இரண்டு உரைநடைக் கவிதைகள்


Artist: Remedios Varo

1) பெயர் 

       -  தாமஸ் ட்ரான்ஸ்ரோமர்




காரோட்டும்போது எனக்குத் தூக்கம் சொக்கிக் கொண்டுவர சாலையோரத்திலிருந்த ஒரு மரத்தினடியில் நிறுத்தி பின்னிருக்கையில் சுருண்டு உறங்கினேன். எவ்வளவு நேரத்திற்கு? மணிநேரங்களுக்கு. இருட்டி  விட்டிருந்தது.


திடீரென எழுந்தேன், எனக்குத் தெரியவில்லை நான் எங்கேயிருக்கிறேனென்று. முழுப்பிரக்ஞையுடன்தான் ஆனாலும் அது உதவவில்லை. நான் எங்கேயிருக்கிறேன்? நான் யார்?


நான் பின்னிருக்கையொன்றில் விழித்துக் கோணிப்பையொன்றில் சிக்கிக்கொண்ட பூனையெனத் திகிலில் தத்தளிக்கும் ஏதோவொன்று. நான் யார்?
கடைசியில் என்னிடம் திரும்பி வருகிறது வாழ்வு. என் பெயர் ஒரு தேவதையைப் போல எதிர்ப்படுகிறது. சுவர்களுக்கு வெளியே எக்காளமொன்று சமிக்ஞையிடுகிறது முழக்கங்களை. (லியோனரா ஆலாபனையில் உள்ளதைப் போன்று) என்னை மீட்க வரும் காலடிகள் நீளமான படிக்கட்டில் சாதுர்யமாய் இறங்கிவருகின்றன. அது நான்தான்! அது நான்தான்!


இருந்தாலும் ஒளிரும் விளக்குகளுடன் போக்குவரத்து சறுக்கிக் கடக்கும் முக்கியச் சாலைக்குச் சில மீட்டர் தூரத்திலுள்ள மறதியின் நரகத்தில் நடந்த பதினைந்து நொடி இழுபறியை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

**



2) எனக்கு இங்கிருந்து எதுவும் தேவையில்லை
       -லாஸ்லோ கிரஸ்னஹோர்கய்




நான் அனைத்தையும் இங்கேயே விட்டுவிடுவேன்: பள்ளத்தாக்குகளையும், சிகரங்களையும், பாதைகளையும், தோட்டத்துக் குருவிகளையும் நான் இங்கேயே விட்டுவிடுவேன், திறப்புத்திருகிகளையும், அருட்தந்தைகளையும், சுவர்க்கத்தையும் பூமியையும், வசந்தத்தையும் இலையுதிர்காலத்தையும், நான் இங்கேயே விட்டுவிடுவேன், வெளியேறும் வழிகளையும், சமையலறையின் சாயங்காலங்களையும், கரடுமுரடான கடைசிப் பார்வையையும், உங்களை நடுக்கமூட்டக்கூடிய நகரத்தை நோக்கிய சகல வழிகளையும், நான் இங்கேயே விட்டுவிடுவேன், நிலத்தின் மீது வீழ்கிற திண்ணிய மருள்மாலையொளியையும், ஈர்ப்புவிசையையும், நம்பிக்கையையும், வசீகரத்தையும், சமாதானத்தையும், நான் இங்கேயே விட்டுவிடுவேன், அன்புக்குரியவர்களையும் என்னை நேசிப்பவர்களையும், என்னைத் தொட்ட அனைத்தையும், என்னை அதிர்ச்சியூட்டிய அனைத்தையும், என்னை ஈர்த்தவற்றையும் மேம்படுத்தியவற்றையும், நான் இங்கேயே விட்டுவிடுவேன், சிறந்தவற்றையும், கிருபையுள்ளவற்றையும், மகிழ்ச்சியானவற்றையும், அரக்கத்தனமான அழகுள்ளவற்றையும், நான் இங்கேயே விட்டுவிடுவேன், அரும்பும் முளைப்பயிரையும், ஒவ்வொரு பிறப்பையும் இருப்பையும், நான் இங்கேயே விட்டுவிடுவேன், மந்திரங்களையும், புதிர்களையும், தூரங்களையும், தீராமைகளையும், அமரத்துவத்தின் போதையையும்; இந்த பூமியையும் இந்த நட்சத்திரங்களையும் இங்கேயே விட்டுவிடுவேன், ஏனென்றால் நான் இங்கிருந்து என்னுடன் எதையும் எடுத்துச்செல்லமாட்டேன், ஏனென்றால் நான் இனி நிகழப்போவதைப் பார்த்துவிட்டேன், ஆதலால் எனக்கு இங்கிருந்து எதுவும் தேவையில்லை.

**

குறிப்புகள்:


1) லியோனரா ஆலாபனை (Leonore Overture) - https://m.youtube.com/watch?v=TwwiBZh5Wys


2) மேலே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் தாமஸின் கவிதை, ராபர்ட் ஃபுல்டன் மொழிபெயர்த்த The Great Enigma: New Collected Poems-ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.