ஆக்டோவியா பாஸ் கவிதைகள்-1




Artist: Ronald Davis


1.சென்ற விடியல்

உனது பாதங்கள் என்னுடையதை தொட்டிருக்க
உனது கூந்தல் வனத்தில் தொலைந்துபோயிற்று.
தூங்கும்போது இரவைவிடப் பெரியதாகயிருக்கிறாய் நீ,
ஆனாலும் இவ்வறைக்குள் உனது கனவு பொருந்திக்கொள்கிறது.
நாம் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோம் !
வெளியே ஒரு டாக்ஸி அதனுடைய பேய்களின் சுமையோடு கடந்துசெல்கிறது.
விரையும் நதி எப்போதும் பின்னோக்கி ஓடுகிறது.
நாளை என்றொரு நாள் இருக்குமா?

**

2. நீரின் சாவி


ரிஷிகேஷத்திற்குப் பிறகு
கங்கை இன்னும் பசுமை.
சிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.
நாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.
மேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.
நீலவெளிகளில் வெண்பாறைகளும் கருமேகங்களும்.
நீ சொன்னாய்:
இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது
அன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்

••

*Le pays est plein de sources எனும் பிரெஞ்சு வாக்கியத்தை (The country is full of sources ) "இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது" என மொழியாக்கம் செய்திருக்கிறேன்.


3.தலைப்பிடப்படாதது


நாட்களின் கைகள்
திறக்கின்றன
மூன்று மேகங்களையும்
மற்றுமிந்த சில வார்த்தைகளையும்

**

4.மற்றவன்


அவன் தனக்கென ஒரு முகத்தைக் கண்டறிந்தான்
அதன் பின்னால், வாழ்ந்து, இறந்து,
பலமுறை உயிர்த்தெழுந்தான்
இன்றவன் முகத்தில்
அந்த முகத்தின் சுருக்கங்கள் இருக்கின்றன
அவனுடைய
முகச்சுருக்கங்களுக்கோ எந்த முகமும் இல்லை

**

5.உள்ளேயிருக்கும் ஒரு மரம்

என் தலையினுள் ஒரு மரம் வளர்ந்துள்ளது.
உள்ளே ஒரு மரம் வளர்ந்துள்ளது.
அதனுடைய  வேர்கள் ரத்த நாளங்கள்,
அதனுடைய கிளைகள் நரம்புகள்,
எண்ணங்கள் அதனுடைய சிக்கலான இலைத்தொகுதி
உன் சிறுபார்வை அதைத் தீப்பற்றச் செய்கிறது,
மேலும் அதனுடைய நிழலின் கனிகளே இரத்த ஆரஞ்சுகளும் அனற்கொழுந்தின் மாதுளைகளும்.
பொழுது புலர்கிறது
உடலின் இரவில்.
உள்ளே என் தலையினுள் அம்மரம் பேசுகிறது.
அருகே வா- உனக்குக் கேட்கிறதா?

**