ஜிப்பை திறத்தல் - எட்கர் கெரெட்






அது ஒரு முத்தத்திலிருந்துதான் ஆரம்பித்தது. பெரும்பாலும் அது முத்தத்திலிருந்துதான் தொடங்கும். நாக்குகள் இரண்டு மட்டும் தொட்டுக்கொண்டிருக்க எலாவும் சீகியும் கட்டிலில் நிர்வாணமாய் இருந்தனர். அப்போது அவள் ஏதோ குத்துவதுபோல உணர்ந்தாள். சீகி கேட்டான் “நான் உன்னைக் காயப்படுத்தி விட்டேனா?” அப்படி அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் இல்லையென்று தலையை ஆட்டினாள். பேசுவதைத் நீட்டித்தபடியே “உனக்கு ரத்தம் வருகிறது” என்றான். அவன் சொன்னதுபோலவே அவள் வாயிலிருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. “மன்னித்துவிடு” என்று சொல்லிவிட்டு  சமையலறையில் வெறிபிடித்தவனாய் எதையோ தேடினான். குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து ஐஸ் கட்டிகள் உறைந்திருந்த தட்டை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தான். “இதோ, இவற்றை வைத்துக்கொள்" என்றவாறு நடுங்கிய கைகளில் சில ஐஸ் கட்டிகளை எடுத்து அவளிடம் கொடுத்தான் . “உன் உதட்டில் வைத்துக்கொள். ரத்தம் நின்றுவிடும்.” இதுமாதிரியான விஷயங்களில் சீகி எப்போதுமே சரியாக நடந்துக் கொள்வான். பட்டாளத்தில் இருந்தபோது மருத்துவ உதவியாளனாய் இருந்தான். பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டியும்கூட. “மன்னித்துவிடு. கடித்துவிட்டேன் போல. உனக்குப் புரியும்தானே, கட்டுக்கடங்காத உணர்ச்சியில்தான் என்று.” “பரவா___லை" என்றபடி  அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது கீழ் உதட்டில் ஐஸ் கட்டி ஒட்டிக் கொண்டது. “அதெ____ம் ஒ____மில்லை" என்று அவள் சொல்வது ஒரு பொய்தான். ‎ஏனெனில் என்_______மோ நடந்து இரு______றது. உடனிருப்வபர் தினம் தினம் நம்மை இப்படிக் காயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. ஏதோ குத்துவதால் ரத்தம் கசிகிறது என்று உணர்ந்துவிட்ட பிறகும் கடித்துவிட்டதாகப் பொய் சொல்லுவதை ஏற்கவே முடியாது.


அதன்பிறகு, அவள் உதட்டில் வெட்டுக் காயம் இருந்ததால் சில நாட்களுக்கு அவர்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை. உடலில் அதிக உணர்ச்சிமிக்க இடம் உதடுகள்தான். அந்த நிகழ்வுக்குப் பிறகு முத்தம் கொடுக்க வாய்ப்பிருக்கும் போதெல்லாம் மிக கவனமாக இருந்துகொண்டனர். அவன் தன்னிடமிருந்து எதையோ மறைப்பதாக அவனிடம் சொல்ல நினைத்தாள். ஒரு இரவில் அவள் அதை உறுதிபடுத்தி விட்டாள். அவன் வாயை திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கையில் மெதுவாக நாக்குக்கடியில் விரல்களைவிட்டு பார்த்தாள். கண்டுபிடித்துவிட்டாள். அது ஒரு ஜிப். மிகச் சிறிய ஜிப். அவள் அதைத் திறந்தபோது சீகி ஒரு சிப்பியை போல முழுமையாகத் திறந்துகொண்டான். அதற்கு உள்ளே ஜுர்கன் இருந்தான். சீகியைப் போல அல்லாமல் ஜுர்கனுக்கு ஆட்டுத்தாடி இருந்தது. மிக கவனமாக அவனுடைய செவியின் பக்கவாட்டு மயிர்கள் மழிக்கப்பட்டு ஆண்குறி சுன்னத் செய்யப்படாமல் இருந்தது. அவன் தூங்கிக்கொண்டிருக்கையில் எலா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு அணக்கமும் இல்லாமல் சீகியை சுருட்டி மடித்துக் குப்பைத்தொட்டிக்குப் பின்னால் இருக்கும் சமையலறை அலமாரியில் மறைத்து வைத்தாள். அங்குதான் அவர்கள் குப்பை பைகளை வைப்பார்கள்.
ஜுர்கனுடனான வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக இல்லை. அவனுடன் உறவு வைத்துக்கொள்வது அலாதியாக இருந்தது. ஆனால் அவன் அதிகம் குடித்தான். அப்படி அதிகம் குடிக்கும்போதெல்லாம் அமளி செய்து எல்லா வகையான இக்கட்டான சூழலுக்குள்ளும் இட்டுச்சென்றுவிடுவான். இது எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பாவை விட்டுவிட்டு இங்கு வாழ வந்ததற்காக எலாவை குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குவதில் ஜுர்கன் விருப்பம் கொண்டிருந்தான். நாட்டில் ஏதாவது மோசமாக  நடந்துவிட்டால் அது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி தொலைக்காட்சியில் பார்த்த ஒன்றாக இருந்தாலும் சரி “உன்னுடைய நாடு போகிற போக்கைப் பார்" என்பான். அவன் பேசும் ஹிப்ரூ மொழி கேட்க சகிக்க இயலாததாய் இருந்தது. அவனுடைய ‘நீ’ எனும் சொல் ஒரு குற்றச்சாட்டாகவே எப்பொழுதும் ஒலித்தது. அவளுடைய பெற்றோருக்கு அவனைப் பிடிக்கவில்லை. சீகி அதிகம் பிரியத்துடனிருந்த எலாவின் அம்மா ஜுர்கனை வேற்றுஜாதிக்காரன் என்றே அழைத்தாள். அவளுடைய அப்பா ஜுர்கனிடம் வேலை குறித்து கேட்கும்போதெல்லாம் ஜுர்கன் சிரித்துக்கொண்டே பதில் சொல்வான். “வேலை என்பது மீசை மாதிரி திரு.ஷிவ்ரோ. அது பழைய பாணியாகி வெகு காலமாகிறது" அவனுடைய பதில் யாருக்கும் வேடிக்கையாகப்படவில்லை. குறிப்பாக இன்னமும் வேலை செய்து கொண்டிருந்த எலாவின் அப்பாவுக்கு.


