ஏகம் அநேகம்
மீண்டும் அதேயிடத்திற்கு
வந்துகொண்டிருந்த பறவையைச் சந்தித்தேன்
எவ்வளவு நாட்களாயிற்று உன்னைப் பார்த்து
நலமா. உன் தனிவானம் நலமா?
மின்கம்பியில் அமர்வதும்
விருட்டென்று கொஞ்ச தூரம் பறந்துவிட்டு
மீண்டும் மின்கம்பியில் உட்கார்வதுமாக இருக்கிறாய்
ஒருவேளை நடைப்பயிற்சியில் இருக்கிறாயோ
இது ஐந்தாவது சுற்று.. என் கணக்கு சரி தானே
உன்னைப் பார்க்கும்தோறும் எனக்குச் சந்தேகம் கூடுகிறது
உன் கண் வழியே ஒருமுறை கண்டு சொல்லேன்
நான் இங்கே எப்படி இருக்கிறேன்
ஒரேயொரு ஆளாகவா அல்லது
உன் போல் ஏராளமாகவா
**