வாஸ்கோ போப்பா  கவிதைகள்-1



1. எலுமிச்சை மரத்து ஆவிகள்

என் சொந்த ஊரைச்சேர்ந்த கட்டுமானப் பணியாளரால்
மறக்கயியலாது
வீதியிலிருந்த மரங்களின் சாலையில் விழுந்ததை

அவர் தனது கண்களைக் கரங்களால்
பொத்திக்கொண்டார்

என் கனவிலோ நான் தாக்கப்படுகிறேன்
எலுமிச்சையிலைகளை இறக்கைகளாக கொண்ட புள்ளினங்களால்

**

 2. மனிதனின் நான்கு சக்கரங்கள்

ராத்திரியும் பகலுமாக
என் பிரியத்திற்குரிய நண்பனை பைத்தியமாக்குகிறது
எங்களுடைய வீதியின் இரைச்சல்

தன் செவிகளைச் சுற்றி
கைகளால் அவன் வட்டங்களை வரைகிறான்
மேலும் என்னிடம் சொன்னான் அவனுடைய கனவை

என் புயங்களிலிருந்தும் இடுப்பிலிருந்தும்
நான் சக்கரங்களை வளர்த்திருந்தேனாம்

இங்கே தெருவின் மூலையில்
ஏனைய வாகனங்களோடு
நான் வரிசையில் முறுக்கிக்கொண்டபடி
புறப்படுவதற்கான பச்சை விளக்கிற்காக
காத்துக் கொண்டிருந்தேனாம்

**

3. காதலின் பிரகடனம்

அரைச்சாந்துகளின் துணிக்கட்டுகளின் உடைந்த
பொம்மைகள் நாம்
ஆஸ்பத்திரி வரவேற்பறையை நிரப்புகிறோம் 

ஒரு பொம்மை நம்மில் நம்பிக்கை வைக்கின்றது
அவள் ஒரு தொழிற்சாலை பெண்
இயங்கிக்கொண்டிருக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்ய முயன்று
தனது வலதுகையைப் பறிகொடுத்தவள்

அவளுடையவர்களுக்குத் தெரியவில்லை
எப்படி அவளுக்கு ஆறுதலுரைப்பதென்று

கவலைப்படாதே என் காதலுக்குரியவளே
இப்போதிருந்து
உனை அரவணைத்துக் கொள்கிறேன்
என் மூன்று கரங்களால்

**

4. பெல்கிரேட்

மேகங்களுக்கு இடையில் வெள்ளை எலும்பு
நீ உன் சிதையைவிட்டு எழுகிறாய்
உன் புதைமேட்டை விட்டும்
உன் சிதறடிக்கப்பட்ட சாம்பல்களிலிருந்தும்
உன் மறைவிலிருந்து நீ எழுகிறாய்

சூரியன் உன்னை வைத்துக்கொள்கிறது
நூற்றாண்டுகளின் வள்ளொலிக்கு உயரேயிருக்கும்
தன் சொர்ண நினைவுப்பேழையில்
மேலும் உனை எடுத்துச்செல்கிறது
சொர்க்கத்தின் நான்காவது நதிக்கும்
பூமியின் முப்பத்தியாறாவது நதிக்குமான திருமணத்திற்கு

மேகங்களுக்கு இடையில் வெள்ளை எலும்பு
நம் எலும்புகளின் எலும்பு

**

 5. அச்சமற்ற கோட்டைக் கோபுரம்

அனுதினமும் சொர்க்கத்தின் நதியில்
உன் நிர்வாண பிரதிபலிப்பை
நீ பார்க்கின்றாய்

நீ திரும்பி வந்து வெண்ணிற நகரத்திற்கு
திறந்து காண்பிக்கின்றாய்
உன் எட்டு கற்தொடைகளை

சூரியனின் பரம்பரைச் சொத்துக்காக
எல்லா இரவுகளிலும் நீ வானத்தினூடாகப் பறந்து
சண்டையிடுகிறாய் கறுப்பு நெருப்புடன்

விடியலில் மீண்டும் நதிக்கரையில்
பிரகாசிக்கின்றாய்

உன் எட்டு முகங்களிலிருந்தும்
உதிரச்சுவட்டினை துடைக்கின்றன
தீவட்டிப் புறாக்கள்

நீ யாருக்கும் அஞ்சுவதில்லை
ஆனால் உன் தந்தையான
இடியோனுக்கு ( Thunderer) மட்டும் பயப்படுகின்றாய்

**

நன்றி : சிறுபத்திரிகை இதழ்-2