வாஸ்கோ போப்பா கவிதைகள்-2

Artist: Gianni De Conno

1. எதிரொலி

காலி அறை உறுமத்தொடங்குகிறது
நான் எனக்குள் உட்சுருங்கிக்கொள்கிறேன்
அதன் உட்கூரை வலியில் குரைக்கத்தொடங்குகிறது
நான் அதற்கு ஒரு எலும்பை வீசுகிறேன்
அதன் மூலைகள் வள் வள்ளென்று குரைக்கத்தொடங்குகின்றன
ஒவ்வொன்றிற்கும் ஒரு எலும்பை நான் வீசுகிறேன்
அதன் தரைத்தளம் கடுமையாக குரைக்கத்தொடங்குகிறது
நான் அதற்கும்கூட ஒரு எலும்பை வீசுகிறேன்
அதன் சுவர்களில் ஒன்று குரைக்கத்தொடங்குகிறது
அதற்கு ஒரு எலும்பை வீசுகிறேன்
மேலும் இரண்டாவது மூன்றாவது நான்காவது என
சுவர்கள் குரைக்கத்தொடங்குகின்றன
நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு எலும்பை வீசுகிறேன்
காலி அறை ஊளையிடத்தொடங்குகிறது
ஒரு எலும்பும் இருப்பில் இல்லாதவாறு
தீர்ந்துபோயிருக்கிறேன் நான்
அந்த ஊளையின் நூறுமடங்கு எதிரொலியாக உருமாறுகிறேன்
மேலும் எதிரொலிக்கிறேன் எதிரொலிக்கிறேன்
எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறேன்
                      

2. கண்ணாமூச்சு

யாரோ ஒருவன் யாரோ ஒருவனிடமிருந்து ஒளிகிறான்
அவன் அவனது நாவினடியில் ஒளிந்துகொள்கிறான்
மற்றொருவனோ அவனைப் பூமிக்கடியில் தேடுகிறான்
அவன் அவனது நெற்றியில் ஒளிந்துகொள்கிறான்
மற்றொருவனோ அவனை வானில் தேடுகிறான்  
அவன் அவனது மறதியில் ஒளிந்துகொள்கிறான்
மற்றொருவனோ அவனைப் புற்களில் தேடுகிறான்
தேடிக்கொண்டிருப்பவன் தேடிக்கொண்டேயிருக்கிறான்
அவன் தேடாத இடமில்லை
மேலும் அத்தேடலில் தன்னையே தொலைக்கிறான்
  

3. வரவேற்பிற்கான தயாரிப்புகள்

சொர்க்கத்தின் வாசலில் நம் மலரும் எலும்புகளாலான
கதவொன்றை நாம் அமைக்கிறோம்
சொர்க்கச் சரிவின் மேல் நம் ஆன்மாவின் பாதியை
நாம் விரித்துவைக்கிறோம் 
சொர்க்கத்தின் உச்சியில் கல்லாக்கப்பட்ட நம் கரங்களாலான மேசையை
நாம் கற்பனை செய்துகொள்கிறோம்
சொர்க்கத்தின் இன்னொரு சரிவின் கீழ் நம் ஆன்மாவின் இன்னொரு பாதியை
நாம் விரித்துவைக்கிறோம்
சொர்க்கத்தை விட்டு வெளியேறும் வழியில் நம் இலைமயமான இதயத்தாலான படுக்கையை நாம் எழுப்புகிறோம்
இவை எல்லாவற்றையும் நாம் இருட்டில் செய்கிறோம்
தனியாக காலத்தின் உதவியின்றி
நாம் வியக்கிறோம் ஒருவேளை இத்தயாரிப்புகள்
உண்மையாகவே
வரவேற்பிற்காகவா அன்றேல் வழியனுப்புதலுக்கு மட்டுமேவா
     

4. தூர்த்தனாக்குபவர் (The Seducer)

ஒருவன் ஒரு நாற்காலியின் காலினை தடவுகிறான்
அது நகர்ந்து தன் காலால் அவனுக்கு
மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்வரை 
இன்னொருவன் முத்தமிடுகிறான் ஒரு சாவித்துளையை
விடாது அதை முத்தமிடுகிறான்
எந்த அளவுக்கெனில் சாவித்துளையே திருப்பி முத்தமிடும்வரை
மூன்றாமவன் நிற்கிறான்
மற்ற இருவரையும் பார்த்து மீண்டும் மீண்டும்
தலையை ஆட்டுகிறான்
அவனுடைய தலை கீழே விழும்வரை


