வெளியேற்றம் மற்றும் சில கவிதைகள்

 


1.மறுபடியும் ஒரு மாலைப்பொழுது

 

அஸ்தமனத்திற்குப் பிறகு

மொட்டைமாடியில்

எதை எதையோ எண்ணியவாறு

கால்களை நீட்டிச் சாவகாசமாய் அமர்ந்திருந்தேன்

சற்று நேரத்தில்

என்னைப் பாரேன்.. என்னைப் பாரேன் என்பதுபோல வெளவால் ஒன்று வருகிறது

அந்தரத்திலிருந்தபடியே

கொஞ்சமாய்க் கொய்யாக்கனியைக் கொறிக்கிறது

பின்பு ஒரு தாறுமாறான பறத்தல்...

அநேகமாக அது அதன் நடனமாக இருக்கலாம்

மறுபடியும் அந்தக் கனியிடமே திரும்பி வந்து

மீண்டும் ஓர் அந்தரக் கொறிப்பு

ஏனோ தாழ்வாரத்து மழைத்துளிகள் நினைவுக்கு வந்தன

இப்படியே அந்தக் கனி

இல்லாமல் ஆகும் வரைக்கும்

பார்த்துக்கொண்டிருந்தேன்

அப்புறம் ஏனென்றே தெரியாமல் மெளனமாக

படிக்கட்டுகளில் இறங்கி அறைக்குள் சென்றுவிட்டேன்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்

ஒவ்வொரு அந்திப்பொழுதும்

அந்த வெளவாலைப் போலத்தான்

என்னிடம் நடந்துகொண்டிருந்திருக்கிறது

*

 

2.குப்பைத்தொட்டிக்கு

 

கவலையில்லை

நிறைந்தாலும் நிறையாவிட்டாலும்

ஓர் ஏக்கமில்லை

துர்நாற்றம் நறுமணம்

அழுகியது புதியது

எலும்புத்துண்டு பூனைக்குட்டி

அழுக்கு பவித்திரம்

எந்தப் பாகுபாடுமில்லை அதற்கு

அப்படி ஒர் இருப்பு

சொல்லப்போனால்

வானம் பார்த்துத் திறந்திருக்கும் உலோகக் கூண்டின் சாயல்

ஒரு நித்திய வங்கியின் கட்டமைப்பு

பொன் உலகக் கனவின் வால் பகுதி

பிறந்த தேதி பூமி தோன்றியதற்கு முந்தைய நாள்

வசிப்பது ஏறத்தாழ எங்கும்

சில சமயங்களில் நம் பரந்த மனதிலும்

தூய்மையின் கண்டுபிடிப்பாளன்

முற்று பெற்றவைகளின் இறுதி நிறுத்தம்

பங்களிக்களிக்காமலேயே பிரபஞ்சத்திற்குப் பங்களிப்பவன் என

சொல்லித்தீராதவை அதன் பட்டப்பெயர்கள்

அங்க அடையாளங்கள் பெரும்பாலும் மூக்கைப் பொத்திக்கொண்டு

நாம் கடந்து செல்வோம்

பெயர் குப்பைத்தொட்டி

தொழில் அமைதியான கண்ணுடன் பராக்குப் பார்ப்பது.

*

3.வெளியேற்றம்

 

இருளில் ஒளி மூழ்குவதுபோலவும்

தனிமையில் காதலர்கள் பிரிவதுபோலவும்

சிறிது சிறிதாகக் கடற்கரை தீர்ந்துகொண்டிருக்கிறது

போதாக்குறைக்குக் கிணற்றிலிருந்து

தண்ணீரை வாரி இறைப்பது போன்று

கடற்கரையிலிருந்து கடற்கரையை

இன்னும் இன்னும் என வெளியேற்றிக்கொண்டிருக்கிறது அந்தி

மெதுவாக அங்கிருந்து வெளியேறுகின்றனர் யாவரும்

அவ்வளவுதானா எனக் கூவியபடி

கூடுகளுக்கு விரைகின்றன புள்ளினங்கள்

அங்கு ஏதோ எழுதியிருக்கிறது என்பதுபோல

அலைமோதும் பாறையில் அமர்ந்து

வானத்தை வெறித்துக்கொண்டிருக்கிறான் ஒரு தனியன்

இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்

*

 

4. கண்களும் வெற்றிடமும்

 

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றி வைக்கும்

ஆசை வந்துவிடுகிறது

கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்

சும்மா சொல்லக்கூடாது

மங்கலாகத் தெரிவதிலும்

சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

ஒரு நொடிதான்

எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன:

மங்கல் முகங்கள்

அவ்வளவு பேரும் புதியவர்கள்

இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை

வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:

அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு

இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

இத்தருணம் ஒரு கனவேதான்

வழியில் பிறகு பாரபட்சமின்றி இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

இனி நான் எனது ஊருக்குத் திரும்பவேண்டும்

நெருங்கி நெருங்கிப் பார்த்தும்

பின்பு கண்ணாடி அணிந்தும்

*


5.கன்னியாகுமரியில்


சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன்

ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல

யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில்

அந்தத் திருகாணிதான் கோர்த்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக

நாளைக்குத் தெரியவில்லை

இப்போது எனக்குத் தோன்றுகிறது

இங்கு எதுவுமே பொய்யில்லை

அழகின் வறுமை எதனிடமுமில்லை

கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே 

ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன

அறுதியிட்டுச் சொல்லமுடியும்:

இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி 

ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும் என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன் 

பாருங்களேன்

எவ்வளவு கொண்டாட்டம் நான் இருக்கிறேன் என்று உணர்கையில் 

ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன் மூழ்கும் படகில் இருப்பவன் என

குழந்தைகளாகக் கண்விழித்து 

மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்து நிற்கிறார்கள் நண்பர்கள்

மூன்று.. இரண்டு.. ஒன்று... 

எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி

ஆ! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம்

நாங்கள் சத்தியம் செய்கிறோம்

ஒருபோதும் இதை மறக்க மாட்டோம் என.


(கல்லூரி அறையை எடுத்து வந்திருந்த நண்பர்கள் சிவக்குமாருக்கும் ஸ்ரீதரனுக்கும்)

*

நன்றி: காவிரி இதழ்-01



Comments

  1. கண்களும் வெற்றிடமும் நன்றாக உள்ளது

    ReplyDelete

Post a Comment