எஹுதா அமிக்ஹாய் கவிதைகள்-1
1.ஒருவரை மறந்துவிடுவது
ஒருவரை மறந்துவிடுவது என்பது
புழக்கடையிலிருக்கும் விளக்கை
அணைக்காமல் விடுவதைப் போன்றது
ஆகையால் அது ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்
மறுநாள் வரைக்கும்.
ஆனால் பின்பு அதன் வெளிச்சமே
நமக்கு ஞாபகப்படுத்திவிடும்.
**
2.பிறகு நினைவுகூர்பவர்களை யார் நினைவுகூர்வது?
மறக்கப்படுதல், நினைக்கப்படுதல், மறக்கப்படுதல்.
திறந்திருத்தல், மூடியிருத்தல், திறந்திருத்தல்.
(தொடர் கவிதையின் ஒரு பகுதி)
**
3.கடலும் கரையும்
கடலும் கரையும் எப்போதும் ஒவ்வொன்றுக்கும்
அடுத்தடுத்ததாக உள்ளன.
இரண்டும், ஒரு வார்த்தையை மட்டும்,
பேசவும் சொல்லவும்
கற்றுக்கொள்ள விரும்புகின்றன.
கடல் "கரை" என்று சொல்ல விரும்புகிறது
கரை "கடல்" என்று சொல்ல விரும்புகிறது
மில்லியன் வருடங்களாக, அவை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன,
அந்த ஒரு வார்த்தையை
பேசுவதற்காகவும் சொல்வதற்காகவும்.
கடல் "கரை" என்றும் கரை "கடல்" என்றும்
சொல்லும்போது,
மீட்சி உலகத்திற்கு வருகிறது,
உலகமோ பெருங்குழப்பத்திற்கே திரும்புகிறது.
**
4.என் தந்தை
ஊழியநாட்களுக்கான ரொட்டித்துண்டங்களென
என் தந்தையைக் குறித்த ஞாபகம்
வெள்ளைக்காகிதத்தில் சுருட்டிவைக்கப்பட்டுள்ளது.
தன் தொப்பியிலிருந்து
முயல்களையும் கோபுரங்களையும்
வெளியேயெடுக்கும் மந்திரவாதியைப் போல
அவர் தன் சிறிய உடம்பிலிருந்து
வெளியே எடுத்தார் காதலை.
அவருடைய நற்செயல்களின் மீது
வழிகின்றன அவருடைய கரங்களின் நதிகள்..
**
5.வெடிகுண்டின் விட்டம்
வெடிகுண்டின் விட்டம் முப்பது சென்டி மீட்டர்
மேலும் அதன் தாக்க வீச்சின் விட்டம்
ஏறக்குறைய முப்பது மீட்டருடன்
நான்கு மரணங்களும் பதினோரு காயமடைந்தவர்களும்.
மேலும் இவற்றைச் சுற்றி
வலி மற்றும் காலத்தின் விரிந்த வட்டத்தினுள்
இரண்டு மருத்துவமனைகளும் ஒரு கல்லறைத்தோட்டமும்
சிதறிக்கிடக்கின்றன.
நூறு கிலோமீட்டருக்கும் மேலான தூரத்திலிருந்து வந்திருந்து
இந்நகரத்தில் புதைக்கப்பட்ட அந்த இளம்பெண்
இவ்வட்டத்தைக் கணிசமான அளவு விரிவடையச் செய்கிறாள்.
மேலும் கடலுக்கப்பாலிருக்கும் தேசத்தின் தூரக்கரையிலிருந்தபடி
அவளுடைய மரணத் துக்கத்தை அனுஷ்டிக்கும் அத்தனியன்
ஒட்டுமொத்த உலகத்தையும் இவ்வட்டத்தினுள் சேர்க்கிறான்.
மேலும் நான் குறிப்பிடக்கூடப் போவதில்லை
கடவுளின் அரியணையை எட்டியபின்
அதற்கு அப்பாலும்
முடிவோ அல்லது கடவுளோ அற்ற ஒரு வட்டத்தினை
உருவாக்கிக்கொண்டிருக்கும்
அநாதைகளின் ஊளைகளைப் பற்றி
**
6.பாடல்
ஒரு மனிதன் தன்னுடைய காதலால் கைவிடப்படும்போது,
அற்புதமான பொங்கூசிபாறைகளுக்காக
அவனுள் குகை போல
ஒரு காலியான உருண்டைவெளி விரிகிறது மெதுவாக.
வரலாற்றிலிருக்கும் வெற்றிடத்தைப்போல
அது திறந்திருக்கிறது
அர்த்தத்திற்காகவும் குறிக்கோளுக்காவும்
துயரங்களுக்காகவும்
**
7.அவை என்னை அழைத்தன
கீழே டாக்ஸிகளும்
மேலே தேவதைகளும்
பொறுமையின்றி இருக்கின்றன.
ஒரே சமயத்தில் ஒன்றாக
அவை என்னை அச்சுறுத்தும் குரலில் அழைத்தன.
நான் வருகிறேன், நான்
வருகிறேன்,
நான் கீழே வருகிறேன்,
நான் மேலே வருகிறேன் !
**
8.காதற்பாடல்
தங்களுடைய வலிக்கான நிவாரணியைப் போல
மனிதர்கள் ஒருவரையொருவர்
பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அவர்கள் ஒருவரையொருவர் பூசிக்கொள்கின்றனர் தங்களுடைய
இருத்தலியல் காயங்களின் மீது, கண்களின் மீது,
பிறப்புறுப்பின் மீது,
வாயின் மீது,
கையின் மீது.
அவர்கள் ஒருவரையொருவர்
சிக்கெனப் பிடித்துக்கொள்கின்றனர்
விலகிச்சென்றுவிடாதபடிக்கு
**
9.காதலுக்குப் பிறகு ஒரு நாய்
நீ என்னை விட்டுச் சென்றபிறகு
நான் ஒரு நாயை
என் மார்பின் மீதும் அடிவயிற்றின் மீதும்
முகரச் செய்வேன்.
இது அதன் மூக்கை நிறைத்திருக்கும்
மேலும் உன்னைத் தேடச் சொல்லி அதை அனுப்புவேன்
நான் நம்புகிறேன் அது உன் காதலனின் விரைப்பையைப் பிய்த்து
அவனுடைய ஆண்குறியை கடிக்குமென்று
அல்லது குறைந்தபட்சம்
அவனது பற்களுக்கிடையே இருக்கும்
உன் காலுறைகளையாவது எடுத்துவந்து என்னிடம் தருமென்று
**
Comments
Post a Comment