"நாம் உற்றுக்கேட்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்"- டபிள்யூ.எஸ். மெர்வின்
இன்ஸ்கேப்: உங்கள் பெரும்பாலான கவிதைகள் அறியப்படாதவற்றிலும், அறியப்படாதவற்றை உற்றுக்கேட்பதிலும் அக்கறை கொண்டுள்ளன. ஒரு கவிஞர் அந்தக் கேட்கும் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்கிறார்?
டபிள்யூ.எஸ். மெர்வின் : நாம் உற்றுக்கேட்டே ஆக வேண்டும். உண்மையில், நமக்கு எப்படிக் கேட்பது என்று முன்பே தெரியும். குழந்தைகளுக்கு எப்படிக் கேட்பது என்று தெரியும்- இது பிறக்கும்போதே நம் அனைவரிடமும் உள்ள திறன். நாம் பேசுவதற்கு முன்பே நம்மால் கேட்க முடியும். பேசுவதற்கும், பார்ப்பதற்கும் முன்பே கேட்கும் திறன் வந்து விடுகிறது. இது விலங்குகளின் உலகத்துடன் நாம் பகிர்ந்து கொள்ளும் பண்புகளில் ஒன்று ஆகும். விலங்குகள் கேட்பதில் திறன் மிக்கதாக இருக்கின்றன.
நாம் அப்படி உற்றுக்கேட்பதற்கு எதிராக நிற்பவை நம் சமூகக் கற்பிதங்களே. அதாவது என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் கலாச்சாரக் கற்பிதங்களையோ அல்லது எதிர்பார்ப்புகளையே நான் குறிப்பிடுகிறேன். உதாரணமாக, நான் எப்போதும் டிஜிட்டல் உலகத்தின் மீது மிகுந்த சந்தேகத்துடனேயே இருக்கிறேன். டிஜிட்டல் உலகம் செவிட்டுத் தன்மை உடையது என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் அங்கே ஒலி இல்லை. குறுஞ்செய்திகளிலோ ட்விட்டரிலோ கணினிகளிலோ ஒலி இல்லை. உங்களுக்குத் தெரியும். நான் இளம்கவிஞர்களிடம் ஏராளமான திறன்கள் இருப்பதாக நினைக்கிறேன், ஆனால் அவர்களிடம் குரல் இல்லை. இளம்கவிஞர்களைப் படிக்கும்போது நான் எப்போதும் கேட்கிறேன், “உங்களுடைய குரல் எங்கே?”. பொதுவாக, தனித்த குரலின் இந்தப் பற்றாக்குறை கணினியிலும் மின்னணு உபகரணங்களிலும் அதிக நேரம் செலவிடுவதிலிருந்து வருகிறது என நான் நினைக்கிறேன். கணிப்பொறியில் அதிக நேரத்தை செலவிடுகையில் நீங்கள் இயற்கை உலகத்தின் ஒலிகளுடன் உங்களை இணைக்கும் திறனை மலினப்படுத்திக் கொள்கிறீர்கள். கவிதை எதைச் சாதிக்க முயல்கிறது என சிந்தியுங்கள். தொழில்நுட்பம் மிகவும் வித்தியாசமானதும் கவிதைக்கும் கவிதை மொழியின் நோக்கங்களுக்கு மாறானதும் ஆகும். எனவே மின்னணு உபகரணங்களில் இளம்கவிஞர்கள் குறைந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
நீங்கள் அறியப்படாதவை குறித்துக் கேட்டீர்கள். மொழிக்கு முன்பே கூட கவிதை இருந்தது என்றே நான் நம்ப விழைகிறேன். உதாரணமாக, நியூயார்க் டைம்ஸில், தன் இறந்த கணவரின் உடலின் முன்பு ஒர் ஈராக்கிய பெண், வாய் திறந்து நிற்கும் ஒரு புகைப்படத்தைப் பாருங்கள். அவள் என்ன செய்கிறாள்? உங்களுக்கு அவள் என்ன செய்கிறாள் என்று தெரியும். அவள் தன் வாயை அகலமாகத் திறந்துபடி நிற்கிறாள். மேலும் அதிலிருந்து என்ன வெளிவருகிறது என்றும் உங்களுக்குத் தெரியும். அது வேதனையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் எழும் புரிந்துகொள்ள இயலாத நீண்ட அழுகை. அது விவரிக்கவே இயலாத