பூமி எனும் குற்றவாளிக்கூண்டு !: காஃப்காவின் விசாரணை நாவலை முன்வைத்து சில குறிப்புகள்
2. சிறிதும் பாவியல்பற்ற ஆனால் வாசிக்கும்போது அகம் கடுமையாகத் தொந்தரவுக்குள்ளாகுகிற ஒரு மொழி காஃப்காவினுடையது. செவ்விலக்கிய வாசிப்பின் இறுதியில் தன்னை மீண்டும் ஒழுங்காக அடுக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் வாசகன் வந்தடைகிற களைப்பு காஃப்காவின் ஒவ்வொரு பத்தியிலும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. காஃப்காவின் விவரணையின் குணாம்சங்களில் ஒன்று அவர் அனைத்தையும் ஒரு வடிவமாகப் பார்க்கிறார் என்பதே. மானுட உணர்ச்சிகளை அவர் ஒரு சிற்பமாகக் காண்கிறார். நாடகீயத்துக்குப் பக்கத்தில் வரும் தருணங்களைத் தன் புனைவுகளில் கூறும்போது அவை ஒரு பாறைத்தன்மையைப் பெற்றுவிடுகின்றன. இரண்டாவது, காஃப்காவின் வாக்கிய அமைப்பு. ஒரு வரியிலேயே பெரிய அறையொன்றை அணு அணுவாக விவரித்துவிட முயல்பவை அவருடைய வாக்கியங்கள்.
3. காஃப்காவின் கதாபாத்திரங்களும் பாதி கண்ணுக்குத் தெரியாதவர்களே. அவர்களுக்கு உரைத்துக்கொள்ளும்படி பெயர் கிடையாது. அப்படியே பெயர் இருந்தாலும் அவர்களுடைய கடந்தகாலம் என்ன? தெரியாது. இனிமேல் தான் அவை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலை. காஃப்கா தன் புனைவுகளில் உண்டாக்கும் நகரத்துக்கே கூட பெயர் கிடையாது.
தொழிற்புரட்சியும் மானுட அடையாளத் தொகுதியும் மெல்ல மெல்ல வெகுஜனப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஐரோப்பா, தொன்மங்களினாலும் அலையும் எல்லைகளினாலும் உள்முகமாகக் கொந்தளித்தபடியும் வெளியில் ஒரு விபரீதமான அமைதியிலும் இருந்த காலத்தின் பின்னணியினுள், தனிமனிதன் தன்னை வடிவமைத்துக்கொள்வதற்கும், சூழலினால் வலுக்கட்டாயமாக உருமாற்றப்படுவதற்கும் இடையேயுள்ள மோதலை வைத்து பார்க்கிறார் காஃப்கா. இந்த இடம் காஃப்காவின் படைப்புகளில் முக்கியமானது.
4. மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நம்பிக்கையிலிருந்தே அங்கு யாவும் எழும்பிவருகின்றன. பிரார்த்தனை ஆகட்டும் சடங்குகள் ஆகட்டும். நம்பிக்கைதான் அடிப்படை. அறிவியல் காரணத்தை அடித்தளமாகக் கொண்டது. நிகழ்கிற யாவற்றுக்கும் காரணம் அறியமுடியும்படி இருக்கிறது என்பது அறிவியலின் தரப்பு. (ஒரு பைனரி எழுந்து வருவதைத் தவிர்க்க இயலவில்லை) நம்பிக்கைக்கும் காரணங்களுக்கும் இடையிலான இந்த முரண்பாடுதான் வரலாற்றின் எரிபொருள். வரலாறு எனும் பேருந்து இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது எனலாம். இந்தப் பயணத்தினூடாகத்தான் புதிய சிக்கல்களை மானுடம் கண்டுபிடித்துக் கொள்கிறது.
