வாழ்க்கை [குறுங்கதை]

 

எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு கனவு போலிருந்தது. நான் ஒரு பிரம்மாண்ட செருப்புக்கடையினுள் நின்று கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த செருப்புக்கடையும் குளிரூட்டப்பட்டிருந்தது. மின்விளக்குகள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. செவி குளிரும் வண்ணம் மெல்லிய பியானோ இசை ஒலித்துக்கொண்டிருந்தது. தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்தேன். பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அடுக்குகள் இருக்கும் போலத்தோன்றியது. படிக்கட்டுகள் காற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட கயிறு போல மேலே மேலேயெனச் சென்றுகொண்டே இருந்தன. ஒருவேளை மேலே செல்லச் செல்ல படிக்கட்டுகளும் மேலே செல்கின்றனவோ என்னவோ. சுமார் ஒன்றரை லட்சம் ஜோடி செருப்புகள் இருக்கும் என்று தோன்றியது. எந்தவொரு கடைக்குச் சென்றாலும் முதலில் சுற்றிப்பார்ப்பது என் வழக்கம். ஆனால் இங்கு முடியாது எனத் தெரிந்து கொண்டேன். இவ்வளவு படிக்கட்டுகளைக் கடந்து மேலேச் செல்வது என் மூட்டு எலும்புகளை நானே ஒடித்துக்கொள்வதற்குச் சமம் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகச் செருப்புகளின் அருங்காட்சியகம் என்று ஒரு பகுதி தரைத்தளத்தின் கடைசிப் பகுதியில் இருந்தது. மகாத்மா காந்தியின் புகைப்படம் ஒட்டப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் இரண்டு காலணிகள் இருந்தன. யாருக்குத் தெரியும் ஒருவேளை இது காந்தியினுடையதாகக் கூட இருக்கலாம். வான்கோ வரைந்த ஷூக்களின் ஓவியங்கள் சுவரில் மிதந்து கொண்டிருந்தன. ஒரு மனிதன் மெனக்கெட்டு ஷூக்களைத் திரும்பத் திரும்ப வரைந்து இருக்கிறான். என்ன சொல்ல. அவை வைக்கப்பட்டிருக்கும் கதியே தீவிரமான பொருளமைதி உடையது மாதிரி இருந்தது. வெளுத்த முகம் கொண்டவர்களைத்தான் வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்கள் போலும். வெள்ளை நிறத்தை தூய்மையினுடையதாக எப்படிச் சொல்கிறார்களோ. வெண்ணிறம் விளையாடிய முகத்தின் பொருட்டு பணியாளர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்துபோனவர்கள் போலிருந்தார்கள்.

என் காலை பார்த்தபடி, “சார் வணக்கம்” என ஒரு சவம் வரவேற்றது. “இங்கே வாருங்கள்” என்றபடி,  அந்த சவம் என்னை அழைத்துச் சென்றது. “எந்த மாதிரி செருப்பு வேண்டும்?” நான் என் கையில் வைத்திருந்த பாலிதீன் பையிலிருந்து பழைய செருப்பை எடுத்து, “இதே மாதிரி” என்றேன். நிறையச் செருப்பு மாதிரிகள் எடுத்து, என் முன் வைக்கப்பட்டன. வண்ண வண்ணமாக. வேறு வேறு வடிவில் மாதிரியில். நான் ஒன்றை எடுத்து, காலில் அணிந்து பார்த்தேன். மிகவும் இறுக்கமாக இருந்தது. இன்னொன்றை எடுத்து அணிந்து பார்த்தேன். அதுவும் அப்படித்தான். “இவை என் கால் அளவுக்கானதுதானே” எனக்கேட்டேன். மறுபக்கத்திலிருந்து, ஒரு “ஆமாம்” வந்தது. “சரி இவற்றை முயற்சி செய்துபாருங்களேன்” என சில ஜோடி செருப்புகள் கொட்டப்பட்டன.

கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்திலிருந்த ஒரு செருப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை மட்டும் தனியே எடுத்து, அணிந்து பார்த்தேன். எனக்குப் பொருத்தமாக இல்லை. இன்னொரு காலையும் உள்ளே நுழைக்கலாம் எனும் படிக்கு அளவில் பெரியதாக இருந்தது. என்ன மர்மம் எனில், பார்க்கும்போது என் கால் அளவுக்கு இருக்கும் செருப்புகள் அணிந்து பார்க்கும்போது அமானுஷ்யமான முறையில் எப்படியோ எனக்குப் பொருந்தாமல் போய்விடுகின்றன. அடுத்தடுத்துக் குவிக்கப்பட்ட அனைத்து செருப்புகளையும் அணிந்து பார்த்தேன். எதுவும் எனக்குப் பொருத்தமாக இல்லை.

நான் “வேறு கடையில் பார்த்து வாங்கிக் கொள்கிறேன்” என அதிருப்தியுடன் சொன்னேன். கனிவான குரலில், அந்த வெளிறிய முகம், “முடியாது சார்” என்றது. எல்லா பணியாளர்களும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? இன்னொரு பணியாளர் என்னை நோக்கி வந்தார். “நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சரியான செருப்பு உங்களுக்குக் கிடைக்கும்வரை உங்களால் இங்கிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது.” என்றான். “இதென்ன அபத்தம். உங்கள் நகைச்சுவை மிகவும் மோசமாக இருக்கிறது. வழி விடுங்கள்” எனச் சொல்லியவாறு, வாசலை நோக்கி நடந்தேன். வாசல் என்று எதுவுமில்லை. பதிலுக்கு ஒரு சிறைச்சாலையைச் சுற்றி இருப்பது போல மதில்கள்தான் இருந்தன. சிறைச்சாலையில் பாசி படிந்து கரடுமுரடாக இருக்கும். ஆனால் இங்கே இளம் சிவப்பு நிறத்தில் வர்ணம் அடித்து மனம் கவரும்படி இருந்தது.

பிறகு, குடோன் என எழுதப்பட்ட பகுதியினுள் சென்றேன். செருப்புகளையும் இருளையும் தவிர அங்கே ஒன்றுமில்லை. நம்பவைத்து நம்பவைத்து ஏமாற்றியே அனைத்தும் பழகிவிட்டன. மலைமலையாக செருப்புகள் குவித்துக் கொட்டப்பட்டிருந்தன. துர்நாற்றம் வேறு வந்து கொண்டிருந்தது. எல்லாமே பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட செருப்புகள் போலும். அரையிருட்டில் சென்றுகொண்டிருக்கும்போது தான் தெரிந்தது: ஒவ்வொரு குவியலின் முன்பும் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் என்று. தவம் செய்வது போல. ஒருவரிடம் சென்று “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” எனக் கேட்டேன். நின்றபடி கேள்வி கேட்பது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. “இத்தனை செருப்புகளையும் சுத்தமாகத் துடைத்து, தைக்க வேண்டும்” என்றான். “ஓ, இங்கு வேலை செய்கிறீர்களா” என்றேன். அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. தலையைத் தொங்கவிட்டான். சந்தேகமேயில்லை, மனிதர்கள் தலையைத் தொங்கப்போடுவதின் கலைஞர்கள்தான்..

