ஹபீஸ் கவிதைகள்

Artist: Hiroto Norikane

1


உன் ஆயிரம் கைகள் என் உடலை கிழிக்கின்றன.
இதுதான் மரணிப்பதற்கான வழி:
ஓயாது 
அழகு
அதனுடைய கூர் கத்தியை
எனக்கெதிராக
குறிவைத்துக் கொண்டிருக்கிறது



2

இந்த எல்லாச் சொற்களுக்கும் வேர் என்ன?
ஒரே விஷயம்: காதல்.
ஆனால் காதலோ மிக ஆழத்திலும் தித்திப்பாகவும் உள்ளது
அது தன்னை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது
இதுவரையில்லாத
வாசனைகளாலும் ஓசைகளாலும் வண்ணங்களாலும்.



3

ஒவ்வொரு குழந்தைக்கும் கடவுளைத் தெரியும்,
பெயர்களின் கடவுளை அல்ல,
இல்லைகளின் கடவுளை அல்ல,
எப்போதும் வித்தியாசமான காரியங்களைப் புரியும் கடவுளை அல்ல,
ஆனால் நான்கே வார்த்தைகளை மட்டும் அறிந்து
அதை ஓயாது திரும்பத் திரும்ப
சொல்லிக்கொண்டிருக்கும் கடவுளை
அவர்களுக்குத் தெரியும்
அவர் சொல்வது:
"என்னுடன் நடனம் ஆட வா"
வா
நடனமாடுவோம்



4

இவ்வளவு காலத்திற்குப் பிறகு கூட
சூரியன் பூமியிடம் சொன்னதில்லை
"நீ எனக்கு கடன்பட்டிருக்கிறாய்" என.
கவனி
இப்படிப்பட்ட காதலினால் நிகழ்ந்தது என்ன
ஒட்டுமொத்த ஆகாசத்தையுமே
ஒளிர அல்லவா செய்திருக்கிறது அது.


5

சிறிய மனிதன்
தான் அறிந்த  சகலருக்கும்
கூண்டுகள் அமைப்பான்.
அதேசமயம்
நிலவு தாழ்ந்திருக்கையில்
தலையைத் தாழ்த்திக் கொள்ளவேண்டிய துறவியோ
அழகான அந்தப் போக்கிரி கைதிகளுக்காக
இரவு முழுவதும்
தொடர்ச்சியாக
சாவிகளைக் கீழே வீசிக்கொண்டிருப்பான்


6

பிரபஞ்சத்தை
நல்ல கவிதை
ஒரு ரகசியத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்துவிடுகிறது:
“நான் உண்மையில் வெறும்
ஒரு தாம்போரின் வாத்தியக் கருவிதான்,
நன்றாகப் பிடித்துக்கொள்,
உன் வெதுவெதுப்பான தொடைக்கு மேல் வைத்து
என்னை இசை.

*

Comments