சில மொழிபெயர்ப்புக் கவிதைகள்-1



Artist: Remedios Varo


 1
வெடிகுண்டு நகரத்திடம் சொன்னது:
"நான் விழுந்துகொண்டிருக்கிறேன்"
நகரம் கேட்டது:
"நீ யாருடைய பக்கம்?"
வெடிகுண்டு சொன்னது:
"நான் யாருடைய பக்கமுமில்லை, நான் விழுந்துகொண்டிருக்கிறேன்"
நகரம் சொன்னது:
"உன்னைச் சுற்றிப்பார்"
வெடிகுண்டு கூறியது:
"காலம் கடந்துவிட்டது"
நகரம் எதுவும் சொல்லவில்லை..
    - நினா கோஸ்மான் (ரஷ்யா)

**


2.இப்போது என்னால் ....


இப்போது என்னால் பழைய ஷூக்களை மட்டுமே அணியயியலும்.
நான் நடக்கும் சாலையும் ஷூக்களை அணிந்துகொள்கிறது முதலடியிலிருந்து.
ஆனால் பழைய ஷூக்களை மட்டுமே
அதற்காக என்னை வசைபாடாதே என் சாலையே,
என் சாலை வருமிடம் வரைமட்டுமே அவர்களும் வருவார்கள்.
அதற்குப் பிறகு,
நீ வெறுங்காலில்தான் தொடர்ந்தாகவேண்டும்.
-ராபர்டோ யூவாரோஸ் (அர்ஜென்டினா)

**

3. காதலுக்குப் பிறகு காதல்


அந்தக் காலமும் வரும்
அப்போது, மனக்களிப்புடன்
நீயே வரவேற்பாய் உன் வீட்டுக்கு வரும் உன்னை,
ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிச் சிரித்தபடியிருப்போம்
உன் நிலைக் கண்ணாடியில்.
இங்கே உட்கார்ந்து சாப்பிடு என்பாய்.
உன் சுயமாய் இருந்த
அந்த அந்நியனை மீண்டும் காதலிப்பாய்.
அவனுக்கு மது ஊற்றிக் கொடு. ரொட்டியை எடுத்துக்கொடு.
உன் இதயத்தை,
அதனிடமே திருப்பிக் கொடு,
உன் வாழ்நாள் முழுவதும்
உன்னைக் காதலித்த அந்த  அந்நியனிடம் கொடு,
எவனைப் பிறருக்காகப் புறக்கணித்தாயோ அவனிடம் கொடு,
உன்னை இதயப்பூர்வமாக அறிந்தவனிடம்  கொடு.
புத்தக அலமாரியிலிருந்து காதல் கடிதங்களை,
புகைப்படங்களை, விரக்தியில் எழுதிய குறிப்புகளை, அழித்துவிடு.
உன் பிம்பத்தை நிலைக்கண்ணாடியில் இருந்து உரித்தெடு.
உட்கார். உன் வாழ்க்கையைக் கொண்டாடு
- டெரக் வால்காட் (மேற்கிந்திய தீவுகள்) 

**


4. எதை முதலில் நீக்குவது...



எதை முதலில் நீக்குவது:
நிழலையா சரீரத்தையா,
நேற்றெழுதப்பட்ட சொல்லையா அல்லது இன்றெழுதப்பட்ட சொல்லையா,
மேகஞ்சூழ்ந்த தினத்தையா அல்லது பளீரென்ற தினத்தையா?
ஒருவன் வரிசையைக் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
உலகத்தை நீக்க கற்றுக்கொள்வது
கூடியவிரைவில் நம்மை நீக்கிக்கொள்ள நமக்கு உதவும்.
-ராபர்டோ யூவாரோஸ் (அர்ஜென்டினா)

**

பின்குறிப்பு:

சிலசமயம் வாசித்துக்கொண்டிருக்கையில் மிகவும் பிடித்துபோன கவிதைகளை அக்கணமே மொழிபெயர்க்கத் தொடங்கிவிடுவதுண்டு. கவிதைகளை மொழிபெயர்த்தல் என்பது அக்கவிதையை இன்னும் ஆழமாக நெருங்கிப்போவது என்று நம்புபவன் நான். இவற்றை மொழிபெயர்க்கும் போதும் எனக்கேயான ஏதோவொன்று இவற்றில் இருப்பதாகப் பட்டது. வேறுவேறு மனநிலை. வேறுவேறு சூழல். ஏதோ பிடிபடுவது போலத்தோன்றுகிறது. நல்லது. நல்லது.