சன்னல் கவிதைகள்

Artist: Andrew Wyeth



எந்தச் சன்னலிடமும் நேற்று இல்லை
அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே
நீங்கள் வேண்டுமானால்
‘இதோ வைத்துக்கொள் வைத்துக்கொள்’ என
நேற்றுகளைக் கொடுத்துப் பாருங்களேன்
குளிர்பொறுக்காமல் பனிக்கட்டிகளை நழுவ விடும் பாவனையோடு அவை
அவற்றைத் தவறவிட்டுவிடும்
நேற்றுகளை ஏற்றுவிட்டால்
உலகம் மண்ணோடு மண்ணாய்ப் போய்விடும் என்று
சன்னல்களுக்குத் தெரியும்..

                                                        **

திறந்திருக்கும் சன்னலுக்குள் காட்சிகளின் நதி ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நதியை நீந்திக்கடக்க முயன்று கொண்டேயிருக்கிறாள் ஒருத்தி
கரையை ஒவ்வொருமுறை நெருங்கும்தோறும்
கரை தூரம் தூரம் என சென்றபடியிருக்கிறது
ஆனால் மூடியிருக்கும் சன்னலுக்குள்
இருண்ட பாலைவனம் வளர்ந்துகொண்டிருக்கிறது
அப்பாலையில் மணல் இழுக்க இழுக்க
தன்னை வெளியே எடுத்துக்கொண்டே நடக்கிறான் ஒருவன்
இருவருமே ஒருவரையொருவர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் கட்டியணைத்துக்கொள்ளும்போது
சன்னல்களைத் திறக்கவோ மூடவோ முடியாது

                                                            **

ஒவ்வொரு சன்னலுக்கும் ஒரு எல்லையுண்டு
அந்த எல்லையில் எந்நேரமும்
ரோந்து செல்கிறார்கள் ராணுவ வீரர்கள்
கண்காணிப்புக் கோபுரங்கள் தலையை
இங்கும் அங்கும் அசைக்கின்றன
திடுமென ஒருவரை மாற்றி ஒருவர்
சுட்டுக்கொள்கிறார்கள்
பீரங்கிகள் ஊர்ந்து செல்கின்றன
எரிநட்சத்திரங்கள் வீழ்வதுபோல் நெருப்புக்கட்டிகள் விழுகின்றன
சன்னல்களின் அமைதி உடன்படிக்கையை
காற்று ஒன்றிற்கு இரண்டு முறை படித்துப்பார்க்கிறது ..

                                                                    **