5. ரோஜாத்திருடர்கள்

யாரோ ஒருவர் ரோஜாச்செடியாக
சிலர் காற்றின் மகள்களாக
சிலர் ரோஜாத்திருடர்களாக
ரோஜாத்திருடர்கள்
ஊர்ந்துசெல்கிறார்கள் ரோஜாச்செடியின் மீது
அவர்களில் ஒருவன் ஒரு ரோஜாவை திருடுகிறான்
அதை அவனது இதயத்தினுள் ஒளித்துவைக்கிறான்
காற்றின் மகள்கள் தோன்றுகின்றனர்
அழகு சூறையாடப்பட்ட செடியை காண்கின்றனர்
மேலும் ரோஜாத்திருடர்களைத் துரத்திச்செல்கின்றனர்
ஒன்றன்பின் ஒன்றாக
திறக்கின்றனர் தங்களுடைய மார்பகத்தை
சிலவற்றில் அவர்கள் ஒரு இதயத்தை
கண்டுபிடிக்கின்றனர்
சிலவற்றில் ஒன்றுக்கும் உதவாததை
ஒரு இதயத்தைக் கண்டுபிடித்து
அவ்விதயத்தினுள்ளிருந்து திருடப்பட்ட ரோஜாவை
அவர்கள் கண்டுபிடிக்கும் வரை
தொடர்ந்து தங்களுடைய மார்பகங்களை
அவர்கள் திறந்துகொண்டேயிருக்கிறார்கள்
                    

6. திருமணம்

ஒவ்வொருவரும் தமது தொலியை உரிக்கிறார்கள்
ஒவ்வொருவரும் ஒருபோதும் இரவில் பார்க்கப்படாத
அவனுடைய நட்சத்திரக்கூட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்
ஒவ்வொருவரும் தமது தொலியை கற்களால் நிரப்புகிறார்கள்
ஒவ்வொருவரும் அவனுடைய சொந்த நட்சத்திர ஒளியால்
அதனுடன் நடனமிடத் தொடங்குகிறார்கள்
எவன் விடியல் வரை நிறுத்தவில்லையோ
எவன் மிளிரவோ வீழவோயில்லையோ
அவன் அவனுடைய தொலியை ஈட்டுவான்
(இந்த விளையாட்டு அரிதாக விளையாடப்படுவது)
       

வாஸ்கோ போப்பா (1922-1991):

"ஒரு பிரபஞ்சம் இன்னொரு பிரபஞ்சத்தினூடாகச்  செல்கிறது"
இது செர்பியாவை சேர்ந்த கவிஞரான வாஸ்கோ போப்பாவின் கவிதைகளைக் குறித்து டெட் ஹூயுஸ் சொன்னது. இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்டு பின்பு அதனால் போர் முடியும்வரை நாஜிக்களால் வதைமுகாமில் சிறைபிடிக்கப்பட்டவரான வாஸ்கோ போப்பாவின் கவிதைகள் செர்பிய நாட்டார் மரபும் சர்ரியலிசமும் பிணைந்து வழக்கமான  சுழற்சிகளாலும் விளையாட்டுகளாலும் நிறைந்து விநோதமாக எழுபவை. 1953ல் அவருடைய Kora என்ற முதல் தொகுப்பு வெளிவருகிறது.  இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய சமூக யதார்த்தத்தின் "மிகக்கடுமையான" குரலை அவருடைய கவிதைகளின் கேட்கமுடிவதில்லை. (ஆனால் மானுடத்தின் மீதான கருணையை ஒரு விநோதமான குரூரத்தின் வாயிலாக மீட்டுக்கொள்வது அவருடைய கவிதைகளின் அரசியல் நிலைப்பாடாக உள்ளது.) மாறாக செர்பிய நாட்டார் பாடல்களின் ஐதிகங்களின் கதாபாத்திரங்களையும் அதன் விந்தைத்தன்மையையும் பயன்படுத்தி ஒரு குறியீட்டுதளத்தில் அதை ஈடுசெய்துவிடுகிறார். Kora, No-Rest Field என ஒன்பது தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் செர்பிய நாட்டார் இலக்கியம் குறித்த திரட்டு ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். . இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதைகள் Vasko Popa Complete poems 1953-1987: Translated by Anne Pennington and Francis R. Jones நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
..

நன்றி: சொற்கள் இதழ் 03

00