“உனக்கு இங்கிருந்து வெளியே செல்வது எப்படி எனத் தெரியுமா?” அரையிருள் உருவம், தலையை நிமிர்த்தாமல் “இங்கிருந்து வெளியே செல்ல முடியாது” என்றது. “எனக்கு வழி இருக்கும் எனத் தோன்றுகிறது” என்றேன். “எல்லா வழிகளையும் அவர்கள் அடைத்துவிட்டார்கள்” என்றது அந்த உருவம். “இல்லை, நிச்சயமாக ஒரு வழி இருக்கும். உள்ளே வர முடிகிறது என்றால் உறுதியாக வெளியேயும் செல்ல முடியும்” என்றேன். “நீ உள்ளே ஒன்றும் வரவில்லை, நீ ஏற்கனவே இங்குதான் இருக்கிறாய். உனக்கு முன்பு தெரியவில்லை. விழித்தபடியே நீ தூங்கிக்கொண்டிருந்தாய். இப்போது நீ முழுவதுமாக விழித்துவிட்டாய்” என்றது அந்த உருவம். “இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது. உனக்கு வழி தெரியுமா இல்லையா ?” “வெளியேறும் வழி கிடையாது ஏனென்றால் அப்படி ஒன்று எப்போதும் இருந்ததில்லை எனக் கனிவான குரலில் அந்த உருவம் சொல்லியது.

மற்றொரு குவியலின் முன், இரண்டு பேர் உட்கார்ந்து இருந்தனர். ஒருவன் இன்னொருவனைப் பார்த்து, “வாழ்க்கை” என்றான். இன்னொருவன் பதிலுக்கு, “சாவு” என்றான். ஏதோ வினோதமான விளையாட்டு போல இப்படித் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தனர். எனக்குத் துர்நாற்றம் பொறுக்க இயலவில்லை. அநேகமாக இவர்கள் மனநலம் கெட்டவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன். அப்படி நினைத்துக்கொண்டால் எதுவுமே தீவிரமாகத் தெரியாது என்பது என்னுடைய கண்டுபிடிப்புகளில் ஒன்று. (உண்மையும் அதுதான். உலகம் மிகப்பெரிய மருத்துவமனை) எனக்கு அவர்கள் மனநலம் கெட்டவர்கள். அவர்களுக்கு நான். கணக்கு சரியாகப் போய்விட்டது இல்லையா. முதலில், எனக்குச் செருப்பு உண்மையில் தேவையா? அவசியமோ இல்லையோ என்பதெல்லாம் இந்த இடத்திற்கு ஒரு பொருட்டில்லை என்று தோன்றியது. குடோனை விட்டு வெளியே வந்தேன்.

அவரவர் இடத்தில் பணியாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். சிலர் செருப்பு பெட்டிகளை அடுக்கிக்கொண்டிருந்தனர். கடைக்கு, வேறு யாரும் ஏன் இதுவரைக்கும் வரவில்லை என திடீரென என்னை நானே ஒருமுறை கேட்டுக்கொண்டேன்.  எப்படியும் இந்தக் கேள்விக்கும் வெளிறிய முகங்கள் வெறுப்பூட்டும் மெளனத்தையே பதிலாகத் தருவார்கள் என்று தோன்றியது. எந்தக்கேள்விக்கும் பயனில்லை. எந்த பதில்களும் நிலையானதில்லை. தரைத்தளத்திலேயே இப்படி என்றால் மேலேப் போகப் போக எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். எனக்கு வியப்பாக இருந்தது. நான் குடோன் வாசலில் நின்று, கடையின் பிரம்மாண்டத்தை அதன் பிடிபடாத தன்மையைப் பார்த்தபடி நின்றேன்.

“இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என நான் பேச்சுக்கு நடுவே வினவும்விதமே நன்றாக இருக்கும் என்று முன்பு சொல்வார்கள். உண்மையில் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என யாராவது கேட்டால் நான் சொல்வேன்: கால்களுக்குச் சரியாகப் பொருந்தும் செருப்பைக் கண்டுபிடிப்பதுதான் என்று. எனக்கான செருப்பைக் கண்டுபிடித்து அணிந்து கொள்வதுதான் ஒரே வழியெனத் தோன்றியது. ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட செருப்புகளில் ஒரு ஜோடி செருப்பு. அதற்கு முன், இந்தக் கடையை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

Comments