நாம் ஏன் தொடர்ந்து மலைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறோம்?


சில வருடங்களுக்கு முன்பு பெரம்பலூரில் மலை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அந்த மலைக்குப் பெயர் உண்டா இல்லையா எனத் தெரியவில்லை. பலமுறை பார்த்திருக்கிறேன் சென்றிருக்கிறேன் என்றாலும் அங்கிருந்து மேகங்களை அருகாமையில் காணவே எனக்குப் பரவசமாக இருந்தது. இதை எழுதும்போதும் நினைவு இருக்கிறது. நான் துள்ளிப் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.

எதுவோ திபுதிபுவென எரிந்து புகைவது போல், காற்றின் முதுகில் தொங்கிக்கொண்டிருக்கும் வேதாளம் போல, சாம்பலுக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணத்தில், நீர்வீழ்ச்சியில் சிந்தும் தண்ணீரை போர்வையென விரித்தது மாதிரி அல்லது தலையணையின் உள்ளிருக்கும் பஞ்சினை பரத்திப்போட்டது போல அவை இருந்தன. அன்றைக்கு எனக்கு அதைத் தொட்டுப்பார்க்கவேண்டும் என்பது போல இருந்தது.

சூரிய அஸ்தமனம் வரை மலையுச்சியில் நெடுநேரம் அமர்ந்திருந்தேன். பறவைக் குரல்களின், பூச்சிகளின் ரீங்காரங்களின் வாத்தியப் பின்ணனியில் ஒரு அஸ்தமனம். நகுலனின் கவிதை ஒன்றில் வருவது போலத் திட்டுத்திட்டாகச் சட்டென்று இருள் பரவத்தொடங்கியது. மலையை விட்டு இறங்கும்போது மனம் அசையாமல் இருந்தது. அவ்வளவு எடை. அவ்வளவு மௌனம்.

சமீபத்தில், ஹான்ஷானின் குளிர்மலை கவிதைகளைப் படிக்கையிலும் நெடுநேரம் மலையுச்சியில் அமர்ந்திருந்தது போன்ற ஒரு மனநிலை வாய்த்தது. ஓர் இனிய செயலின்மை என நான் அதைச் சொல்வேன். செயலின்மையில் இருந்து எழும் மன நரகங்களை உண்டு. ஆனால் இது வேறு. யாவும் அசைவற்று நிற்பது போன்ற ஸ்திதி. காரணக் காரிய சுழியிலிருந்து ஒரு சிறு ஆசுவாசம்.

                                ***

குளிர்மலைக் கவிதைகளை ஒரு வசதிக்காக, இரண்டாக வகுத்துக்கொள்ளலாம். முதலாவது பகுதியை மலையுச்சியை நோக்கி செல்வதற்கான தயாரிப்பு எனலாம். ஹான்ஷானுக்கு ஒரு சம்சார வாழ்க்கை இருக்கிறது. புத்தகங்கள் குவிந்து கிடக்கும் படுக்கையுள்ள ஒலைக்குடிலில் தறி நெய்யும் மனைவியும் காட்டுப்பழங்கள் பறிக்க உடன்வரும் மகனும் உண்டு.

அழகான இளம்பெண்ணின் கண்ணீர்த்துளிகள் காற்றில் விழுவதைக் கவனிப்பவராகவும் இயற்கையின் முன் எண்ணங்களில் மூழ்கிவிடுபவராகவும் இருக்கிறார். அழகின் வாழ்வின் நிலையாமையை உணர்ந்த துக்கம் அவரில் உண்டு. பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சக்கை போல உன் முகம் மாறிவிடப்போகிறதே என அழகான பெண்களைக் குறித்து எண்ணுகையில் யாருக்குத் தெரியும் ஒரு நொடியில் ஒரு மணிநேரத்திற்கான துக்கத்தையும் பார்த்த ஹான்ஷான் அழுதிருக்கக் கூடும். இளமை காற்றில் வைக்கப்பட்ட கற்பூரம் போல கரைவதைக் குறித்த பதட்டத்தை அவசர அவசரமாக ஒரு கவிதையில் பகிரவும் செய்கிறார்.

அன்பற்ற இதயங்கள், அறிவாளிகள், பணக்காரர்கள், பேராசைமிக்கவர்கள் வறுமை, அவமானகரமான தருணங்கள் என அனைத்துடனும் அவருக்கு அணுக்கமான தொடர்பு உண்டு. அது குறித்த புலம்பலுக்கும் குறைவில்லை.

