சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும் -சார்லஸ் சிமிக்


பிரக்ஞையுணர்வே நமக்குத் தெரிந்த ஒரே இல்லம்.

-டிக்கின்சன்


எமிலி டிக்கின்சனின் கவிதைகளைக் குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம் பிரபஞ்சவியலுடனும் அரங்குகளும் பொம்மைகளும் உளவியலுடனும் தொடர்புள்ளதாகத் தோன்றுகிறது. நிச்சயமாக அவை நெருங்கிய தொடர்புடையவை.

தனித்த அபரிதமான பிரக்ஞையுணர்வே டிக்கின்சனின் மாறாத அக்கறை எனலாம். கடைசியில் தன் அறையில் மணிக்கணக்காக அமர்ந்து கண்களை மூடி உள்முகமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவளைக் கற்பனை செய்துபார்க்கிறேன். பிரக்ஞையோடு இருப்பது என்பது ஏற்கனவே பகுப்படைந்து, பெருக்கமடைந்தும் விடுகிறது. அங்கே நானுக்குள் எண்ணற்ற நான்கள் உள்ளன. ஒட்டுமொத்த உலகும் நம் உள்ளறைக்குள் வருகிறது. தரிசனங்களும் புதிர்களும் ரகசிய எண்ணங்களும். “இதெல்லாம் எவ்வளவு விசித்திரமாக உள்ளது!” என டிக்கின்சன் அவளுக்கு அவளே கூறியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரபஞ்சமும் வேறு சில பிரபஞ்சத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அவள் பெட்டிகளையும் பன்டோராவின் பெட்டிகளையும் திறக்கிறாள். ஒன்றில் பயங்கரம் இருக்கின்றது; அடுத்ததில் பிரமிப்பும் பரவசமும் இருக்கின்றது. அவளால் பெட்டிகளைத் தனியாக விடமுடிவதில்லை. அவளுடைய கற்பனையும் சத்தியத்தின் மீதான காதலும் அவளுக்கு எதிராகச் சதி செய்கின்றன. அங்கே நிறையப் பெட்டிகள் இருக்கின்றன. அடிக்கடி, கடைசிப் பெட்டியை அடைந்துவிட்டோம் என்று அவளே கூட நம்பியிருக்கக்கூடும் ஆனால் உன்னித்த உற்றுநோக்கலில் இன்னொரு பெட்டி இன்னும் இருக்கிறது என்பதை அது நிரூபித்திருக்கும். தோற்றங்கள் ஏய்க்கின்றன. அதுதான் படிப்பினை. இந்தத் தந்திரம், அவள் மீது தொழிற்படுவதைப் போலவே விஷயங்களின் சத்தியத்தை அடைய விரும்பும் நம் எல்லோரின் மீதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது.

மேலேயிருக்கிறது அதனால் கீழேயும்” என்றார் ஹெர்ம்ஸ் ட்ரிஸ்மெஜிஸ்டஸ். எமர்சனும் அவ்வாறே எண்ணினார். தெளிவும் உச்சபட்சமான புரிதலும் நம் இருப்பின் முதன்மையான சட்டத்தினைக் குறித்த அறிதலை அடைய உதவும் என்று அவர் நம்பினார். டிக்கின்சனின் சுய அனுபவம் மிக வித்தியாசமானதாக இருந்தது. அவளுக்கு சுயம் என்பது முரண்தோற்றமெய்களின், முரண்தொடைகளின்  முடிவேயில்லாத கருத்துமயக்கங்களின் இடமாக இருந்தது. அவள் இவற்றில் ஒவ்வொன்றையும் எமர்சன் தன்னுடைய தெளிவுகளை வரவேற்றதைப் போல வரவேற்றாள். அவள் நமக்குச் சொல்கிறாள் “சாத்தியமற்றது என்பது மகிழ்விக்கும் ஒயினைப் போன்றது.”