நம்பிக்கையிலிருந்தே தொன்மங்கள் உருவாகிவருகின்றன. இன்னொரு பக்கம், காரணங்களிலிருந்து அந்தத் தொன்மத்தை குறித்த பகுத்தறியும் விருப்பம் எழுந்து வருகிறது. மனிதன் இந்த இரண்டு விசைகளாலும் ஓயாது இயக்கப்படுகிறவனாக இருக்கிறான். ஆனால் காஃப்கா கேட்கிறார். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று காணாமல் போய்விட்டால் என்ன நிகழும்? குறிப்பாகக், காரணம் ஒரு சாவியினைப் போல தொலைந்து விட்டால்? விசாரணை நாவல் எதிர்கொள்கிற ஆதாரமான சிக்கல் இதுதான். நிச்சயம் காஃப்காவின் மனிதனுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. (அறிவியலின் வருகைக்கு முன்பிருந்த "அந்த நம்பிக்கை") அதனால்தான் அவன் இறுதிவரை முயன்றுகொண்டே இருக்கிறான். காஃப்காவே கூறுகிறார் "மனிதனால் அழிவில்லாத ஒன்றின் மீது நிரந்தரமாக நம்பிக்கை வைக்காமல் வாழ இயலாது" என்று. பூச்சியாக உருமாறிவிட்டபின்பும் அவனுடைய முதல் பிரச்சினை தன்னால் அலுவலகத்திற்குச் செல்ல முடியாது என்பதாக இருக்கிறது . விசாரணை நாவலில் தன்மீது உள்ள வழக்கிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையிலேயே வழக்கறிஞரை போய் பார்க்கிறான்.
நோய்க்கூற்றுத்தன்மையை மனச்சோர்வை எழுதியவர் என்று ஒர் எண்ணம் காஃப்காவின் புனைவுகளைக் குறித்துப் பொதுவாக இருக்கிறது. உண்மைதான். அவருடைய படைப்புகளில் ஒரு உளைச்சல் உள்ளதுதான். தீராப்பிரக்ஞையில் அவதியிறும் பறதி மிகுந்த மனிதன் இருக்கிறான்தான். ஆனால் இது மட்டுமேயல்ல காஃப்கா. "காரணங்களின் விடுமுறையின்"போது நிகழ்வதை எழுதியவர் அவர். காரணமில்லாத நிலையின் விபரீதம் என்னவென்றால் எதுவேண்டுமானாலும் ஒரு காரணமாக மாறிவிடக்கூடிய வாய்ப்பும் தற்செயலும் அங்கிருக்கிறது .
எது நம்மை வாழவைக்கிறது என மூர்க்கமாக நம்பிக்கொண்டிருக்கிறோமோ அதுவே நம் வீழ்ச்சியின் இழிநிலைகளின் காரணமாகிவிடும் தருணம் எவ்வளவு குரூரமானது. கண்ணில் புலப்படுபவைகளுடன் காஃப்காவின் நாயகர்கள் மோதுவதில்லை. அவர்கள் மோதுவது கண்ணுக்குப் புலப்படாதவற்றுடன். கண்ணுக்குப் புலப்படாத எனும்போது அங்கே நிறுவனங்களின் இறுக்கமான சீருடையை அணிய ஆரம்பித்த மதங்களின் நிலைமையையும் சேர்த்தே பரிசீலிக்கிறார் எனலாம். அவர் இதுபோன்ற சூழலில் என்னவெல்லாம் நடக்கிறது என காட்டுகிறார். நீ இந்த வழியில் செல்லாதே என எச்சரிக்கிறார். கண்ணுக்குப் புலப்படாதவைகள் இப்புவனத்தில் இருக்கும்வரை இந்த எச்சரிக்கை ஒருவகையில் நித்தியத்துவமானதும் கூட.
5. அறியமுடியாமைகளை அறிந்து கொள்ள மனிதன் நிகழ்த்தும் சலிப்பேயில்லா போராட்டத்தை அதன் அபத்தங்களுடனும் கனவுகளுடனும் தோல்விகளுடனும் வரைந்து காட்டுவது என்று விசாரணை நாவலைச் சொல்லலாம்.
தொழில்நுட்பங்கள் மாபெரும் அமைப்பாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் மனிதனிடமிருந்து காரணங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டுப் பிரம்மாண்டமான புரிந்து கொள்ள இயலாமைக்குள் மனிதன் சரிந்துவிழுகிற காட்சியை ஒரு ஆன்மிகத் தோல்வியை முன்பே தீர்க்கதரிசனம் போல உரைத்துவிட்ட படைப்பு அது.
"யாரோ ஒருவர் யோசஃப் க.வைப் பற்றி வேண்டுமென்றே அவதூறாகச் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு தவறும் செய்யாத போது, ஒரு நாள் காலை அவன் திடீரென்று கைது செய்யப்பட்டான்." விசாரணை நாவல் இப்படித் தொடங்கி யோசஃப் க.வின் சாவில் முடிகிறது.
கடைசி வரை யோசஃப் க.விற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவனுக்கு ஒரு சாவிகூட கிடைக்கவில்லை. ஆனால் ஓயாது அதைத் தேடிக்கொண்டே இருக்கிறான். ஒரு அறிய முடியாமையின் கதை என்று கூட விசாரணை நாவலை சொல்லலாம். நம்பிக்கை அல்ல, காரணம் கடவுளாகும் சத்தியமாகும் ஒரு மாயம் விசாரணை நாவலில் நடக்கிறது. மரணம் காஃப்காவை பொறுத்தவரை ஒரு முடிவு அல்ல. அது ஒரு அறிய முடியாமை. அவ்வளவுதான்.
