குரல்கள்- அன்டோனியோ போர்ச்சியோ



Artist: Blake




1

எனக்கு ஒரு கதவு திறக்கின்றது.
நான் உள்நுழைகையில் எதிர்கொள்கின்றேன் நூறு மூடிய கதவுகளை.


2
எனது சாலையில் பயணிப்பதற்குமுன் நானே எனது சாலை.


3
மலர்கள் அவநம்பிக்கையுள்ளவை.
ஏனென்றால் நம்பிக்கை என்பது நாளைக்குரியது ஆனால் மலர்களுக்கோ நாளையே கிடையாது.


4
நம்மை இறுக பிணைக்கும் சங்கிலிகள்
ஒருகாலத்தில் நாம் நொறுக்கியவையே.


5
தனது ரொட்டியைச் சொர்க்கமாக்குகிறவன் தன் பசிக்கு ஒரு நரகத்தை உண்டுபண்ணுகின்றான்.


6
ஒரு பெரிய இதயத்தை மிகச்சிறியனவற்றால் நிரப்பிவிடமுடியும்


7
ஒவ்வொரு பொம்மைக்கும் உடைபடுவதற்கு உரிமையுண்டு.



8
பிரிவிற்கான அச்சமே சகலத்தையும் ஒன்றிணைக்கின்றது.



9
இதயத்தைக் காயப்படுத்துவது அதை உருவாக்குவதற்கே.




10
எப்பொழுது ஒருவனால் சாத்தியமற்றதை விரும்ப முடியாமல் போகிறதோ,
அப்போது அவனுக்கு எதையும் விரும்பயியலாமல் போய்விடுகின்றது.  


11
என் அருகே ஒன்றுமில்லை ஆனால் தூரமிருக்கிறது


12
மானுடத் துயரம் துயில்கொண்டிருக்கும்போது வடிவற்றது.
ஒருவேளை அது விழித்துக்கொண்டாலோ விழிப்பவனின் உருவெடுத்துக் கொள்கின்றது.


13
என்னுடைய மெளனத்தில் என் குரலை மட்டும் காணவில்லை.


14
நூறு வருடம் ஒரு கணத்தில் இறக்கின்றது, ஒரு கணம் ஒரு கணத்தில் இறப்பது போல.


15
விருட்சம் தனியாகயிருக்கிறது, முகில் தனியாகயிருக்கிறது.
ஒவ்வொன்றும் தனியாகயிருக்கிறது நான் ஏகாந்தமாயிருக்கும்போது


16
துயரம் நம்மைப் பின்தொடர்வதில்லை, அது நமக்கு முன்னே செல்கின்றது



17
முக்கியமானவையும் முக்கியமற்றவையும் ஆரம்பத்தில் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன


18
அந்தகன் தன் தோளில் நட்சத்திரத்தை சுமந்து செல்கின்றான்


19
முழு வெளிச்சத்தில் நாம் நிழல்கூட இல்லை!


20
நான் சொர்க்கத்திற்குச் செல்வேன் ஆனால் என் நரகத்தையும் அங்கு எடுத்துச்செல்வேன், நான் தனியே போகமாட்டேன்


21
எல்லாவற்றையும் காலியாகக் காண்பவனுக்கு, அனைத்தும் எதனால் நிரப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வது பக்கத்தில் இருக்கிறது


22
இரவில் சிலசமயங்களில், நான் பார்க்காமலிருப்பதற்காக விளக்கை ஒளியேற்றுவேன்.


**


அன்டோனியோ போர்ச்சியோ (1885- 1968) 

அர்ஜென்டினாவை சேர்ந்த கவிஞர். Voices என்ற தலைப்பில் நுண்மொழிகளின் தொகுப்பு நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூல், தாவோ, ஜென், காஃப்கா, வில்லியம் ப்ளேக் போன்ற குரல்களின் கூட்டும் அன்டோனியோவின் தனிக்குரலும் கலந்த அதன் தத்துவார்த்த தியானத்தன்மைக்காகப் பரவலாகக் கவனிக்கப்பெற்றது. (இவரைப் படிக்கையில் குஞ்ஞுண்ணி மாஸ்டரின் நினைவும் வருகிறது.) அர்ஜென்டினாவின் முன்னணி கவிஞரான ராபர்டோ ஜூவரோஸின் நெருங்கிய நண்பர். ராபர்டோ ஜூவரோஸின் கவிதைகளில் அன்டோனியோவின் எதிரொலியை கேட்கமுடியும். இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பவை Voices: Translated by W.S.Merwin என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை

Comments