ஒன்று ஆகும். வலுவான உணர்ச்சிகளை விவரிக்க முடியாது. இருந்தாலும் உங்களுக்கு அது என்னவென்று தெரியும். அதேசமயம் அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அறிவீர்கள். இதுதான் கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம். ஒரே சொற்களைப் பயன்படுத்தினாலும் கவிதையும் உரைநடையும் ஒன்றல்ல. உரைநடை என்பது தகவல்களைக் குறித்தது மேலும் ஒப்பீட்டளவில் சமீபத்தியது. மிகுந்த நடைமுறைக்குரியதும் நமக்கு அவசியமானதும் ஆகும். எனவே அதை நாம் உபயோகிக்கிறோம். நம் வாழ்க்கையில் அது மதிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் கவிதைகளை வாசிக்கும்போது அது தகவல் மட்டுமல்ல, அது வேறு விஷயம். மொழியின் அதே தோற்றத்திலிருந்தே கவிதை தொடங்கினாலும் விவரிக்க முடியாத ஒன்றைச் சொல்வதற்கான முயற்சி. உலக வர்த்தக மையம் தகர்த்தழிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புத்தகக் கடைகளால் அலமாரிகளில் கவிதை புத்தகங்களை இருப்பு வைத்திருக்க முடியவில்லை. அச்சமயத்தில் மக்கள் வாசிக்க விரும்பிய ஒரே விஷயம் கவிதைதான். மக்களுக்குத் தாங்கள் ஏன் கவிதை படிக்க விரும்புகிறோம் என்று தெரிவதேயில்லை. ஏன் கவிதை படிக்க விரும்புகிறார்கள்? ஏனென்றால், கவிதை விவரிக்க முடியாத ஒன்றைச் சொல்ல முயன்றது, மக்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். அதைத்தான் நான் “அறியப்படாதது” என்று சொல்கிறேன். அதனால்தான் நாம் உற்றுக்கேட்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். வேதனையினாலோ மகிழ்ச்சியினாலோ கத்தும்போது நாம் என்ன செய்கிறோம் என்றே நமக்குத் தெரிவதில்லை. நாம் ஏன் அப்படிபட்ட காரியங்களைச் செய்கிறோம் என்று நமக்குப் புரிவதில்லை. நாம் அவற்றை வெறுமனே செய்கிறோம். அவ்வளவுதான். குளிர்காலத்தில் பறவைகள் ஏன் தெற்கே பறக்கின்றன? நாம் உள்ளுணர்வு என்று சொல்கிறோம். ஆனால், அதன் அர்த்தம் என்னவென்று உண்மையிலேயே நமக்குத் தெரிவதில்லை. நீங்கள் சைக்கிள் ஓட்டும்போது, சைக்கிள் ஓட்டுவதைப் பற்றி நீங்கள் யோசிப்பதில்லை, நீங்கள் வெறுமனே சைக்கிள் ஓட்டுகிறீர்கள். எப்படி சைக்கிள் ஓட்டுவது என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் அதை செய்கிறீர்கள். ஒருவேளை அதைப் பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்கத் துவங்கினால், நீங்கள் கீழே விழுந்துவிடுவீர்கள். அறியப்படாதது என்பது ஏதோ வினோதமான பரிமாணமோ, மறுமை வாழ்வின் அறிவோ அல்ல; அது நாம் அனைவரும் பிறந்ததிலிருந்தே நம்முள் சுமந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். நம் நினைவை எவ்வளவு பெறுமதியானது என்று நாம் கருதுகிறோமோ அவ்வளவு மதிப்பு வாய்ந்த ஒன்று . அது நம் சுயத்தின் ஒரு பகுதியாகும். மேலும் சமூகம் அதன்மீது கவனம் செலுத்த நம்மை ஒருபோதும் ஊக்குவிக்காத போதிலும் நம்மால் அதைத் தவிர்க்க முடியாது. அந்த முதன்மையான உள்ளுணர்வை பராமரிக்கவில்லை என்றால், வாழ்க்கையிலும் கவிதையிலும் நாம் தொலைந்து போவோம்.