பிற்பகுதியில், வேறொரு ஹான்ஷானை நாம் பார்க்கிறோம். புலம்புவதை அறவே கைவிட்டுவிடுகிறார். அவரில் ஒர் ஏற்பு தெரிகிறது. வடிவற்ற வடிவ உடலுடைய வெண்மேகங்கள் தொட்டுச்செல்லும் காரணமும் காரியமும் அற்றுச் சகலத்தையும் பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்கும், தன்னை மலை என்று அறியாத தன்மையுள்ள மலைகள் குறித்த அனுபூதித்தனமான சித்திரங்களை நிறையவும் எழுதியிருக்கிறார். அவற்றில் மனிதனில் இயற்கையை அல்லாது இயற்கையில் மானுட இருப்பை வைத்துப் பார்க்கும் கிழக்கத்திய செவ்வியல் கவிதைகளுக்கே உரிய விரிந்த வெளி உண்டு.

உயரம் உண்டு. எனவே உயரங்கள் மட்டுமே உண்டாக்கும் ஏகாந்தம் இருக்கிறது. குளிர் இருக்கிறது. அதனால் வெண்ணிறம் எந்நேரமும் இருக்கிறது. பனித்துளிகளைக் கண்ணீராகச் சிந்தும் பசும்புற்கள் உண்டு.

ஒரு ஆப்த வாக்கியம் போல “துக்கம் முற்றினால் அமுதம் ஆகிவிடும்” என்று நான் அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டு. ஹான்ஷான் கவிதைகளில் அதற்கான ஒரு ஆமாம் இருக்கிறது. குளிர்மலையை நோக்கி புறப்படுவது என்பது அவருடைய மனம் அவருடைய மனதிற்கே திரும்புவது போல் இருக்கிறது. அந்தப் புறப்பாட்டில் இருமைகள் இல்லை.

சீன செவ்வியல் கவிஞரான லி போவின் கவிதையொன்றில் வருவது போல ஹான்ஷானும் குளிர்மலையும் ஒன்றாக அமர்ந்திருக்கவேண்டும். இறுதியில் மலைக்கும் அவருக்கும் பேதமற்றுப் போயிருக்கவேண்டும். அத்தகைய ஒருமை உணர்ச்சி அவரின் கவிதைகளில் உள்ளது. அதனாலேய குளிர்மலை மனமாகவும் இருக்கிறது. ஒரு கவிதையில் குளிர்மலைக்குச் செல்லும் வழி என்ன என்பதற்கு "என்னுடைய மனதைப் போன்றே உன் மனதும் இருக்குமானால், மலையின் மையப்பகுதிக்கே நீ சென்று சேர்ந்து விடுவாய்" என்கிறார்.

கண்ணாடியின் இயல்பு தன் முன் என்ன இருக்கிறதோ அதைப் பிரதிபலிப்பது. சிறுவித்தியாசம். ஜென்னில் அந்தக் கண்ணாடி ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை நோக்கியும் பிரகிருதியை நோக்கியும் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். ஒருவகையில் சிந்தனைக்கு முன்பு இருக்கும் நிலையைக் கைப்பற்றுவது. அங்குக் கடந்த காலம் கிடையாது. சொற்கள் வந்துசேராத வெறும் தூய நிலையிலிருக்கும் அனுபவம் மட்டுமே. மலையில் வைக்கப்பட்ட ஒரு உயிருள்ள கண்ணாடியைப் போன்றவர்தான் ஹான்ஷான். நிழலின் தனிமையை உணரும் போதிசத்துவக் கண்ணீர் அவரில் உண்டு.

ஹான்ஷானுக்கு இயற்கைதான் குரு. உயரம்தான் அவருடைய மடாலயம். அவருடைய மனம்தான் புத்தர். அதைநோக்கியே அவர் ஊழ்கத்தில் அமர்கிறார். முகில்களை அவர் நண்பராக்கி கொள்ளும்விதமும் அந்த ஊழ்கத்தின் மூலமேதான். தாயின் மடியில் உறங்குவது போல மேகங்களில் தலைவைத்து உறங்கும் அளவுக்கான அணுக்கம் அது.

ஹான்ஷான் லெளதீக உலகை கனவுலகம் என்றும் விடுபடவேண்டிய கண்ணி எனவும் பரிந்துரைக்கும் துறவிதான். அதேசமயம் துறவி இல்லையும்தான். ஏனெனில் அவர் ஒரு துறவிக்கான மரபான பாதைகளைக் கீழே போட்டவராகவும், கனவில் மீண்டும் தன் இல்லத்துக்கு போய் மனைவி மக்களைப் பார்ப்பவராகவும் இருக்கிறார். அவரில் வறட்டு புத்த மற்றும் தாவோயிச அறிஞர்களைக் குறித்த நையாண்டிகளும் கலகக்கவிதைகளும் உண்டு.

எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லிவிடும் அவரில் ஜென் மரபு தாவோயிசத்தை உட்செரித்துக்கொண்டதற்கான தடயங்களையும் நாம் காணமுடியும். அந்த வகையில், இன்றைக்கு இருக்கும் ஜென் மரபுக்கான முன்னோடி என்றும் சொல்லலாம். அதே சமயம் புத்தகங்களை மூடிவைத்துவிட்டுப் படிக்கப் பரிந்துரைப்பவராகவும் இருக்கிறார். அதனாலேயே ஒளி ஊடுருவும் படிகத்துக்கு இணையான நேரடித்தன்மைக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

                                ***

வீடற்று இருப்பது என்பதன் அர்த்தத்தை அனைத்தையும் வீடாக்கிக்கொள்வது எனும் தளத்திற்கு எடுத்துச்செல்லும் ஹான்ஷானின் குளிர் மலை கவிதைகளின் இன்றைய முக்கியத்துவம் என்ன என்றால் அவற்றில் உள்ள இயற்கையுடன் ஒத்திசைந்த தற்சார்பு அம்சத்தையும் விட்டேற்றியான தன்மையும் என்பேன்.

அதனால்தான் அவருடைய கவிதைகள் பீட் தலைமுறை கவிஞர்களை ஆகர்சித்திருக்கிறது. பீட் தலைமுறையின் முக்கியமான கவிஞரான கேரி ஸ்னைடர் அவருடைய கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். முன்னுரையில் குறிப்பிடப்படுவது போல ஜாக் கெரோக் தன்னுடைய Dharma bums நாவலை அவருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

விஷயங்களை புள்ளிகளாக்குவதுதான் சூட்சுமம் என அவர் உரைப்பதில் உண்மை இல்லாமலில்லை. தொலைவு ஒரு மந்திரக்கோல் என்பதை ஹான்ஷான் கவிதைகள் வழியாகத்தான் நான் புரிந்து கொண்டேன் என்றும் தோன்றுகிறது. ஒரு வகையில் நாம் தொடர்ந்து மலைகளுக்குச் சென்றுகொண்டிருப்பதே தொலைவின் பற்றாக்குறையினால்தான் இல்லையா?


                                ***

தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


பாழடைந்த நகரத்தின் வழியே என் குதிரையை ஓட்டிச்செல்கிறேன்;
பாழடைந்த இந்நகரம், இப்பயணியின் நினைவுகளைத் தட்டியெழுப்புகிறது:
உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும் புராதனக் கொத்தளங்கள்;
பெரிதும் சிறியதுமாய்ப் பழங்கல்லறை மேடுகள்.
ஒற்றைப் புதர்கோரைப்புல்லின் நிழல் நடுங்கிக்கொண்டிருக்கும்,
மிகப்பெரும் மரங்களின் குரல்கள் நிரந்தரமாய் நிறைந்துமிருக்கும் இவ்விடத்தில்,
எங்கும் விரவிக்கிடக்கும் எலும்புகளைக் கண்டுப் பெருமூச்செறிகிறேன்-
இறப்பேயற்ற தேவர்களின் பெயர்ப்பட்டியல் எதிலுமே
இவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லையே.


*
எனக்கு உடல் உள்ளதா இல்லையா?
நானென்பது நானேதானா அல்லது இல்லையா?
ஆண்டுகள் பல கழிய, இக்கேள்விகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தபடியே,
இங்கே பாறைமேல் சாய்ந்து அமர்ந்துள்ளேன்.
என் பாதங்களின் இடையே பசும்புற்கள் வளரும்வரை,
செம்புழுதி என் தலைமீது படியும்வரை,
நான் இறந்துவிட்டதாக எண்ணி இம்மக்கள்
வைனும் பழங்களும் காணிக்கைகளாகக் கொண்டுவந்து
என் பிணத்தின் அருகே வைக்கும்வரை.

*
குளிர்மலைக்குச் செல்லும் வழியை மக்கள் கேட்கின்றனர்.
குளிர்மலைக்கா? அங்குச் செல்ல எந்தச் சாலையும் இல்லை.
கோடைகாலத்திலும் கூட அங்கு உறைபனி உருகிவழியாது;
சூரியன் பிரகாசிக்கும்போதும், மூடுபனி கண்களை மறைத்து நிற்கும்
என்னைப் பின்தொடர்வதன் மூலம் அங்குச் சென்று சேர்ந்துவிடலாம் என எங்கனம் நீ நம்பலாம்?
உன் மனதும் என் மனதும் ஒன்றல்லவே.
என்னுடையதைப் போன்றே உன் மனதும் இருக்குமானால்,
மலையின் மையப்பகுதிக்கே நீ சென்று சேர்ந்து விடுவாய்!

*
பசுங்குளத்தில் தூய்மையாகவும் துல்லியமாகவும்
ஒளிரும் இலையுதிர்கால நிலவைப் போன்றது என் மனம்.
இல்லை, இது சரியான ஒப்பீடாகாது.
சொல்லுங்கள், நான் எப்படி என்னை விளக்குவேன்?

                                   ---

குளிர்மலை – ஹான்ஷான்,
தமிழில்: சசிகலா பாபு
எதிர் வெளியீடு,
விலை: ரூ.130
00

நன்றி : ஓலைச்சுவடி இணைய இதழ்

Comments