வாழ்க்கையற்ற வாழ்க்கை
.இவ்வறைக்குள்தான்
எங்களது எண்ணங்கள் எப்போதுமே
படிக்கப்படாத புத்தகங்களென அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
உள்ளேயிருந்து ஒருவன்
மிக அரிய மெனக்கெடலுடன்
வெளியே வந்து வாந்தியெடுத்தான்
நண்பா உனக்கு
பெண்பிள்ளையெனக் கோஷித்தோம்
பக்கத்து அறையில்
பெட்ரோல் நிலையமாக மாறிவிட்டவன் சைக்கிளுக்குள்
தன் குழாயைத் செருகிக்கொண்டிருந்தான்
இளையராஜா
அந்த நிலாவைத் தான் கையிலப் புடிச்சேன் எனச்சொல்ல
ரஹ்மான்
பார்க்காதே ஒருமாதிரி என்றார்
இதற்கு மத்தியில்
மொட்டைமாடி விளிம்பை கனவுகாணும் கால்களுடன்
சவரம் செய்யப்படாத முகமுடைய ஒருவன்
Fair and lovely- ஐ
தின்றுகொண்டிருப்பான்
எங்கோ
புயல் கரையை வெள்ளம் வீடுகளை
கடந்திருக்கும்
அவர்கள் இவ்வதிகாலையில்
என்னை
நம்ப நிர்பந்திக்கிறார்கள்
தம்பி, நீ சந்தோஷமாகத்தான் இருக்கிறாய்
நம்பு தம்பி என்னை நம்பமாட்டாயா
எனது சிகரெட் புகைகளுடன் தெருக்களினூடே செல்கிறேன்
வீட்டிற்கு அல்ல
விடுதிக்குத் திரும்பவேண்டும்
காதலுக்காக ஏமாற்றும் ஒருத்தி
தன் கையிலணிந்திருக்கும் தேள்கடிகாரத்தைப்
பார்க்கிறாள்
அது நீ ஏற்கனவே தவறிவிட்டாய் என்கிறது
இன்னொரு சவாரிக்கென ஒரு ஆட்டோ
நரகத்திற்குத் திரும்புகிறது
வாழ்க்கையற்ற வாழ்க்கையை இன்றும்
வழக்கம்போல வாழ்ந்தாக வேண்டும்.
**
[கரப்பானியம் தொகுப்பிலிருந்து]
Comments
Post a Comment