழு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

Comments