இன்ஸ்கேப்: வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பல ஆண்டுகளாக உங்கள் கவிதை பரிணாமமடைந்து வந்துள்ளது. இது குறித்து நீங்கள் சொல்ல முடியுமா?
டபிள்யூ.எஸ். மெர்வின்: ம்..சரி. ஒரு விஷயத்தில் வயதுக்கு ஏற்ப வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வை மாறுகிறது. மேலும் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட என் மாற்றத்தால் என் வடிவமும் மாறுகிறது. உள்ளடக்கத்துடன் வடிவம் பொருந்த வேண்டும். ஏற்கனவே, கவிதை எழுதுவதற்கு என்று நியோகிளாசிக்கல் வழிமுறைகள் இருக்கின்றன. மேலும், அவை மிகச் சிறப்பானவை என்பதால் அவற்றைப் புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ கூடாது. பழங்கவிதைகளைச் சப்தம்கூட்டி படியுங்கள். உங்களால் எவ்வளவுமுறை இயலுமோ அவ்வளவு முறை வாசியுங்கள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு சொல்லும் தனித்துவமானது. ஏனெனில், அவை ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன. கவிதை குறித்த ஒரு மகத்தான விஷயம் என்னவென்றால் அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. கவிதை எப்போதும் வளர்ந்து கொண்டும், மாறிக்கொண்டும் இருக்கிறது. மேலும் கவிதையையும் அதன் வடிவத்தையும் எப்போது வேண்டுமானாலும் வித்தியாசப்படுத்திக் கொள்ள கவிஞனுக்கு அதிகாரம் உண்டு. கவிதை மாற்றுவது மட்டுமல்லாமல் மாறவும் வேண்டும். கவிஞன் உலகத்துடனும்,சுற்றம் மற்றும் சூழ்நிலையுடனும் ஒத்திசைந்து இருக்க வேண்டும். கவிஞன் எல்லாவற்றையும் பார்க்கவும் கவனிக்கவும் வேண்டும், ஒரு கணத்தை கூட வீணாக விடக்கூடாது. ஒரு கவிஞராக உலகத்துக்கும் மொழிக்கும் மற்றும் அறியப்படாதது குறித்த அந்த உள்ளார்ந்த உணர்வுக்கும் கவனம் கொடுத்தால்தான் அவனோ அல்லது அவளோ காலத்துடன் பரிணமிக்க முடியும்.
00
கவிதையுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு கூடுதலான உபயோகமான கருத்துரைகள். நன்றி. இவருடைய கவிதைகள் தமிழில் கிடைக்குமா சூர்யா?
ReplyDeleteநன்றி. இவருடைய கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவில்லை. சில கவிதைகளை தேர்வு செய்துவைத்திருக்கிறேன். ஒரு நல்ல மனச்சூழலில் அமர்ந்து மொழியாக்கம் செய்யவேண்டும். பார்க்கலாம்.
Deleteஇவ்வளவு ஆழமாகக் கவிதையை அவதானிப்பவரின் கவிதையைப் படிக்க ஆவலாக உள்ளது. நீங்களும் அவரளவுக்கு உண்மையான கவிதைகளை சரியாகவே அடையாளம் காண்கிறவர் தான்.
ReplyDeleteஉங்கள் மொ.பெ.ஐ எதிர்ப்பார்க்கிறேன்.
அருமை சூர்யா. நன்றாக இருக்கிறது
ReplyDeleteமொழிக்கு முன்பாகவே கூட கவிதை இருந்திருக்கலாம் என்ற இவரின் நம்பிக்கையும் , கவிதை என்பது விவரிக்க இயலாத ஒன்றை சொல்வதற்கான முயற்சி என்ற தெளிவான descriptionனும் இவரை தேடிப்படிக்கிற ஆவலை தூண்டுகிறது . அறிமுகம் செய்து வைத்த கண்டருக்கு நன்றி
ReplyDelete