காசநோய்க்கு ஒரு பாடல்

Artist: Edvard Munch


காசநோயே

நீ என்னை முற்றிலும் இன்னொரு ஆளாக மாற்றிவிட்டாய்

இந்தக் கட்டிடத்தை

நீ இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிடுவாய்

என்றல்லவா நினைத்திருந்தேன்.

மாறாக,

அனாயாசமாய் பல திருகாணிகளைக் கழற்றிவிட்டிருக்கிறாய்

சிலவற்றை இன்னும் இறுக்கமாக்கியிருக்கிறாய்

ஆன்மாவின் கன்னத்தில் அறைந்து அறைந்து

கூவியிருக்கிறாய்:

"இன்றைப் பார்..இன்றைப் பார்"

 

அந்த மாலைநேரக் காய்ச்சல் பொழுதுகள்

எனக்குக் கடற்கரைகள் கடற்கரைகள் என்றானதும் அப்போதுதான்

அடுத்தடுத்த மாத்திரை விழுங்கல்கள்

நடுக்காட்டில் திக்குத் தெரியாது அலையும் ஆட்டுக்குட்டி என நான்

இறைவனைத் தேடியதும் அப்போதுதான்

அஸ்தமனச் சூரியனுக்குக் கீழே

மெதுவாக நடக்கிறேன்

இனி வாழ்வுருக்கி நோய்களுக்கு

நான் அஞ்சவேண்டியதில்லை

இன்றை மிதித்து

இன்றிலேறி

இன்று போலப் பறக்கவும் செய்கிறேன்

இத்தனையும் உன்னால்தான்

கடற்கரைகளைக் காட்டி

சீவனை அமுதென ஊட்டிய உன்னால்தான் இத்தனையும்

 

பாக்டீரியங்களின் இளவரசியே

இங்கேப் பார்

பின்னிரவுகளில்

குரல் நைய்ய இருமிக்கொண்டே இருக்கிறாய் என்றாயே

இப்போது பார்

நான் கனவில் சேர்ந்திசைக் கச்சேரிகள் நிகழ்த்துகிறேன்

அந்த முதல் இருக்கை உனக்குத்தான்

வந்து உட்கார்

உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ

உன் அறிகுறிகளை

மூட்டைக்கட்டிக்கொண்டு

ஒரு நல்ல அஸ்தமன வேளையில்

இந்த மாளிகையை விட்டு

நீ வெளியேறவும் செய்தாய்

ஒவ்வொரு நொடியிலும் நறுமணம் சேர

நீ பயங்கரமா கருணையா என்பதுகூட

மறந்துபோய்

வாசல் வரை வந்து

மாத்திரை அட்டைகள் தீர்ந்த சுதந்திரத்துடன்

உனக்குக் கை அசைத்தேன்

 

இப்போதோ

காலங்கள் நிறைய ஓடிவிட்டன லாரி சக்கரத்தினடி எலுமிச்சைகள் என.

உனக்கும் எனக்கும் இடையே ஒரு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தொலைவு

நன்றிகெட்டவன் என மறுகரையிலிருந்து

நீ முணுமுணுப்பதைக் கேட்க இயல்கிறது என்னால்

ஆனாலும் காசநோயே

நான் எப்போதும் இப்படித்தான்

நன்றிகெட்டு விடைகொடுக்கிறேன்

விடைபெறுகிறேன்

அழுகிறேன் எச்சில் வடிக்கிறேன்

சமயங்களில் திருதிருவென முழிக்கிறேன்

என் வேர்கள் பலவீனமானவை

சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூடத் தெரியாதவை

அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்

நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன

ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு

மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்

கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே

இவை உன் கைங்கரியம்தானா

அறியேன் அறியேன் அறியேன்

அதனாலென்ன எத்தனை முறை வேண்டுமானாலும் வா

இது திறந்தேதான் கிடக்கிறது இரண்டு கரும்பலகைகள் கொண்ட வகுப்பறை என

ஆனால் இந்தப் பிரார்த்தனையை மட்டும்

என் பொருட்டு மறந்து விடாதே

எழுத்துப்பிழைகளோடு மலிந்து கிடக்கிறோம்

கிழித்து எறிந்துவிடாதே எங்களை

பதிலுக்கு ஆர அமர உட்கார்ந்து திருத்து ஒன்றாம் வகுப்பு பையனின் விடைத்தாளென

மதிப்பெண் கூட இடு

ஆனால் என் போன்றவர்களை

ஒருபோதும் ஃபெயில் ஆக்கிவிடாதே காசநோயே. . .

 

             (நித்ய சைதன்ய யதியின் “நோயை எதிர்கொள்ளல்” கட்டுரைக்கு)

*

Comments