டாம் ஹென்னன் கவிதைகள்
Artist: Shih-T'ao |
டாம் ஹென்னன் (Tom Hennen, 1942- )
அமெரிக்கக் கவிஞர். ஹென்னனின் கவிதைகளைக் குறித்துச் சொல்வதென்றால் அவை மையம் கொள்வது நிலக்காட்சிகளிலும் பருவநிலைகளிலுமே. தனது குறுகத்தரித்த கவிதைகளுக்காகப் பரவலாக அறியப்படுவர். ஹான் ஷான், டூஃபு ஆகிய சீனக் கவிஞர்களின் பாதிப்பையும் இவரிடம் காண முடியும். இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதைகள் Darkness Sticks to Everything: Collected and New Poems தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
**
1.பூர்வீகம்
நிலவறையின் படிக்கட்டுகளினூடாக
இறங்கிச்சென்ற பழைய வீடு
திரும்பிவரவில்லை.
மனிதர்கள்
ஆடுகள்
பன்றிகள், கோழிகள் என
யாவும் காணாமலே போய்விட்டன
நிலக்காட்சியிலிருக்கும்
மாபெரும் துளையினூடாக.
***
நதி, மெக்சிக்கன் வளைகுடாவிற்குச் சென்று கொண்டிருக்கிறது.
நீரின் மீதிருக்கும் நிலவோ அசையவேயில்லை.
அதற்கு நியூ ஓர்லென்ஸ்க்குப் போகும் பயணத்தில் ஆர்வமில்லை.
அதனுடைய ஒளி ஏற்கனவே சோர்ந்து போயிருக்கிறது
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மைல்கள் பயணித்து
சில மரங்களின் மேல் பிரகாசித்ததற்காக.
**
3.ரயிலில் ஒரு குளிர்கால விடியல்
முகங்கள் இருளிலிருந்து வெளியே வருகின்றன
ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றன,
பிறகு அமர்கின்றன.
எஃகுத் தண்டவாளங்கள் புரியும்படியான சப்தங்களை எழுப்புகின்றன.
அவற்றின் சொற்களோ தீப்பொறிகள்
இன்னும் இருட்டிக்கிடக்கும் வெளியினுள் தெறிப்பவை அவை.
கேளுங்கள்.
அவை சொல்லும்
நகரங்களுக்கிடையே மைல்கணக்கில்
எப்படி ஆயத்தமின்றிச் செல்வது என்று.
**
4.ஏரி அண்டை இரவு
இருட்டோடு இருட்டாக மெல்லத் துவங்குகிறது மழை.
குளிர்ந்த நீரில் ஊறிக்கிடக்கின்றன காட்டு விலங்குகளின் ரோமங்கள்.
எங்கும் ஈர மரத்துண்டுகளின் வாசனை.
தள்ளாடும் இரவானது
கப்பல்த்துறையில் கட்டிவைக்கப்படுகிறது.
**
5.குளிர்கால மசங்கல்
தற்போது குளிர்காலம்
மேலும் ஏறத்தாழ இரவாகியும் விட்டது.
பூமியின் புற்கள் செத்துப்போயிருக்கின்றன.
என் சன்னலோ இன்னும் உருகுலைந்த நிலையில்தான்
ஆதலால் நான் காற்றினால் குளிர்விக்கப்படுகிறேன்
இருள். குளிர்.
வெளியே ஒருவரையும் பார்க்க இயலவில்லை
கடைசி சூரிய ஒளி
வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது
உறைந்திருக்கும் ஏதோவொன்றினால்.
**
நன்றி: தமிழ்வெளி இதழ் - 1
Comments
Post a Comment