நாளையே நாளையே
Artist:Robert ParkeHarrison |
இத்தனை ஆண்டுகளில்
நிறையவே மறந்துவிட்டிருக்கிறேன்
ஒரு எவ்வனமான பொன்னிலக்காட்சியை
முன்னூறு வருஷங்களைப்
பதப்படுத்திவைத்திருக்கும் தாத்தாப் பாட்டியை
சில முயல் மேகங்களை
மறதியின் புற்றிலிருந்து நன்னயத்தின் பொறியை அடைவதற்குள்
அனைத்தும் மாறிவிடுகிறது
நெஞ்சுக்கூட்டில் தேய்வழக்காகிப்போன
அதே எழுபத்தியிரண்டு தடவைகள்
ஏகச்சராசரமும் ஏவலிலிருக்கும்
ஓர் இரவுவேளையில் நான் கண்டேன்:
தாராபதத்தினிடையே
நாம் மறந்துபோன சகலமும்
சுழிமின்னல்கூட்டங்களாக வெட்டிக்கொண்டிருப்பதை
அன்புள்ள நாளையே எவரும் இதை நம்பப்போவதில்லை
அதனால் உனக்கு கவலையா என்ன
நாளையே நாளையே
உம்மால் எனக்குள் ஊடுருவி வரமுடியாதா
இங்கே உம்மை தடுப்பார் எவருண்டு
என்னை சந்தோஷத்திற்கு கூட்டிப்போ
கரடுமுரடான பாதையில் பயணிக்கும் ஒற்றை வண்டியைப் போல
என்னை சந்தோஷத்திற்கு கூட்டிப்போ
(கரப்பானியம் தொகுப்பிலிருந்து)