யான் காப்லின்ஸ்கி கவிதைகள்
எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி;
சிலசமயங்களில் சாதாரணமாய்
நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக:
புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி,
களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி,
மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி;
எல்ம் மரக்கிளையை இடையறாது
வட்டமடிக்கிறது ஒரு வெளுத்த அந்துப்பூச்சி;
அம்மரக்கிளையோ புலப்படாதவாறு
இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது மாலைவானப் பின்னணியில்.
அந்தி கொள்ளையடிக்கிறது
நம் எல்லா முகங்களையும் பெயர்களையும்,
எஞ்சியிருப்பது ஒளிக்கும் இருளுக்குமான பேதம் மாத்திரமே.
ஒரு நடுவேனிற்கால ராத்திரியின் இதயம்:
மேசை மேல் ஒரு பழைய கைக்கடிகாரம்
திடுமெனத் துடிக்கிறது ஆகப் பயங்கரமான சப்தத்துடன். .
2
பனி உருகிக்கொண்டிருக்கிறது.
நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது.
காற்றடித்துக்கொண்டிருக்கிறது. (மெதுவாக)
கிளைகள் அசைந்துகொண்டிருக்கின்றன.
அடுப்பில் நெருப்பு.
வெம்மையூட்டிகள் வெதுவெதுப்பாய்.
அனு பியானோவில் தன் பயிற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறாள்.
ஓட்டும் தாம்பெத்தும் பனிமனிதனை வனைந்துகொண்டிருக்கிறார்கள்.
மார்ஜா மதிய உணவை தயாரித்துக்கொண்டிருக்கிறாள்.
சாளரத்தினூடே உள்ளே பார்த்துக்கொண்டிருக்கிறது மரக்குதிரை.
நான் சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும் ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் எழுதுகிறேன் இன்று ஞாயிறு என்று.
மேலும் எழுதுகிறேன்
பனி உருகிக்கொண்டிருக்கிறது என்றும்,
நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது என்றும்,
காற்றடித்துக்கொண்டிருக்கிறது என்றும்,
மேலும் இதுபோல் இன்னும் பலவற்றையும்.
3
உலகம் ஒரு ஒற்றை நிகழ்வு.
அந்நிகழ்வுகளுக்கு ஆரம்பமுமில்லை ஈற்றுமில்லை.
காற்று ஓக் மரயிலைகளை நகர்த்துகிறது.
ஓக் இலைகளும் காற்றில் நகர்கின்றன.
உண்மையில்,
ஓக் இலைகளுக்கும் காற்றுக்கும் இடையே எந்த எல்லையுமில்லை,
காற்றுக்கும் அது நகர்த்தும் இலை கிளைகளுக்கும் இடையே எந்தப் பேதமுமில்லை,
காற்றுக்கும் இக்காற்றோட்டமான நாளுக்கும் இடையே
பருவநிலை மாறுகையில்
திடுமென நீங்கள் கண்டுகொள்வீர்கள்
இலைகள் மற்றும் காற்றின் ஒருமையையும்
ஓக் மரத்திலிருந்து உங்கள் தலையில் தவறிவிழும்
ஒரு சிறு பச்சை வண்டின் ஒருமையையும்
4
உலகத்தின் மையம் இங்கே உள்ளது,
மான்செஸ்டரில்.
நான் என்னுடன் அதை எடுத்துச்செல்கிறேன்
நாம் எல்லோரும் செய்வதைப்போல.
உலகத்தின் மையம் எனை
கிழிக்கிறது, பூச்சியின் உடலை ஒரு ஊசி கிழிப்பதுபோல .
உலகத்தின் மையம் வலி.
5
ஒரு கடைசி மேகம் வானில்
சென்றுகொண்டிருக்கிறது மேற்கிலிருந்து கிழக்காக.
ஒரு கடைசித் தேனீ பெட்டகத்தினுள் இறங்குகிறது .
ஒரு கடைசிப் பறவை தோட்டத்தில் பறந்து
ஊசியிலை மரவரிசையினுள் செல்கிறது.
வானத்துப் பின்னணியில்
விரையும் அதன் திண்ணிழலுருவத்தையும்
அது மறைந்து கொள்ளும்
அசையும் கிளையையும் மாத்திரமே
அசையும் கிளையையும் மாத்திரமே
நான் பார்த்தேன்.
அங்கே ஒரு கூடு இருக்கிறதா?
மெல்ல மெல்ல நெருங்குகிறது வயல்ப் பறவையின் குரல்.
இப்போது அது வேலியின் பின்னிருந்து வருகிறது.
சாலையோர புல்வெளியிலிருந்து
அதற்குப் பதில்கூறுகிறது இன்னொரு வயல்ப் பறவை.
அவர்கள் ஒருவரையொருவர் இன்னொரு இரவில் சந்திக்கக் கூடும்.
ஒருவேளை நாளைய இரவிலேயே
*
*
யான் காப்லின்ஸ்கி ( 1941-2021) எஸ்டோனியாவின் டார்த்து பகுதியில் பிறந்தவர். அவருடைய தாயார் எஸ்டோனியாவை சேர்ந்தவர். தந்தை போலாந்து நாட்டுக்காரர். அடிப்படையில் காப்லின்ஸ்கியின் ஆளுமை பலகுரல் தன்மை கொண்டது. கவிஞர், தத்துவவாதி , சூழலியலாளர், மஹாயான புத்தத்தின் மாணவர், கலாச்சார விமர்சகர். காப்லின்ஸ்கியின் கவிதைகள் சலிப்பின்றி மையம் கொள்வது இயற்கையிலும் சுயம் இயற்கையில் அடையும் இடம் குறித்த தியானத்திலுமே. தாவோ தே ஜிங்யையும் சீன செவ்வியல் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். The wandering border, Evening brings everything back போன்ற கவிதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
•
நன்றி : கனலி இணைய இதழ்-1
Comments
Post a Comment