பெருந்திரள் -செஸார் வயஹோ
ஒருவன் அவனை நோக்கிச் சென்று அவனிடம் சொன்னான்:
"இறந்து போகாதே; நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்!"
ஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது! இறந்து கொண்டிருந்தது.
மேலும் இருவர் அருகே வந்து அவனிடம் திரும்பத் திரும்ப சொன்னார்கள்:
"எங்களை விட்டுப் போகாதே! தைரியமாக இரு! வாழ்க்கைக்குத் திரும்பு! "
ஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது! இறந்து கொண்டிருந்தது.
இருபது பேர், நூறு பேர், ஆயிரம் பேர் பின் ஐந்து லட்சம் பேர் வந்து
இருபது பேர், நூறு பேர், ஆயிரம் பேர் பின் ஐந்து லட்சம் பேர் வந்து
கூச்சலிட்டனர்:
"மிக அதிகமாக நேசிக்கிறோம் மேலும் இதனால் மரணத்திற்கு எதிராக எதையும் செய்ய இயலாதே!"
ஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது! இறந்து கொண்டிருந்தது.
மில்லியன் கணக்கில் மக்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர், அனைவரும்
ஒரே விஷயத்தைப் பேசினர்: "சகோதரா இங்கேயே இரு!"
ஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது! இறந்து கொண்டிருந்தது.
அதன்பிறகு பூமியின் அத்தனை மனிதர்களும் அவனைச் சூழ்ந்திருந்தனர்
சடலம் அவர்களைத் துயரமாகப் பார்த்தது பிறகு மெதுவாக எழுந்து
தன்னுடைய கைகளை
முதல் மனிதனின் மீது போட்டபடி நடக்கத் தொடங்கியது..
செஸார் வயஹோ (1892- 1938)
பெரு நாட்டை சேர்ந்த கவிஞர்.நாடக ஆசிரியர். Los Heraldos Negros (1919), Trilce (1922) என இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதில் Trilce எனும் தொகுப்பு அதன் பிரத்யேக சர்ரியலிச தன்மையால் பரவலாகக் கவனம் பெற்றது. தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே ஊகித்த அவர் தன்னுடைய கவிதையொன்றில் "I will die in Paris on a rainy day" என எழுதிச்செல்கிறார். அதேபோலவே பாரிஸில் ஏப்ரல் 15, 1938ல் மழை பெய்யும் நாளில் மரணமடைந்தார். இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதையானது NERUDA AND VALLEJO: SELECTED POEMS எனும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.