6. விசாரணை நாவலை, யோசப் க.வின் மனப்பிரம்மை என்றுகூட வாசிக்கலாம். ஒட்டுமொத்த கதையுமே யோசப் க.வின் உருவெளித்தோற்றம் என கருதுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கவே செய்கிறது. மனோதத்துவவியலாளர்கள் விசாரணை நாவலுக்கு இப்படியொரு ஒரு சுவாரசியமான வாசிப்பினை அளித்துக்கொண்டனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எதிர்பாராது தோன்றும் கதவுகள், சன்னல்கள், காலியிடங்கள், படிக்கட்டுகள், குறுகிய வழிகள், ரகசிய அறைகள் என விசாரணை நாவலில் வருகிற கட்டிடங்களின் அலுவலகங்களின் சித்தரிப்புகள் ஒரு கனவுத்தன்மையை எழுப்புவதாக உள்ளன. உருமாற்றமும் சரி விசாரணை நாவலும் சரி காலையில் ஒரு மனிதன் விழிப்பதிலிருந்தே துவங்குகிறது. கோட்டை நாவலில், ஒரிடத்தில், காஃப்கா சொல்கிறார்: விழிப்பது என்பது ஒரு நாளின் மிகவும் ஆபத்தான தருணமாகும்.
7. விசாரணை நாவலில் யோசப் க ஒரு புரிந்து கொள்ளமுடியாத சூழலில் சிக்கிக்கொள்கிறான். உருமாற்றத்தில் அறையினுள் கிரிகோர் சாம்சா அடைத்துவைக்கப்படுகிறான். இந்தச் சிக்கிக்கொள்ளுதல் காஃப்காவின் படைப்புகளில் வருகிற ஒரு ஆதாரமான அம்சம்.
குறியீட்டு ரீதியில் காஃப்கா இந்தப் பூமியை ஒரு விசாரணை கூண்டு என்றே பார்க்கிறார். எதற்காக அங்கு நின்றுகொண்டிருக்கிறோம் என ஒருபோதும் அறிய முடிவதில்லை. ஆனால் நம் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவை என்ன என்றும் தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது. அங்கிருந்துதான் காஃப்கா சொல்கிறார்: கூண்டு பறவையைத் தேடிக்கொண்டு செல்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் ரஸ்கோல்நிகோவ் குற்றவுணர்ச்சியினால் தண்டனையை ஏற்றுக்கொள்கிறான் . ஆனால் காஃப்காவில் இது தலைகீழாக உள்ளது. மிலன் குந்தரே தனது கட்டுரையொன்றில் சொல்வது போல தண்டனை முதலிலேயே முடிவாகிவிடுகிறது. குற்றமும் குற்றவுணர்ச்சியும் பின்னால் வருகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் இடம் ஒட்டுமொத்த பூமிக்கும் சேர்த்துப் பாவமன்னிப்பு கேட்பது என்றால் காஃப்காவில் பாவமன்னிப்பு கூட கேட்க இயலாத நிலை உள்ளது. அதாவது தூய அவலம்.
00
குறியீட்டு ரீதியில் காஃப்கா இந்தப் பூமியை ஒரு விசாரணை கூண்டு என்றே பார்க்கிறார். எதற்காக அங்கு நின்றுகொண்டிருக்கிறோம் என ஒருபோதும் அறிய முடிவதில்லை. ஆனால் நம் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவை என்ன என்றும் தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது. அங்கிருந்துதான் காஃப்கா சொல்கிறார்: கூண்டு பறவையைத் தேடிக்கொண்டு செல்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் ரஸ்கோல்நிகோவ் குற்றவுணர்ச்சியினால் தண்டனையை ஏற்றுக்கொள்கிறான் . ஆனால் காஃப்காவில் இது தலைகீழாக உள்ளது. மிலன் குந்தரே தனது கட்டுரையொன்றில் சொல்வது போல தண்டனை முதலிலேயே முடிவாகிவிடுகிறது. குற்றமும் குற்றவுணர்ச்சியும் பின்னால் வருகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் இடம் ஒட்டுமொத்த பூமிக்கும் சேர்த்துப் பாவமன்னிப்பு கேட்பது என்றால் காஃப்காவில் பாவமன்னிப்பு கூட கேட்க இயலாத நிலை உள்ளது. அதாவது தூய அவலம்.
00