சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் -3



**
மொழிகளுக்கு இடையில்

இருப்பை மொழிகளுக்கு இடையில் செருகிவைக்க முடியுமா?

மலைகளும் வயல்வெளிகளும்
காற்றும் தானியமும்
காதலும் சோகமும்
வாழ்க்கையும் மரணமும்
மொழிக்கு வெளியில் இருக்க முடியுமா?

மொழிக்கு வெளியே ஒன்றுமில்லை முடிவில்லாத இரவைத் தவிர
ஒருவேளை அங்கேதான் விடுதலை சுவாசித்துக் கொண்டிருக்குமோ?
-பார்க் யென்-ஹூய் (தென் கொரியா)




காலி தபால் பெட்டி

மறுபடியும் தபால் பெட்டி இன்றைக்குக் காலியாகவுள்ளது
நான் மூன்று முறை திறந்து பார்த்தபின்னும் காலியாகவேயுள்ளது தபால் பெட்டி
ஆயினும் நான் திறக்க முயன்றேன்
மேலும் ஒரு முறை.
-பார்க் யென்-ஹூய்


**

எல்லா மலைகளின் உச்சியிலும் மெளனம்;
எந்த மரங்களுக்கிடையிலும் உணரவேயியலாது மென்னிளங்காற்றை.
காட்டில் பறவைகளும் மெளனமாயிருக்கின்றன.
கொஞ்சம் பொறு:
நீயும் அமைதி காண்பாய்
-கதே 



**

மனிதனுக்கும் விலங்கிற்கும் மேலாக,
நான் மிகவும் உயரமாக வளர்ந்தேன்;
இப்போது நான் பேசும்போது-யாரும் பேசுவதில்லை என்னுடன்.
நான் வளர்ந்தேன் மிக உயரமாகவும் மிகத் தனிமையாகவும்-
எந்த ஒன்றிற்காக நான் காத்திருக்கிறேன்?
அருகில், முகில்கள் அமர்ந்திருக்கின்றன:
நான் காத்திருக்கிறேன் முதல் மின்னலிற்காக.
-நீட்ஷே

**

என்னிடம் முழு சத்தியத்தோடு வராதீர்கள்
எனக்குத் தவிக்கிறதென்றால்
சமுத்திரத்தை கொண்டுவராதீர்கள்
ஒருவேளை நான் ஒளியை கேட்டேனென்றால்
சுவர்க்கத்தை எடுத்துவராதீர்கள்
ஆனால் கொண்டுவாருங்கள்,
ஒரு குறிப்பையோ,
சில பனித்துளிகளையோ துணுக்குகளையோ,
பறவைகள் நீர்நிலைகளிடமிருந்து துளிகளை ஏந்திச்செல்வது போல
காற்று உப்புக்கொத்துகளைக் கொண்டுசெல்வது போல
-ஒலவ் ஹாக் (ஸ்வீடன்)

**

வெள்ளை நிறம் துயரத்துடனோ மகிழ்ச்சியுடனோ இல்லை
வெறும் வெள்ளையாகவே இருந்தது
நான் சொல்லிக்கொண்டேயிருந்தேன் வெண்மையாக இருக்கிறாய்
ஆனால் வெண்மை செவிகொடுத்து கேட்கவில்லை
அது குருடாகவும் செவிடாகவும் முழுமையாகவும் இருந்தது
மேலும் மிக மெதுவாக வெண்மையாகிக் கொண்டிருந்தது
-ததயூஸ் ரோஸ்விச் (போலந்து)

**

இதில் சில கவிதைகள் வாசித்த உடன் பரவசத்தில் உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே பகிரப்பட்டவை. அவை ஒரிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே சேகரிக்கப்படுகிறது. ரத்தினங்கள் அல்லவா. சில, முதல் வரைவிலிருந்து சற்று முன் கண் விழித்தவை. .

00

Comments