வாகனக் காப்பகம்
Artist: Simon Aslund |
நள்ளிரவுக்குப் பிந்தைய வாகனக் காப்பகத்தில்
கண்டதுங்கடியதும் விழித்தெழுகின்றன சாவியின்றி மனிதரின்றி
உரிமையாளர் அதிர்ச்சியின் பல்லிடுக்கில்
தன்னுணர்விழக்கிறார்.
ஒளிரும் முகப்புவிளக்குகளுடன் சட்டெனப் புறப்படுகின்றன
சகலமும்:
இருசக்கர வாகனங்களின் ஒரு கறுப்புப் படை . . .
நெரிசல் வெளிக்குள் பெரும்புகைப்புயல்
அவ்வளவு உண்மையும்
அடியோடு பிடுங்கப்படுமோ என்று
ஒருவரால் அலற மட்டுமே இயலும் இப்போது.
குளிர்பதன பெட்டியினுள் வைக்கப்பெற்ற
தண்ணீர்ப் போத்தலெனக்
கண்டவர்களெல்லாம் உறைய கூட்டம் மொத்தமாய்
முன்னேறுகிறது
தன் மகனிடம் ஆளில்லாமல் வண்டி இயங்காதென்று
வாதிட்டுக்கொண்டிருக்கும் தகப்பனை நோக்கி.
ஈற்றில் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன அத்தனையும்
அவரோ பேச்சை நிறுத்திவிட்டு
இவற்றைப் பார்க்கிறார் ஓர் உண்மை இன்னொரு
உண்மையைக் காண்பது போல.
பல்லொளியாண்டுத் தொலைவு கண்டு
வந்தவர்களென மெல்ல மெல்ல மீள்கிறார்கள் உறைந்தவர்கள்
பின் காற்றில் ஒரு ஹாரன் பேரலை:
அவருக்கு யாவும் சொல்லப்பட்டுவிட்டது
**
நன்றி: அரூ இணைய இதழ்
Comments
Post a Comment