அவளுக்கு இறைவனில் நம்பிக்கை இருந்ததா? ஆமாமும்தான் இல்லையும்தான். கடவுள் என்பது மற்ற பெட்டிகளினுள் பொருந்தும் இந்த எல்லாப் பெட்டிகளின் தந்திரமாக இருக்கலாமா? கிட்டத்தட்ட,  அவளுக்குக் கடவுள் என்பதும் இன்னொரு பெட்டிதான். மிகச் சிறியதுமில்லை கற்பனைக்குட்பட்ட பெரியதுமில்லை. அங்கே எத்தனை பெட்டிகள் உள்ளன என்று கடவுளுக்குக்கூடத் தெரியாது. ஒவ்வொரு பெட்டியினுள்ளும் ஒரு அரங்கம் உள்ளது.. நிழல்கள், சுயத்தின் வார்ப்புகள், உலகம், முடிவற்ற பிரபஞ்சம். நாடகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, ஏறக்குறைய எப்போதும் ஒரே நாடகம். பின்புல காட்சி அமைப்புகளும் உடையலங்காரம் மட்டும் பெட்டிக்கு பெட்டி மாறுகின்றது. பொம்மைகள் மாபெரும் கேள்விகளை நிகழ்த்திக்காட்டுகின்றன அல்லது டிக்கின்சனே அவை தங்களை நிகழ்த்திக்காட்டுவதற்கு அனுமதிக்கவும் செய்கிறாள். கட்டுண்டவள் போல அமர்ந்து நாடகத்தினைப் பார்க்கிறாள்.

சில அரங்கங்கள் கிறிஸ்தவ அமைவை பெற்றிருக்கின்றன. அங்கே கடவுளும் அவருடைய மைந்தரும் இருக்கின்றனர். அங்கே நித்தியத்துவமும் உண்டு பரலோகத்துச் சர்ப்பமும் உண்டு. சுவர்க்கம் அவளுடைய ஒரு கவிதையில் சர்க்கஸ் போலயிருக்கிறது. சர்க்கஸ் போனதும் வெட்டவெளியை வெறிப்பது மட்டும் எஞ்சியிருக்கிறது. மற்றநேரங்களில் எமிலி டிக்கின்சனின் வேட்கையும் புனித உயிர்த்துறவும் கூடாரத்திற்கு கீழும் திறந்த வானத்துக்கு கீழும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பொம்மைகளுக்கிடையே நிஜமான துயரம் இடம்பெறும்வரை அங்கு எந்தக் கேள்வியுமில்லை.


மற்ற சில அரங்கங்களில் பின்புல காட்சி அமைவுகள் டி சிரிகோ-வினால் வரையப்பட்டவை. இருண்மையான பெயர்ச்சொல்கள் பெரிய எழுத்தில் எழுதப்பட்டு நேர்க்கோடுகள் மற்றும் மறையும் புள்ளிகளின் மீமெய்யியல் நிலவெளிக்கு எதிராக உருவகமாக்கப்படும் ஒரு நாடகத்தினை நாம் காண்கிறோம். மறைகுறியீடுகளும் அல்ஜீப்ராக்களும் மைல்கணக்கான இன்மையில் சேர்ந்து உலாவியபடி உரையாடுகின்றன. அவள் சொல்கிறாள் “உண்மை நழுவக்கூடியது மேலும் இரக்கமற்றது”. சில்வியா ப்ளாத் சந்தேகப்பட்டதைப் போல உண்மை என்பது பீதியுட்டும் மனித உருப்படிவம்தான். இது மீமெய்யியல் பயங்கரங்களின் அரங்கம்.

மரணம் எல்லா நாடகத்திலும் இருக்கிறது எனவே அவளும் இருக்கிறாள். மரணம் பெட்டிகளைத் திறக்கையில் மற்ற பெட்டிகளைப் பாக்கெட்டில் ஒளித்துவைக்கும் விழாத்தலைவனைப் போலயிருக்கிறது. சுயம் பிளவுபடுகிறது. டிக்கின்சன் மேடையிலும் இருக்கிறாள் பார்வையாளாராகத் தன்னைப் பார்த்துக்கொண்டு இருப்பவளாகவும் இருக்கிறாள். “ஆன்மாவிற்கும் யாருமாகவும் இல்லாத மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தினை” நாம் எல்லோரும் பார்க்கிறோம்.

அவள் இவை அனைத்தையும் ஒரு தன்னுணர்ச்சிக் கவிதையினுள் நிகழ்த்திவிடுகிறாள் என்பது திகைப்பிற்குரியது. டிக்கின்சனில் ஒரு சிறு கவிதை பிரபஞ்சவியலை உருவாக்கி கலைத்துப் போடுவதை நாம் பார்க்கிறோம் . கவிதையையும் நம் பிரக்ஞையுணர்வையும் அவள் ஒரு அரங்கமாகவோ அல்லது பல அரங்கங்களாகவோ புரிந்துகொள்கிறாள் .
“என்னைத்தவிர அரியட்னேவை யாருக்குத் தெரியும்” என்று நீட்ஷே எழுதினார். எமிலி டிக்கின்சனுக்கு அவரைவிட நன்றாகத் தெரியும்.

