நோவிகா டாடிச் கவிதைகள்

Artist: Louis Wain




1. பூனைகளின் முற்றுகை


இரவில் அவனைப் பூனையின்
இருமல் எழுப்பிவிட்டது.
படுக்கையிலிருந்து
புரண்டெழுந்து,
தன்னுடைய மேலங்கியை
அணிந்துகொண்டான்
ஏனென்றால் குளிராகயிருந்தது.
தன்னுடைய காலணியை
மாட்டிக்கொண்டான் ஏனென்றால்
வெறுங்காலுடனிருந்தான்.
மெதுவாகச் சன்னலை நோக்கி
முன்னேறி
திரைச்சீலையை விலக்கி
வெறித்துப்பார்த்தான்.
கீழே தெருவில்,
குடியரசு சதுக்கம் வரை
ஆயிரக்கணக்கான ஒளிரும்
தீப்பந்தங்கள்
ஆயிரமாயிரம் பூனைகள்
ஆயிரமாயிரம் உயர்ந்த வால்கள்
பொறுமையாக
திரைச்சீலையை மூடி
தனது வெதுவெதுப்பான
படுக்கைக்குத் திரும்பினான்
பின்பு கொட்டாவி விட்டபடி
முணுமுணுத்தான்:
   பூனைகளின் முற்றுகை

**

2.  இரவு கடக்கிறது


1
வறியவர்கள் நாம்,
ஆனால் நாம் எல்லோரும் மன்னர்கள்
நிறைநட்சத்திர வானத்தைக் கூர்ந்து பார்க்கும்போது. 

2
கும்பலின் இரைச்சல் வலுவற்று
வளர்கிறது
பட்டண சதுக்கத்திலும் நம் குருதியிலும்

3
தேவதூதனின் எக்காளத்தினுள்
மறுபடியும் நுழைகிறது குரல்.
மீண்டும் ஒருமுறை அதன் காலடியில் நரகம் எழுகிறது.

**

3.  கனவில் யாரோ என்னிடம் கிசுகிசுத்தார்


கனவில் யாரோ என்னிடம் கிசுகிசுத்தார்
இப்புவியில் மேலதிக தண்ணீர் இல்லை, குருதி மட்டுமே உள்ளது.
எப்போதும் செய்வதைப் போல
நாம் ஒவ்வொருவருடைய குருதியையும்
பருகிக்கொள்கிறோம்
இதைக்குறித்து இனிமேலும் கனவு காணயியலாது
நீரற்ற வசந்தங்களில்,
மரித்த மிருகங்கள் மற்றும் கடைசி மனிதர்களின் எலும்புகள்
குவிகின்றன
அவற்றின் கொறிக்கப்பட்ட மற்றும் உலர்ந்த எச்சங்களைச் சுற்றி
நம் முகங்களையுடைய இளம் கழுதைப்புலிகள்
வாய்க்குள்ளேயே சிரித்தபடி
சண்டையிட்டுக் கொள்கின்றன

**



நோவிகா டாடிச் (1949-2011):  செர்பியாவை சேர்ந்த முன்னணி கவிஞர். இருட்டாலும் கறுத்த சொப்பனங்களாலும் நிரம்பியது இவருடைய கவியுலகம் . பூனைகள் இரவில் முற்றுகையிடுவதையும் இயேசு கிறிஸ்து ஊசியைச் செருகிவைக்கிற பொருளாக மாறியிருப்பதையும் நவீன நகரத்தில் மறைந்திருக்கிற நரகத்தையும் ரத்தம் குடிக்கிற பூதங்களையும் இவருடைய கவிதைகளினூடாக நாம் காணமுடியும். இவருடைய கவிதை தொகுதிகள் Dark Things: Poems (2009) மற்றும் Night Mail: Selected Poems என்ற தலைப்பில் செர்பிய- அமெரிக்க கவிஞரான சார்லஸ் சிமிக்கின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது.


---
நன்றி: கல்குதிரை