அலைகளை எண்ணுபவன்

Artist: Gabriel Guerrero Caroca

1.அலைகளை எண்ணுபவன்

உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே

கடற்கரைக்கு வருகிறான்

கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் தேயிலைப் பையெனத்

தொலைவில் அமிழ்ந்து கொண்டிருக்கிறான் சூரியன்

அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு

எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும்

ஈரமணலில் உட்கார்ந்து

அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான்

பின்னர் எண்ணத்தொடங்குகிறான்

ஒன்று..இரண்டு..தனிமை..மூன்று..நான்கு..

வந்துகொண்டே இருக்கின்றன அலைகள்

மிகத்தனிமையான அலைகள்

**

 


2.கறுப்புக் காகிதம்

நீளக்காகிதங்களை நிறையவே தீர்த்திருக்கிறேன்

நீங்களும் பயன்படுத்தி இருப்பீர்கள்

சோவென வெய்யில் பெய்கிறது

வெறுமையை மூக்குக் கண்ணாடி போல அணிந்தபடி

பரபரப்பான மேம்பாலத்தில் நிற்கிறேன்

கீழேயும் ஒரு காகிதம் இருக்கிறது

கறுப்புக்காகிதம்..

எவரென்று தெரியவில்லை,

வாகனங்களையும் மனிதர்களையும் விலங்குகளையும் எழுத்துருவாக்கி

தாறுமாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்

அடுத்தப் பக்கத்தில் என்ன எழுதுவார்

எனக்கு ஆர்வம் பொறுக்கவில்லை

**


3. நீல வதனம்

கட்டிடங்கள் அண்ணாந்து பார்த்து

நிற்கின்றன ஈஸ்டர் தீவத்து ராட்சதர்கள் என

கான்கிரீட் கழுத்துகளுக்கு வலியே கிடையாதா?

அப்படி என்னதான் இருக்கிறது நீல விசும்பில்

அதுவுமிந்த பட்டப்பகலில்

ஜன நெரிசல் வீதியில்

நானும் நடக்கிறேன் அண்ணாந்து பார்த்தபடி.

இன்னும் இன்னும் என நீளும்

ஒரு பார்வையின் உதரக்கொதிதான்

இப்பொருள்வெளியா . . .

என்னைப் பார்த்து இன்னொருவர்

அவரை நினைத்து பிறிதொருத்தி

கண்டவர் எவரும் கூறக்கூடும்

இப்பொழுது

இவ்வீதியே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது என்று

ஒருகணம் எனக்குத் தோன்றிற்று:

கும்பலாய் இப்படி வெறித்துப்பார்த்தால்

நம்மைக் குறித்து அவ்வானம்தான் என்ன நினைக்கும்

இல்லை கூச்சத்தில் நீலவதனம்தனை பொத்திக்கொண்டால்

நாம்தான் என்ன செய்வோம்

**

நன்றி : காலச்சுவடு - நவம்பர் 2019