போற்றுவோம் நண்பர்களே
ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்டது போலிருந்தது
முதலில் இப்பரந்த வயல்வெளியினால்
பின்பு என்னால்
நடந்து செல்கையில்
தூரத்தில்
ஒரு சோளக்கொல்லை பொம்மையினைப் பார்த்தேன்
இருந்தும் இல்லாது
பறவைகளின் நெரிசலையும்
அதன் சாயைகளின் நெரிசலையும்
நெறிப்படுத்திக்கொண்டு
ஏதோ தானொரு போக்குவரத்து காவலர் என்பதுபோல
நின்றுகொண்டிருந்தது
மானுடர்களுக்கும் இப்படியொருவர்
இருக்கவேண்டும்
அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு
அநேகமாக எந்நேரமும் உறங்கியபடி
எட்டாத் தொலைவினில்
ஓர் இன்மையின் வடிவிலிருந்து
சகலத்தையும்
ஒழுங்குபடுத்தியவாறு
ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்கவேண்டும்
அவரை அந்தப் பேரின்மையைப்
போற்றுவோம் நண்பர்களே
**
போற்றுவோம் சூர்யா
ReplyDelete