000

சார்லஸ் சிமிக் (1938-2023)

செர்பியாவில் பிறந்தவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இரண்டாம் உலகப் போரினூடாகத் தன் பால்யத்தைக் கழித்தவர். பின்னாளில் அமெரிக்காவிற்கு குடியேறியவர். Hotel Insominia, The world doesn’t end எனப் பத்திற்கும் மேற்பட்ட கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஸ்டாலினும் ஹிட்லருமே என்னுடைய பயண முகவர்கள் எனச் சொல்லும் சிமிக்கின் கவிதையுலகம், போரில் சிதைந்த பெல்கிரேட் நகரின்  இருண்ட மற்றும் கேலிக்குரிய பக்கங்களாலும் நவீன மனிதன் எதிர்கொள்ளும் ஆன்மிகரீதியினாலான வறுமையின் விளைவுகளாலும் ஒரு சிறுவனின் பேய்க்கனவுகளாலும் ஆனது. நோவிகா டாடிச் , வாஸ்கோ போப்பா போன்ற செர்பிய கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து தொகுப்பாக வெளியிட்டுள்ளார். மேலும் Horse has six legs எனும் தலைப்பில் சமகால செர்பிய கவிதைகளின் திரட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கட்டுரை அவருடைய The Life of Images: Selected prose நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை எமிலி டிக்கின்சனின் கவித்துவம் குறித்த உரைநடையில் அமைந்த தியானம் எனலாம். கவிதைகளைக் குறித்து எழுதுவது என்பதற்கு மாறாக கவிஞனின் மனோநிலை என்னவாக இருந்தது எனும் அணுகுமுறையைக் கொண்ட கட்டுரை. இந்த அணுகுமுறைக்காகவும் எமிலி டிக்கின்சனின் மீதான இன்றைய வாசிப்பின் அவசியம் கருதியும் இக்கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
000

குறிப்புகள்:

1. ஹெர்ம்ஸ் ட்ரிஸ்மெஜிஸ்டஸ் (Hermes Trismegistus) – ஹெர்மெட்டிகா எனும் கிரேக்க எகிப்திய மறையியல் நூலின் ஆசிரியர். மந்திரவாதி. ரசவாதி என்றும் அறியப்படுபவர். “மேலேயிருக்கிறது அதனால் கீழேயும்” என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகம். அப்பாலும் இப்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது அவருடைய படைப்புகளின் சாரம்சமாக அமைகிற கருத்தாகும்.

2. ரால்ப் வால்டோ எமர்சன் (1803-1882)-அமெரிக்காவினை சேர்ந்தவர். சிந்தனையாளர். கவிஞர். ஆழ்நிலைவாதம் என அழைக்கப்படும் சிந்தனையை முன்னெடுத்துச் சென்றவர். தனிமனிதன் எல்லையற்றவன், ஆன்மாவும் இயற்கையையும் உள்ளடக்கிய மகத்தான தொகுப்பே பிரபஞ்சம் போன்றவை அவருடைய சிந்தனையின் அடிநாதங்கள்.

3. ஜியார்ஜியோ டி சிரிகோ (Giorgio de Chirico) – இத்தாலியை சேர்ந்த கலைஞர். மீமெய்யியல் ஓவிய இயக்கத்தின் முன்னோடி. நீளும் நிழல்கள், அதர்க்க காட்சிகள், மனித உருப்படிவங்கள் இவைகளால் ஆனது அவருடைய ஓவியங்களின் உலகு. வெட்டவெளி எங்கும் இருப்பவைதான் எனக் கிசுகிசுப்பவை  அவருடைய ஓவியங்கள்.

4. அரியட்னே – கிரேக்க தொன்மவியலில்  சுழற்பாதைகளுக்கான தெய்வம். பாதி காளையாகவும் பாதி மனிதனாகவும் இருந்த மினோட்டாரை கொல்லவும் சுழற்பாதையைக் கடக்கவும் தீஸியஸுக்கு உதவியவள்.
00

நன்றி: கனலி

Comments