மாற்றம் - ஆடம் ஜகாயெவ்ஸ்கி
Artist:Edward Hopper |
நான் ஒரு கவிதை கூட எழுதவில்லை சில மாதங்களாக.
நான் பகட்டிக்கொள்ளாமல் வாழ்ந்தேன்,
செய்தித்தாள்களைப் படித்தேன்,
அதிகாரத்தின் புதிர் குறித்தும்
கீழ்ப்படிதலுக்கான காரணங்கள் குறித்தும்
யோசித்துப்பார்த்தேன்.
சூரிய அஸ்தமனங்களைப் பார்த்தேன்
(செக்கச்சிவந்த மற்றும் கிலேசமான),
அமைதியில் பறவைகள் உயர்வதையும்
இரவின் மெளனத்தையும் செவியுற்றேன்.
தோட்டங்களினூடே
உலா செல்லும் ஒரு கவலையில்லாத தூக்கிலிடுபவனாக நான் கண்டேன்
அந்தியில் சூரியகாந்திகள்
தங்களது தலைகளைத் தொங்கப்போடுவதை.
செப்டம்பரின் இனிய தூசி
சன்னல் சில்களில் குவிந்திருக்கச்
சுவர் வளைவுகளில் பல்லிகள்
ஒளிந்திருந்தன.
நான் நெடுந்தொலைவு நடந்து வந்தேன்,
ஒரு விஷயத்திற்காக மட்டும் ஏங்கினேன்:
மின்னல்,
மாற்றம்,
நீ.
*
ஆடம் ஜகாயெவ்ஸ்கி (1945-2021)
போலாந்து கவிஞர். எளிமையான மொழிதலையும் யதார்த்தத்துடன் ஒளிவு மறைவில்லாத தொடர்பை வலியுறுத்தி, போலாந்தில் உருவாகி வந்த, புதிய அலை இயக்கத்தின் முன்னணி கவிஞர். Canvas, Mysticism for beginners, Unseen hand என ஐந்துக்கும் மேற்பட்ட கவிதை தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.
Comments
Post a Comment