கடைசியாக, ஜுர்கன் போய்விட்டான். டசல்டார்ஃபுக்கு திரும்பிச்சென்று அங்கு இசையமைத்துக் கொண்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தான். அவளுடன் வாழ்ந்த நாட்டில் அவனால் பாடகன் ஆக முடியவில்லை.  ஏனென்றால் தன்னுடைய உச்சரிப்பை அவர்கள் தனக்கெதிராக முன்வைத்ததாகவும், அங்குள்ளவர்கள் பாராபட்சமானவர்கள் என்றும், அவர்களுக்கு ஜெர்மனியர்களைப் பிடிப்பதில்லை என்றும் அவன் சொன்னான். ஜெர்மனியிலும்  அவனுடைய விந்தையான சங்கீதமும் ரசனைகேடுள்ள வரிகளும் அவனை அவர்களிடமிருந்து விலக்கிவைத்துவிடும் என்றே எலா நினைத்தாள். எலாவைப் குறித்துக் கூட அவன் ஒரு பாட்டு எழுதியிருந்தான். "பெண் தெய்வம்" என்பது அதன் தலைப்பு. பாடல் முழுக்கவே புணர்ச்சி குறித்தும், அலை தடுப்புகளின் மீது எப்படிப் புணரலாம் என்பது குறித்தும் இருந்தது. உனக்கு வந்தபோது, ​​அது 'ஒரு பாறையின் மீது அலை மோதி உடைவது போன்றது'.  இது அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த ஒரு வாசகம்.


ஜுர்கன் பிரிந்து சென்ற ஆறு மாதத்திற்குப் பிறகு குப்பை பைகளைத் தேடினாள். சீகியைத் கண்டுபிடித்தாள். அந்த ஜிப்பை திறந்தது தவறாகக்கூட இருக்கலாம் என்று அவள் நினைத்துக்கொண்டாள். இருக்கலாம்தான். அப்போதிருந்த சூழ்நிலையில் அவளால் அதை அவ்வளவு உறுதியாகச் சொல்லிவிட முடியவில்லை. அன்றைப் போலிருந்த மாலையில், அவள் பல் துலக்கி கொண்டிருக்கும்போது, ஏதோவொன்று குத்தியதால் ஏற்பட்ட வலியில், அந்த முத்தத்தை நினைத்துப் பார்த்தாள்.  நிறைய நீர் கொண்டு வாயைக் கொப்பளித்துவிட்டு கண்ணாடியைப் பார்த்தாள். அந்த வடு இன்னமும் இருந்தது. நெருங்கிப்போய் நுணுக்கமாகப் நோக்கினாள். அவளது நாக்கின் கீழும் சிறு ஜிப் ஒன்று இருப்பதைப் பார்த்தாள். தயக்கத்துடன் விரல்களால் நோண்டிப் பார்த்தாள். தான் உள்ளுக்குள் என்னவாக இருப்பேன் என கற்பனை செய்தாள். அது அவளுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. நடுவில் கொஞ்சம் கவலையையும்  ஏற்படுத்தியது —முக்கியமாக, தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளைக் கொண்ட கைகளைக் குறித்தும் வறண்ட மேனியை குறித்தும். எலா நினைத்துக் கொண்டாள், அவள் ரோஜா ஒன்றை பச்சை குத்தியிருக்கக்கூடும் என்று. அப்படியொன்று வேண்டும் என்கிற ஆவல் எலாவிடம் எப்போதும் இருந்தது. செய்துக்கொள்ளதான் தைரியமில்லை. அது மிகுந்த வலியை கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
                   000000


டசல்டார்ஃ - ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் கலைத்துறை சார்ந்த பிரசித்திபெற்ற நகரம்.


நன்றி: மணல்வீடு இதழ் எண் 36 (ஜனவரி 2019)