தாழக்கோல்

Artist: Jean Louis Corby


நெடிய காத்திருப்பிற்குப் பிறகு எவரும்
வரமளிக்கின்றனர்
அப்பார்ட்மென்ட் எனும் கிரகம் பூமியைவிட
வேகமாகச் சுழல்கிறது
சரிந்து கிடந்தால் ஆம்புலனஸ்
நிமிர்ந்து நடந்தால் வீடு
அற்புதங்கள் நிகழ்ந்தாலும் வியக்க ஒரு நாதியுமில்லை
வெங்காயங்களை மண்டைக்குள் மூட்டைக்கட்டி
வைத்திருக்கிறேன்
இன்னும் சிலரோ மண்டைக்குள் தேவாலயங்களை
மூட்டைக்கட்டி வைத்திருந்தனர்
உள்ளே யாரோ
முழங்காலிட்டு அழுதுகொண்டிருக்கிறார்
இது மூட்டைக்கட்டுதலின் நூற்றாண்டு
ஓர் உச்சரிப்பில்
வாழ்க்கை மனம்திரும்பிவிடாதா
சலிப்பிலிருந்து வியப்பிற்குச் செல்ல இருக்காதா ஒரு புஷ்பக விமானம்
அம்மாயத்தை நிகழ்த்தும் ஒரு சொல்லைத் தேடினேன்
எங்குமே இல்லை அது
ஒரு சிட்டுக்குருவியென என்றேனும்
ஒருநாள் அது வரக்கூடுமென்று
யன்னல்களைத் திறந்து
சும்மா இருந்தேன்
இப்போதெலாம்
அதனூடே ஒரு பூச்சி வருகிறது
சிலநேரம்
அதுவும் வருவதில்லை
ஆனால் வரும்போதெல்லாம் அப்பூச்சி
பாஷையற்ற பாஷைகளில் சிறிதுசிறிதாக உணர்த்தியது
நீ உயிரோடிருப்பதே
ஒரு மாயாசாலத்திற்கான
மந்திரம்தானென்று
*
(கரப்பானியம் தொகுப்பிலிருந்து)

Comments

Post a Comment